"எனக்கு மட்டும் சக்தியிருந்தால் அப்பாவை பழையபடி மாற்றுவேன்": கண்ணீர் சிந்திய நயன்தாரா
அப்பா 13 வருடங்களாக இப்படித்தான் இருக்கிறார் என தந்தையின் உடல்நிலை குறித்து வேதனையுடன் பேசியிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
அப்பா 13 வருடங்களாக இப்படித்தான் இருக்கிறார் என தந்தையின் உடல்நிலை குறித்து வேதனையுடன் பேசியிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் நயன்தாரா எப்போதுமே தனது குடும்பத்தைப் பற்றி வெளியில் எதுவும் பேச மாட்டார். இந்நிலையில் நயன்தாரா ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் தனது அப்பாவைப் பற்றி பேசியுள்ளார். விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். இத்திரைப்படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது. சைக்கோ த்ரில்லரான படத்தில் நயன்தாரா சிபிஐ ஆஃபீஸர், பார்வை சவால் கொண்ட பெண் என இரு வேறு பாத்திரங்களில் தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நிலை நாட்டியிருக்கிறார். படத்தில் லாஜிக் விதிமீறல்கள் இருந்தாலும் கூட படத்தைப் பார்க்கலாம் அதுவும் நயனுக்காகவே நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.
இந்நிலையில், இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி விஜய் டிவியில் நடந்தது. திவ்யதர்ஷினி (டிடி) நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது அவர் பல்வேறு கேள்வி பதில்களை முன்வைக்க நயன்தாரா அழகாகவும் சுவாரஸ்யமாகவும் பேசினார். தனது அப்பா பற்றி பேசும்போது நயன்தாரா கண் கலங்கி அழுதார். நயன்தாரா பேசியதாவது: "என் குடும்பம் பற்றி நான் எங்கேயும் பேசியது இல்லை. அப்பா விமானப் படையில் இருந்தார். அன்பானவர். அவருக்குக் கடந்த 12, 13 ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லை. அப்பா இப்போது ஒரு குழந்தையாகிவிட்டார். அவரைக் குழந்தைபோல் பார்த்துக் கொள்கிறோம். என் சிறுவயதிலிருந்து அப்பா எனக்கு ஹீரோவாகத் தெரிந்தார். அவர் இப்போது ஒரு குழந்தை போல் இருப்பது எனக்குக் கவலையாக இருக்கிறது. அப்பா அவர் வேலையில் நல்ல ஈடுபாடு கொண்டவர்.
அவரைப் பற்றி எப்போதுமே மற்றவர்கள் நல்ல விஷயங்களைச் சொல்வார்கள். அப்பா நல்லவர். ஆனால் நான் நடிக்க ஆரம்பித்த 2,3 ஆண்டுகளிலேயே அப்பாவின் உடல்நிலை ரொம்ப மோசமாகிவிட்டது. அப்பா இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். எனக்கு மட்டும் ஒரு விஷயத்தை மாற்றி அமைக்கும் சக்தி இருந்தால் நான் எனது அப்பாவை நான் சிறு வயதில் இருந்தபோது எப்ப்டி இருந்தாரோ அப்படியே மாற்றிவிடுவேன்" இவ்வாறு நயன்தாரா பேசியுள்ளார். நெற்றிக்கண் படத்தில் நயன் தாராவுக்கு ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். அந்தப் பாடலில்,
'சுடரி, சுடரி, உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சிலநாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே'
என்ற வரிகள் வரும்.
அந்த வரி வாழ்க்கையில் எல்லா துன்பத்தையும் இதுவும் கடந்துபோகும் என ஏற்றுக்கொள்ள உதவும். அதே வார்த்தைகள் தந்தையைப் பற்றிய கவலையில் இருக்கும் நயன்தாராவுக்கும் பொருந்தும்.