Vadivelu Re-Entry: எகிறும் எதிர்பார்ப்பு.. ரீ எண்ட்ரியில் மாஸ் காட்டுவாரா வடிவேலு?
வடிவேலு என்றாலே டயலாக் டெலிவரி மட்டுமல்ல பாடி லாங்குவேஜ். காமெடி காட்சியை சத்தமில்லாமல் பார்த்தாலும் சிரிப்பு வரும் அதுதான் வடிவேலுவின் ஸ்டைல்.
ஸ்மார்ட்போனை கையில் வைத்துக்கொண்டு சோஷியல் மீடியாவை விரல்களால் நகர்த்திச் செல்லும் ஆள் நீங்கள் என்றால் நிச்சயம் ஒருவரை தவிர்க்கவே முடியாது. அவர் வடிவேலு. மீம்ஸ், வீடியோ மீம்ஸ், காமெடி காட்சிகள் என வடிவேலு இல்லாத பிளாட்பார்மே இல்லை. திரையில் இடைவெளி விட்டு இருந்தாலும் எந்த புதுப்பட டீசர் வந்தாலும், பர்ஸ்ட் லுக் வந்தாலும் வடிவேலு வெர்ஷன் பார்த்தால்தான் மன நிம்மதியே வருகிறது. சோஷியல் மீடியாவில் மட்டுமல்ல, ஒரு ஆட்டோ ஸ்டேண்டில், ஒரு நண்பர்கள் கூட்டத்தில், குடும்பங்களின் கெட்டுக்கெதரில் என இரண்டு பேர் சேர்ந்தாலே அவர்களுக்கு இடையே வடிவேலுவின் டயலாக்கோ, காமெடியே இடம் பெற்றுவிடும். இதுதான் தமிழ்நாட்டின் நியதியாகவே ஆகிவிட்டது.
அப்படி தமிழ்நாட்டில் சோஷியல் மீடியாவின் ஹீரோவாக இருந்து வரும் வடிவேலு மீம் க்ரியேட்டர்களின் நாயகன் தான். என்னதான் சோஷியல் மீடியாவில் கொண்டாடப்பட்டு வந்தாலும் வடிவேலுவை திரையில் காணமுடியவில்லையே என்ற வருத்தம் இருந்தே வந்தது. அந்த வருத்தத்தைத்தான் சமீபத்திய செய்தி போக்கியது.
கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் பெரிதும் நடிக்காமல் இருந்த வடிவேலு, மீண்டும் சினிமாவில் தனது அடுத்த பயணத்திற்கு தயாராகி வருகிறார். இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தால் ஏற்பட்ட பிரச்னையால் வடிவேலுக்கு நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது. இதனால் அவர் பழையபடி நடிப்பதற்கு மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தனக்கான தடை நீக்கப்பட்டது குறித்து பேசிய வடிவேலு, இது எனக்கு மறுபிறவி எனக் கூறினார். வெறும் நிலத்தைக் கொடுத்தாலே விவசாயத்தை பார்க்கும் மீம் கிரியேட்டர்ஸ், உரத்தையும், தண்ணீரையும் சேர்த்து கொடுத்தால் சும்மா இருப்பார்களா? வடிவேலுவின் ரீ எண்ட்ரியை மீம்ஸ் போட்டு தெறிக்கவிட்டனர். வடிவேலுவின் ரீ என்ரியை இந்த தமிழ் சினிமா ரசிகர்கள் எவ்வளவு எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர் என இந்த இரண்டு நாட்களில் தெரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக இனி மற்ற காமெடி நடிகர்கள் எல்லாம் ஓரம் போவார்கள் என்றும், தலைவனின் ரீ எண்ட்ரி எனவும் பதிவிட்டு வருகின்றனர். வடிவேலு கூறியதைப் போல இது அவருக்கு மறுபிறவி தான் ஆனால் இன்றைய சினிமா ரசிகர்களை வடிவேலு கவர்வாரா என்பதையும் நாம் உற்றுநோக்க வேண்டும்.
வடிவேலு என்றாலே டயலாக் டெலிவரி மட்டுமல்ல பாடி லாங்குவேஜ். காமெடி காட்சியை சத்தமில்லாமல் பார்த்தாலும் சிரிப்பு வரும் அதுதான் வடிவேலுவின் ஸ்டைல். அந்த ஸ்டைலை இன்றும் வடிவேலு தொடர்ந்தாலே அவரால் தாக்குப்பிடிக்க முடியும் என்பது ஒருசாரரின் கருத்து. அதில் உண்மையும் உண்டு. இன்று சோஷியல் மீடியாவில் சுற்றும் வடிவேலு எல்லாமே பழைய வடிவேலு தான். அந்த வடிவேலுவைத் தான் இந்த தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கவும் செய்கின்றனர். 23ம் புலிகேசியில் அசரடித்த வடிவேலுவால் இந்திரலோகத்தில் நான் அழகப்பன், எலி, தெனாலிராமன் போன்ற படங்களில் ஜொலிக்க முடியவில்லை. அந்த சமயபத்தில் பழைய வடிவேலு வர வேண்டும் என பக்கம் பக்கமாய் ரைட்டப்புகள் கூட பறந்தன. அந்தளவுக்கு நகைச்சுவை என்பதை வடிவேலு பதம் பார்த்து இருந்தார்.
குறிப்பாக இன்றைய சினிமா ரசிகர்கள் சினிமாவையே பார்ட் பார்ட்டாக பிரித்து போடுகின்றனர். ஒரே காமெடி ட்ராக்கை ஒரு நடிகர் எடுத்தாலே இதுவெல்லாம் காமெடியா என கேள்விக்கேட்டு இவர் இப்படித்தான் என முத்திரைக் குத்தி ஓரம் அனுப்பிவிடுகின்றனர் இணையவாசிகள். சிலுத்து போய் சில்லறை வீசப்பட்ட இயக்குநர்கள் எல்லாம் இணையத்தில் டேமேஜ் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். இந்நிலையில் இப்போது சினிமா ரசிகர்கள் மற்றும் இணையவாசிகளின் எதிர்பார்ப்பில் வந்திருக்கிறார் வடிவேலு.
அந்த எதிர்ப்பார்ப்பையும், இன்றைய சினிமா ரசிகர்களையும் முழுதாக புரிந்துகொண்டு வடிவேலு களம் இறங்கினால் மட்டுமே அவரால் தாக்குப்பிடிக்க முடியும். இதைவிட்டு வடிவேலு நகர்ந்தார் என்றால் விட்ட இடத்தை பூர்த்தி செய்யாமல் பத்தோடு பதினொன்றாய் ஆகிவிடுவார் என்பதே உண்மை. நிச்சயம் வடிவேலு தன் மறுபிறவியை பயன்படுத்திக்கொண்டு மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார் என்பதே அனைவரின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும்.