Lyricist Yugabharathi: வித்யாசாகரிடம் முதல் சந்திப்பே மோதல்தான்.. காதல் கவிஞர் யுகபாரதி சொன்ன பழைய கதை!!
யுகபாரதி ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார்.
யுகபாரதி ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார்.
காதல் பிசாசே, வசியக்காரி, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், தாவணி போட்ட போன்ற காதல் பாடல்களுக்கு வரி கொடுத்தவர் என்பது மட்டுமே நமக்கு அனைவருக்கும் தெரிந்தது.
ஆனால் அவர் அதையும் தாண்டி நல்ல பேச்சாளர். நல்ல அரசியல் விமர்சகம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அப்படியொரு மேடையில் அவர் வெளுத்து வாங்கிய பேச்சு தான் இது:
நான் இந்த புத்தகக் காட்சிக்குள் வரும் போது சிறுவர்கள் ஒரு மேடையில் யானோ அரசன், யானே கள்வன் எனப் பேசிக் கொண்டிருந்தனர். இந்த மண் அரசன் தவறு செய்தால் உடனே அவனை பழிக்கும் தட்டிக்கேட்கும் என்று நினைத்து வியந்தேன். ஆனால் உண்மையில் இன்று யானே அரசன், யானே கள்வன் என்று கொள்ளையடித்துச் சுத்தும் அரசியல்வாதிகளே இருக்கிறார்கள். நான் அரசியல் பேசவில்லை. இதை அரசியல் பேச்சாக நீங்க எடுத்துக் கொள்ளக்கூடாது. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்று என்பார்கள். அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டங்கள் எல்லாம் தமிழக அரசியல் எந்தப் பாதையில் செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வித்யாசாகர் பற்றிய ரகசியம்..
கவிஞர் யுகபாரதி அதிகமான பாடல்களை எழுதியதே இசையமைப்பாளர் வித்யாசாகருக்குத் தான். ஆனால் அவர்களின் முதல் சந்திப்பே மோதலில் தான் நடந்துள்ளது. அது பற்றி யுகபாரதி கூறுகையில், லிங்குசாமி என்னை வித்யாசாகரிடம் அழைத்துச் சென்றார். அவர் என்னுடைய கவிதை தொகுப்புகளை அசட்டை செய்தார். என்னுடைய பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடலை கிண்டல் செய்தார்.
ஒரு காதல் கடித பாடல் எழுதுங்கள் அதில் அன்புள்ள என்ற வார்த்தை மட்டும் வரவே கூடாது என்று சொல்லியனுப்பினார். நான் லிங்குசாமியிடம் அவர் நான் இந்தப் பாடலை எழுதக் கூடாது என நினைக்கிறார் என்று கூறினேன். ஆனால் லிங்கு என்னை சமாதானப்படுத்தினார். அவர் ஏதோ எதிர்பார்க்கிறார். நீ முயற்சி செய் என்றார். அப்போது நான் எழுதியதுதான் காதல் பிசாசே பாடல். அந்தப் பாடல் முழுவதும் நான் வித்யாசாகரை தான் திட்டியிருப்பேன். அதைப் படித்துவிட்டு என்னை வெகுவாகப் பாராட்டிய அவர் எனது எல்லா பாடல்களுக்கும் நீ தான் கவிஞர் என்றார்.
...காதல் பிசாசே காதல்
பிசாசே ஏதோ சௌக்கியம்
பரவாயில்லை காதல் பிசாசே
காதல் பிசாசே நானும்
அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை
தவிப்புகளும் பரவாயில்லை
கனவென்னை கொத்தி தின்றால்
பரவாயில்லை இரவுகளும்
பரவாயில்லை இம்சைகளும்
பரவாயில்லை இப்படியே
செத்துப் போனால் பரவாயில்லை...
இது தான் அந்தப் பாடல்.
என்னை கடிந்து கொண்டதால் தான் நான் அவ்வளவு சிறப்பாக எழுதினேன் என்று நான் நம்புகிறேன். நம் மீது அக்கறை உள்ளவர்கள் நம்மிடம் சொல்லும் வார்த்தைகளை நாம் சரியாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு வார்த்தையை நாம் என்னவாக புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் அடிப்படையான விஷயமே இருக்கிறது. அதை நாம் என்னவாக புரிந்து கொண்டு எதிர்வினையாற்றுகிறோம் என்பதில் தான் நம் வளர்ச்சியே இருக்கிறது.