Lokesh kanagaraj: ‛தளபதி 67 பற்றி கேட்காதீங்க...’ லோகேஷ் போட்ட முதல் கன்டிஷன்!
கலந்துரையாடல் தொடங்கும் முன்பே தளபதி 67 குறித்து எதுவும் கேட்க வேண்டாம். அதற்கான அப்டேட் பின்னர் வரும்.வேறு என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறினார் லோகேஷ்.
தமிழ் திரையுலகின் மாஸ் இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கே படங்கள் இயக்கி இருந்தாலும் எடுத்த நான்கு படங்களும் பிளாக்பஸ்டர்கள் தான்.அதிலும் இறுதியாக வெளியான விக்ரம் படம் பல கோடிகள் வசூலித்து வசூல் சாதனையும் படைத்திருந்தது.தன் படங்களில் லோகேஷ் அமைக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமாய் இருக்கும்.
மாஸ் எண்டர்டெயினர் படங்கள் கொடுப்பதே இவரது நோக்கமாய் இருந்தாலும், லோகேஷ் எடுக்கும் ஒவ்வொரு படங்களிலும் சமூக கருத்துக்களும் ஒருபுறம் ஒட்டிக்கொண்டே வருகிறது. மாநகரத்தில் ஆசிட் அட்டாக் மற்ற படங்களில் போதைப்பொருள் என சமூகத்தில் இருக்கும் தீமைகளை சுட்டிக்காட்டியும் வருகிறார். மாஸ்டர்,கைதி, விக்ரம் ஆகிய மூன்று படங்களும் போதைப் பழக்கத்திற்கு எதிரான மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களாக அமைந்திருந்தது.
'நோ' தளபதி 67 !
இன்று தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், கல்லூரி மாணவர்களிடம் கலந்துரையாடினார். கலந்துரையாடல் தொடங்கும் முன்பே தளபதி 67 குறித்து எதுவும் கேட்க வேண்டாம். அதற்கான அப்டேட் பின்னர் வரும்.வேறு என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறியிருக்கார் லோகேஷ்.
மாணவி ஒருவர் சயின்ஸ் பிக்சன் படம் எப்போது எடுக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு லோகேஷ் அறிவியல் சார்ந்து எனக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை வருங்காலத்தில் தெரிந்தால் எடுக்கலாம் என்று பதில் அளித்துள்ளார். மற்றொரு மாணவி பெண்களை மையப்படுத்தி ஏன் படங்கள் எடுக்கவில்லை… என்று கேட்க, அதற்காக வைக்கப்பட்ட கதாபாத்திரம் தான் ஏஜென்ட் டீனா என்று விக்ரம் படத்தின் மிகவும் முக்கிய கதாப்பாத்திரமான ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தை சுட்டிக்காட்டி உள்ளார் லோகேஷ்.
சமூக வலைத்தளங்களுக்கும் 'நோ' !
லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் தளபதி விஜய் உடன் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி, அதன் அப்டேட்காக அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அது குறித்து எதுவும் கேள்வி எழுப்ப வேண்டாம் என்று அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் லோகேஷ் தளபதி 67 குறித்து அப்டேட் கொடுப்பார் என்று ஆர்வமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் நேற்று இரவு இயக்குநர் லோகேஷ் திடிக்கிடும் அறிவிப்பு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அவர் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். லோகேஷின் அடுத்தடுத்த செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.