Marvel: மார்வெலின் காங் தி கான்கரர் நடிகர் ஜொனதன் மேஜர் கைது... சரமாரி குற்றச்சாட்டு, நடந்தது என்ன?
மார்வெல் திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல நடிகரான ஜொனதன் மேஜர் கைது செய்யப்பட்டார்.
மார்வெல் திரைப்படங்களில் காங் தி கான்கரர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகரான ஜொனதன் மேஜர் கைது செய்யப்பட்டார். பெண் ஒருவரை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
நியூயார்க் நகரில் ஒரு பெண்ணிடம் இருந்து செல்போன் மூலம் கிடைத்த புகாரின் அடிப்படையில், அவர் அளித்த முகவரிக்கு சென்று ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அது பிரபல நடிகர் ஜொனதன் மேஜர் என தெரிய வந்துள்ளது. புகாரளித்த அந்த பெண்ணை குடும்ப தகராறில் ஜொனதன் கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார். இதில் கழுத்து மற்றும் தலையில் காயமடைந்த அந்த பெண்னை மீட்டு காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஜொனதன் கைது:
இதையடுத்து, 33 வயதான ஜொனதன் கழுத்தை நெரித்தல், தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். அதேநேரம், தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கும், ஜொனதனுக்கும் என்ன உறவு என்பது தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
”ஜொனதன் தவறு செய்யவில்லை”
உடனடியாக ஜொனதன் அவரது வழக்கறிஞர் மூலம் ஜாமினில் எடுக்கப்பட்டார். அதோடு, ஜொனதன் மேஜர் எந்த தவறும் இழைக்கவில்லை எனவும், அவரது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மார்வெலில் ஜொனதன் மேஜர்:
ஹாலிவுட் திரையுலகில் தற்போது மிக முக்கிய தவிர்க்க முடியாத நடிகராக ஜொனதன் மேஜர் உருவெடுத்துள்ளார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான கிரீட் -3 மற்றும் ஆண்ட்மேன் அண்ட் தி வாஸ்ப்: குவாண்டூமேனியா ஆகிய திரைப்படங்களிலும், அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. லோகி சீசன் 1 மூலம் மார்வெல் திரையுலகில், காங் தி கான்கரர் கதாப்பத்திரத்தில் ஜொனதன் மேஜர் அறிமுகமானார். அதைதொடர்ந்து, ஆண்ட்மேன் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திலும் வில்லனாக தோன்றினார்.
மார்வெலின் முக்கிய வில்லன் காங்:
மார்வெல் திரையுலகில் முதல் பத்து வருடங்களுக்கு, தானோஸ் எனும் கதாபாத்திரம் மிக முக்கிய வில்லனாக காட்டடப்பட்டது. அதைதொடர்ந்து தற்போது அந்த இடத்திற்கு காங் தி கான்கரர் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வர உள்ள மார்வெல் நிறுவனத்தின் பல திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களில் ஜொனதனின் காங் கதாபாத்திரம் இடம்பெறும் என கூறப்படுகிறது. குறிப்பாக லோகி சீசன் இரண்டிலும் காங் கதாபாத்திரம் முக்கிய பங்காற்றும் என தகவல் வெளியாகியுள்ளது.
தி காங் டைனஸ்டி:
தானோஸை கொண்டு மார்வெல் வழங்கிய அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு இணையாக, காங் கதாபாத்திரத்தை கொண்டு Avengers: The Kang Dynasty எனும் திரைப்படத்தை வரும் 2025ம் ஆண்டு மே 2ம் தேதி வெளியிட மார்வெல் திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ஜொனதன் மேஜர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இதுபோன்று வழக்கு மற்றும் பொதுவெளியில் சொன்ன கருத்துகளால் சிக்கிய சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை, மார்வெல் நிறுவனம் வெளியேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.