Malik Movie | எடை குறைப்பு.. வாரிசு நடிகர்கள்.. 12 நிமிட ஒரே ஷாட்.. இது 'மாலிக்' டிகோட்!
நாயகன், வடசென்னை போன்ற படங்களில் தாக்கம் இருந்தாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது மாலிக்.

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஃபஹத் ஃபாசில். அசாத்திய நடிப்பு மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மலையாளத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாலிக் திரைப்படம் ஓடிடியில் சமீபத்தில் வெளியானது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது மாலிக். ஃபகத், நிமிஷா மற்றும் பிற நடிகர்கள் ஆகியோரின் தேர்ந்த நடிப்பால் ‘மாலிக்’ ஃபகத்திற்கு மற்றுமொரு வெற்றி படமாகவும் அமைந்துள்ளது.

நாயகன், வடசென்னை போன்ற படங்களில் தாக்கம் இருந்தாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது மாலிக். பொதுவாக மலையாளத்தில் பட்ஜெட் குறைவாக எடுக்கப்படும் படங்களை போல் அல்லாமல் வழக்கமானதை விட அதிக பட்ஜெட்டில் இது எடுக்கப்பட்டது. சி யூ சூன், ஜோஜி போன்ற பஹத்தின் படங்கள் ஓடிடியில் வெளியானாலும் அது ஓடிடிக்கென்றே உருவாக்கப்பட்ட திரைப்படங்கள். ஆனால் பிரம்மாண்டமாக தியேட்டர் கொண்டாட்டத்துக்காக எடுக்கப்பட்ட மாலிக்கும் ஓடிடிக்குள் வருவது ரசிகர்களை மட்டுமின்றி பஹத் பாசிலையும் சோர்வடைய வைத்தது தியேட்டரையே குறி வைத்து படப்பிடிப்பு நடந்தாலும் அதனை ஓடிடி நோக்கி தள்ளியது கொரோனா. இந்நிலையில் மாலிக் படத்தில் சில குறிப்பிடும்படியான தகவல்கள் உள்ளன. அது என்னவென்பது குறித்து பார்க்கலாம்
1.இப்படம் இருவேறான காலக்கட்டம் கொண்ட கதையம்சம் கொண்டதால் பஹத் தன் உடல்நிலையில் பெரிய வித்தியாசத்தை காட்ட வேண்டி இருந்தது. அதாவது 20 வயது இளைஞனாகவும், 57 வயது முதியவராகவும் நடிக்க வேண்டி இருந்தது. இதற்காக 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்தார் பஹத் பாசில்.

2.இப்படத்தில் வரும் கிராமம், மசூதி அனைத்துமே செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது

3.மாலிக் படத்தின் முதல் 12 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. கட் செய்யப்படாமல் வீட்டு வாசல், ஹால், அறை, படிக்கட்டு வழியாக மாடி, மீண்டும் வீடு என மீக நீண்ட காட்சியாகவே இது இருக்கும். லைட்டிங், வசனங்கள், போன்ற பல சிக்கல்கள் இதில் இருந்ததாக படக்குழு தெரிவித்தது. இது குறித்து தெரிவித்த இயக்குநர், நாயகன் சிறையில் இருப்பது பிரதானம் என்பதால் ஒரு சுதந்திரத்தை, ஒரு நீண்ட பயணத்தை குறிப்பிடும் விதமாக அந்தக்காட்சி அப்படி படமாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
4.படத்தில் ப்ரீடியாக நடித்துள்ள சனல் அமான் 17 வயது சிறுவனாக காட்டப்பட்டிருப்பார். ஆனால் அவருக்கு நிஜ வயது 35. இதற்காகவும் அவர் உடல் எடையைக் குறைத்து உருவத்தில் மாற்றத்தை கொண்டு வந்தார்.

5.இஸ்லாமிய தலைவராக வரும் சலீமின் இளம் வயது கதாபாத்திரத்தை அவரது சொந்த மகனான சந்துவே நடித்திருந்தார்.

6. பஹத்தின் அம்மாவாக வரும் ஜலஜாவின் இளம் வயது கதாபாத்திரத்தை அவரது சொந்த மகளான தேவி நடித்திருப்பார்.





















