என்ன நடக்குது இங்கே... பொங்கல் ரிலீஸ் படங்களை ஓங்கி உதைத்து முதல்நாளே வசூல் சாதனை படைத்த எம்.ஜி.ஆர்.,யின் ‛நினைத்ததை முடிப்பவன்’
Ninaithathai Mudippavan : போட்டி போட்டு டிவி சேனல்கள் புதிய படங்களை திரையிட்டன, போதாக்குறைக்கு சில புதிய படங்களும் தியேட்டரில் கோதாவில் நிற்க, அனைத்தையும் உடைத்திருக்கிறது நினைத்ததை முடிப்பவன்.
தீபாவளி, பொங்கல் எதுவாகினும் அது ரிலீஸ் படங்களோடு என்கிற அளவிற்கு தலைமுறை மாற்றம் ஏற்பட்டுவிட்டது. யார் கண் பட்டதோ, கொரோனா வந்ததில் இருந்து தீபாவளி, பொங்கல், புத்தாண்டு ரிலீஸ் படங்கள் என்கிற கான்ஸ்செப்ட் இல்லாமல் போய்விட்டது. பண்டிகைகளை கொண்டாடினாலே பெரிய விசயம் என்று ஆகிவிட்டது.
முன்பு ஒரு ஆண்டில் தீபாவளிக்கு வெளியிட தயாராக இருந்து, பின்னர் மே 1 என்று கிசுகிசுக்கப்பட்டு, அதன் பின் ஒரு வழியாக 2022 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிருந்த வலிமை கூட டேட் தள்ளிப்போகிறது. ஒமிக்ரான் தீவிரத்தால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதும், அதற்கு முக்கிய காரணம். சரி, வலிமை, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் பொங்கல் ரேஸில் வாபஸ் வாங்கினாலும், அந்த படங்களால் தியேட்டர் கிடைக்காமல் காத்திருந்த பல படங்கள் , இந்த பொங்கலுக்கு வெளியாகியுள்ளன.
கொஞ்சம் ரிஸ்க் தான், என்றாலும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தாவிட்டால், தியேட்டர் கிடைக்காது என்கிற நிதர்சனத்தோடு அவர்கள் அந்த ரிஸ்க்கை எடுத்திருக்கிறார்கள். இன்னும் சில படங்கள், 50 சதவீதம் இருக்கை நிறைந்தாலே போதும் என்கிற மனநிலையில் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. அவற்றின் வசூல் என்ன? தேறுமா தேறாதா என்கிற மில்லியன் டாலர் கேள்வியை, அவற்றிக்கான ரிவியூ பார்க்கும் பாது உணர முடிகிறது,
இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், 47 ஆண்டுகளுக்குப் முன் வெளியாகி, அதன் பின் 100 முறைக்கு மேல் அடுத்தடுத்து திரையிடப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,-யின் நினைத்ததை முடிப்பவன் திரைப்படம், நேற்று மறுதிரையிடப்பட்டு, 25 ஆயிரம் ரூபாய் வசூல் ஆகியுள்ளது. அதாவது கால் லட்சம். என்னடா இது.... இது எங்கே...? என்று தானே ஆச்சரியப்படுகிறீர்கள்.
வேறு எங்கு சினிமாவின் தலைநகரான மதுரையில் தான். மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பெரும்பாலும் பழைய திரைப்படங்கள் தான் திரையிடப்படும். அதற்காகவே தனி ரசிகர் கூட்டமும் வரும். பொங்கல் ரிலீஸ் படங்களை தியேட்டர்கள் எல்லாம் திரையிட்டுக் கொண்டிருக்க, வழக்கம் போல எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் எம்.ஜி.ஆர்., நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தை பொங்கல் ரீரிலிஸாக திரையிட்டது மதுரை சென்ட்ரல் தியேட்டர்.
போட்டி போட்டு டிவி சேனல்கள் புதிய படங்களை திரையிட்டன, போதாக்குறைக்கு சில புதிய படங்களும் தியேட்டரில் கோதாவில் நின்றன. ஆனால் இவை அனைத்தையும் உடைத்து, முதல் நாளில் 25 ஆயிரம் ரூபாய் வசூல் பார்த்துள்ளது நினைத்ததை முடித்தவன் திரைப்படம். நேற்று மாலை காட்சியில் மட்டும் 12 ஆயிரம் ரூபாய் வசூல் ஆகியுள்ளது அந்த படம். இந்த வசூலை பிற பொங்கல் படங்கள் பெற்றிருக்குமா என்கிற சந்தேகத்தை எழுப்புகின்றனர் சினிமா ரசிகர்கள். காரணம், கட்டுப்பாடுகளும், வீட்டில் கட்டிப் போட வைத்த டிவி நிகழ்ச்சிகளும் தான் காரணம். ஆனால், அதையும் உடைத்து வசூலை குவித்திருக்கிறது நினைத்ததை முடிப்பவன்.
மதுரையில் எம்.ஜி.ஆர்.,க்கு என்று ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இப்போதும் இருக்கிறது. இவர்கள் கட்சி சாராதவர்கள். ஆனால் எம்ஜிஆர்.,யை சார்ந்தவர்கள். எம்.ஜி.ஆர்., படங்களை வெறியோடு பார்ப்பவர்கள். 47 ஆண்டுகளுக்கு முன் வெளியான படத்தை இன்றும் முண்டியடித்து பார்க்கிறார்கள் என்றால், அவர்களின் வெறியை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
பிற தியேட்டர்களபை் போன்று சென்ட்ரல் தியேட்டரில் டிக்கெட் விலை அதிகமில்லை. 40 ரூபாய் அளவிற்கு தான் டிக்கெட் விற்கப்பட்டிருக்கும். அப்படி பார்க்கும் போது, முதல்நாள் வசூலை ஒப்பிடும் போது, சுமார் 650 பேர் நினைத்ததை முடிப்பவர் படத்தை பார்த்துள்ளனர். அதாவது ஒரு காட்சிக்கு 160 பேர் வீதம் சராசரியாக அந்தபடத்தை பார்த்துள்ளனர். இது முதல்நாள் வசூல் தான்.
‛‛நேற்று பண்டிகை காலம் என்பதால், எங்கள் சகோதரர்கள் சிலரால் குடும்பத்தாரின் பேச்சை தட்ட முடியாமல் படம் பார்க்க வர முடியாமல் போனது; இன்று எங்கள் நண்பர்கள் பலர் படம் பார்க்க வருவதாக கூறியுள்ளனர். எனவே நேற்றை விட இன்று கூட்டம் கூடும். வசூல் அள்ளும்... நாங்க எல்லாம் சின்ன பசங்க கிடையாது; எங்களுக்கு பேரன் பேத்திகள் இருக்காங்க... ஆனால் இன்னைக்கும் தலைவர் படம் பார்த்தா சந்தோசமா இருக்கும். அதனால் தான் தலைவர் படம் போட்டா... கிளம்பி வந்திடுவோம். எங்களால் என்ன முடியுமா... அந்த அளவுக்கு உற்சாகப்படுத்தி, நாங்களும் உற்சாகம் ஆவோம்,’’ என்றார் படத்தை பார்த்த குமார் என்பவர்.
எம்.ஜி.ஆர்., படம் என்று, எப்போது திரையிட்டாலும் இவர்களுக்கு FDFS(ஃபர்ஸ்ட் டே... ஃபர்ஸ்ட் ஷோ) அனுபவம் தான். இவர்கள் பழையவர்கள் தான்... ஆனால், பேனர் முன் நின்று கை தட்டி மகிழ்வது, கோஷம் போடுவது, விசில் அடித்து, காகிதத்தை பறக்கவிடுவது என இவர்களின் ரசிப்பு இன்றும் புதுமையாகவே உள்ளது. எம்.ஜிஆர்., என்கிற நடிகர், தலைவர், சம்பாதித்ததும் இது மட்டும் தான்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்