Maamannan JiguJigu Rail: ஏ.ஆர். ரஹ்மான் க்யூட் நடனத்துடன் ‘மாமன்னன்’ படத்தின் இரண்டாவது பாடல்..! ஜிகு ஜிகு ரயில் பாடல் வெளியீடு!
முந்தைய பாடலான ராசாக்கண்ணு நடிகர் வடிவேலுவின் குரலில் அமைந்து ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது இந்தப் பாடல் ரஹ்மான் குரலில் அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடலான ஜிகு ஜிகு ரயில் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் மூலம் கோலிவுட் தாண்டியும் கவனமீர்த்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக உருவெடுத்துள்ளார் மாரி செல்வராஜ் .
அவரது இயக்கத்தில், உதயந்தி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் அடுத்தாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜிகு ஜிகு ரயில்’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. முந்தைய பாடலான ‘ராசாக்கண்ணு’ நடிகர் வடிவேலுவின் குரலில் அமைந்து ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது இந்தப் பாடல் ரஹ்மான் குரலில் அமைந்துள்ளது. நடன இயக்குநர் சாண்டியின் கொரியோகிராஃபியில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டைலான நடன அசைவுகளையும் இந்தப் பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.
யுகபாரதி பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், ஏற்கேனவே அறிவிக்கப்பட்டது போல் இப்பாடல் ‘ரெக்கே’ (Reggae) எனும் ஜமாய்க்கா இசை வடிவத்தில் அமைந்துள்ளது.
மேலும் “புழு துளையிட்ட பழத்தின் விதையாக குளிர்ந்த சூரியனை நோக்கியே நடந்து போகிறேன்” எனும் மாரி செல்வராஜின் கவிதையுடன் இந்தப் பாடல் தொடங்குகிறது. முந்தைய பாடலான ராசாக்கண்ணு “பசித்த மீனைத் தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்” எனும் மாரி செல்வராஜின் கவிதையுடன் இந்தப் பாடல் தொடங்கியது.
மேலும், வடிவேலு முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தில் பாடியுள்ள நிலையில், இப்பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளியது. குறிப்பாக யுகபாரதியின் பாடல் வரிகளும் வடிவேலுவின் கிராமிய மற்றும் உணர்வுப்பூர்வமான குரலும் இணைந்து இப்பாடலுக்கு பெரும் ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்நிலையில் ஜிகு ஜிகு ரயில் பாடல் குழந்தைகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான் நடனமாடுவது போலவும், உத்வேகம் அளிக்கும் வரிகளுடனும் அமைந்து வரவேற்பைப் பெற்று வருகிறது.
முன்னதாக ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய அரசியலைப் புரிந்துகொண்டு தன் உடன் இணைந்து பயணிப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனியார் ஊடகத்துக்கு அளித்த நேர்காணல்களில் தெரிவித்திருந்தார்.
நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இதுவே தன் கடைசி படம் என அறிவித்துவிட்டதால் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நடிகர் கமல்ஹாசன் இந்த விழாவுக்கு வருகை தருவார் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏப்ரல் மாத இறுதியில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன. இந்நிலையில் வரும் ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.