HBD D. Imman : இவர் வந்த பிறகு இதெல்லாம் மாறுச்சு.. இசையமைப்பாளர் இமானின் பிறந்தநாள் இன்று..
HBD D. Imman : நவீன இசையாக இருந்தாலும் சரி மனதை வருடும் மெல்லிசையாக இருந்தாலும் சரி நாடித்துடிப்பிற்கு ஏற்றவாறு இசையமைக்கும் கலைஞனுக்கு பிறந்தநாள்..
தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களில் மிகவும் பிரபலமானவராக முன்னணி வரிசைகளில் இடம்பெற்றவர் டி. இமான். நவீன இசையாக இருந்தாலும் சரி மனதை வருடும் மெல்லிசையாக இருந்தாலும் சரி, நாடித்துடிப்பிற்கு ஏற்றவாறு தான் இசையமைக்கும் அனைத்து படங்களிலுமே ஹிட் பாடல்களை கொடுப்பது இன்று 41வது பிறந்தநாள் காணும் இமானின் தனி சிறப்பு.
இமானின் பாடல்கள் பல இன்றும் ரிங் டோனாக ஒலிப்பதை நம்மால் கேட்க முடிகிறது. அந்த அளவிற்கு மக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இமானின் இசை அமைந்துள்ளது. ஏராளமான துள்ளல் பாடல்களையும் மெலடி பாடல்களையும் கொடுத்து இருந்தாலும் அவரின் இசையில் என்றுமே மனதை வருடும் ஆல் டைம் மெலடி பாடல்கள் சிலவற்றை ஒரு தொகுப்பாக அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பார்க்கலாம்.
* 'ரம்மி' படத்தில் பிரசன்னா மற்றும் வந்தனா ஸ்ரீனிவாஸ் குரலில் ஒலித்த 'கூடமேல கூட வச்சு...' பாடல் இன்றும் என்றும் விருப்பமான பாடல்
* 'விஸ்வாசம்' படத்தில் சித் ஸ்ரீராம் மயக்கும் குரலில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே...' பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து தேசிய விருதையும் பெற்று தந்தது.
* 'டிக் டிக் டிக்' படத்தில் சித் ஸ்ரீராம் குரலில் ஒலித்த 'குறும்பா என் உயிரே நீ தான் டா...' பாடல் அப்பா மகன் உறவுக்கு மகுடம் சூட்டிய ஒரு பாடல்.
* 'சாட்டை' படத்தில் சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் அனிதா கார்த்திகேயன் குரலில் மனதை வருடிய 'அடி ராங்கி...' பாடல் இன்றும் கேட்கையில் தித்திக்கும்.
* 'மைனா' படத்தில் ஷான் பாடிய 'மைனா மைனா நெஞ்சுக்குள்ளே ஏதோ பண்ணுது...' பாடல் கேட்போரின் நெஞ்சையும் ஏதோ செய்யும் ரம்மியமான பாடல்.
* 'கும்கி' படத்தில் இடம் பெற்ற 'சொல்லிட்டாளே அவ காதல', 'அய்யய்யோ ஆனந்தமே...', 'ஒன்னும் புரியல...', 'நீ எப்போ புள்ள சொல்ல போற...' என அனைத்து மெலடி பாடல்களுமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
* 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் விஜய் யேசுதாஸ், பூஜா குரலில் ஒலித்த 'பாக்காத பாக்காத...' பாடல் காதலர்களின் கீதமாகவே மாறியது.
* 'ரோமியோ ஜூலியட்' படத்தில் விஷால் தத்லானி, சுனிதா சாரதி குரலில் ஒலித்த 'தூவானம் தூர தூர...' பாடல் சாரல் மழை போல காதுகளை குளிரவைத்து.
*'ரஜினி முருகன்' படத்தில் ஜித்தன் ராஜ், மஹாலக்ஷ்மி ஐயர் குரலில் இடம்பெற்ற 'உன் மேல ஒரு கண்ணு...' பாடல் காதுகளுக்கும் கண்களுக்கும் விருந்தாக அமைந்தது.
* 'போகன்' படத்தில் லுக்ஷ்மி சிவனேஸ்வரன் குரலில் ஒலித்த 'செந்தூரா செந்தூரா...' பாடல் ஒரு காதலியின் தாகத்தை வெளிப்படுத்திய ஒரு அசத்தலான ஹிட் பாடல்.
இது தவிர இன்னும் எண்ணற்ற மெலடி ஹிட்களை கொடுத்து அசத்திய இமானின் இசை மேலும் மேலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.