Santhosh Narayanan: ஒரு பைசா கூட வருமானம் வரவில்லை.. வருத்தப்பட்ட சந்தோஷ் நாராயணன்!
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருந்தார். மேலும் பாடலை தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ ஆகிய இருவரும் பாடியிருந்தனர்.
தன்னுடைய இசையமைப்பில் வெளியான எஞ்சாயி எஞ்சாமி பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ஆல்பம் பாடல்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது எஞ்சாயி எஞ்சாமி பாடல் மிக முக்கியமானது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருந்தார். மேலும் பாடலை தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ ஆகிய இருவரும் பாடியிருந்தனர். இந்த பாடல் சர்வதேச அளவில் புகழ்பெற்றது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் கொண்டாடப்பட்ட எஞ்சாயி எஞ்சாமி பாடலை சிறப்பிக்கும் விதமாக ரோலிங்ஸ்டோன் என்ற இதழ் அட்டைப்பட கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ஆனால் அதில் அப்பாடலை எழுதிய தெருக்குரல் அறிவு படம் இடம் பெறாமல் பாடகி தீ மற்றும் ராப் பாடகர் ஷான் வின்சென்ட் டி ஆகியோரின் புகைப்படம் இடம் பெற்றது கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
இந்த விவகாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே கருத்துமோதல் ஏற்பட்டது. இருவரும் அதன்பின் எந்த படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை. ரோலிங்ஸ்டோன் இதழுக்கு இணையவாசிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அதன் டிஜிட்டல் பதிப்பில் தெருக்குரல் அறிவின் புகைப்படம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இப்பாடல் தெருக்குரல் அறிவு இல்லாமலே பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம் என பதிலடி கொடுத்திருந்தார்.
#EnjoyEnjaami 🥁🥁 pic.twitter.com/rxRaPcPsUR
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 5, 2024
இந்நிலையில் எஞ்சாயி எஞ்சாமி பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைய போகிறது. இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் இந்த பாடல் மூலம் எங்களுக்கு கிடைத்த வருமானம் என்ன என கேடால் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறோம். இதில் எனது யூட்யூப் வருமானமும் கூடுதலாக அந்த லேபிளுக்கே செல்கிறது.
எங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் மூலம் நான் சொந்தமாக ஸ்டூடியோ தொடங்க போகிறேன். தனி இசை கலைஞர்களுக்கென வெளிப்படை தன்மையுடன் கூடிய தளங்கள் தேவை. இதை பொதுத்தளத்தில் சொல்ல விரும்பியே வீடியோ வெளியிட்டேன். தனி இசை கலைஞர்கள் இனி கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டியது வந்து தீரும்” என தெரிவித்துள்ளார்.