Bison collection : பைசன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா ! பத்தே நாளில் வசூலை அள்ளிடுச்சே!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் 10 நாளில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பார்க்கலாம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படம் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற பைசன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. பைசன் படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன
மாரி செல்வராஜின் 5 ஆவது வெற்றிப்படம் பைசன்
பா ரஞ்சித் தயாரிப்பில் தனது முதல் படமான பரியேறு பெருமாள் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். சாதிய பாகுபாடு குறித்து தமிழ் சினிமாவில் புதிய உரையாடலை தொடங்கி வைத்தது இப்படம். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்த கர்ணன் , வடிவேலு நடித்த மாமன்னன் , வாழை , தற்போது பைசன் என தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ் . நீலம் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள பைசன் படத்தில் துருவ் விக்ரம் , பசுபதி , லால் , அமீர் , ரஜிஷா விஜயன் , அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கல். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தியா சார்பாக ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி இப்படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். தென் மாவட்டங்களில் நிலவும் சாதிய வன்முறைகளையும் அவற்றை கடந்து கபடியில் சாதிக்க விரும்பு. நாயகனின் வாழ்க்கையை மிகவும் காத்திரமான காட்சிகளின் வழி மாரி செல்வராஜ் கதை சொல்லியிருக்கிறார் . சிறப்பான திரைக்கதை , நடிப்பு , இசை என அனைத்து தரப்பினரிடமும் கடந்த 10 நாட்களாக பாராட்டுக்களை குவித்து வருகிறது பைசன்.
10 நாள் வசூல்
மாரி செல்வராஜ் இயக்கிதிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம் பைசன் என்பது குறிப்பிடத் தக்கது. பைசன் திரைப்படம் ரூ 30 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. படம் வெளியான முதல் 5 நாட்களில் தமிழில் மட்டும் 35 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. தமிழ் தவிர்த்து தற்போது தெலுங்கிலும் பைசன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. 10 நாளில் பைசன் திரைப்படம் ரூ 41 கோடி வசூலித்துள்ளதாகவும் இதுவரை தயாரிப்பாளர்களுக்கு 17 சதவீதம் லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





















