RIP Marimuthu : வில்லன் மட்டுமில்லை.. மாரிமுத்து பாசக்கார தந்தையும் கூட.. சுசீந்திரன் உருக்கம்..
பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்த மாரிமுத்து அன்பான ஒரு தந்தையாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்திருந்தார்

பெரும்பாலான படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் மாரிமுத்து . ஆனால் இயக்குநர் சுசீந்திரனின் கண்களுக்கு மட்டும் மகன் மீது பாசம் மிகுந்த ஒரு தந்தையாக அவர் தெரிந்திருக்கிறார்.
மாரிமுத்து
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அதிலும், குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலிவால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார்.
இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சீரியல் ஊழியர்கள் அருகில் இருந்த சூர்யா மருத்துவமனைக்கு மாரிமுத்துவை அழைத்துச்செல்ல, நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஒரு மணிநேரம் கழித்து அவரது சொந்த ஊரான மதுரை தேனி வருச நாட்டுக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள்.
நெகட்டிவ் கதாபாத்திரங்கள்
நடிகராக அறிமுகமாகிய யுத்தம் செய் முதல் கடைசியாக ஜெயிலர் படம்வரை மாரிமுத்து பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்திருக்கிறார். மக்களிடம் அவரை பிரபலமாக்கிய எதிர்நீச்சல் தொடரிலும் சிடுசிடுப்பான வெறுப்பு நிறைந்த ஒரு கதாபாத்திரமாகவே அவர் நடித்திருப்பார்.
பாசமான தந்தை
ஆனால் ஒரு படத்தில் மட்டும் மாரிமுத்து பாசமான தந்தை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஜீவா திரைப்படத்தில் விஷ்னு விஷாலில் தந்தையாக நடித்திருப்பார் மாரிமுத்து. தனது மனைவியை இழந்து, மகனை தனி ஆளாக வளர்த்து அவரது கதாபாத்திரத்தில் மிக உணர்ச்சிகரமான தருணங்களை கொடுத்திருப்பார்.
படத்தில் ஒரு காட்சி : தனக்கு அம்மா இல்லாததால் எப்போது தனது பக்கத்து வீட்டில் இருக்கும் அருள் பிரகாசம் ( சார்லீ ) வீட்டில் வளர்கிறான் ஜீவா. தனக்கு தேவையானதை எல்லாம் அருள் பிரகாசத்திடம் கேட்டு வாங்கிக் கொள்கிறான் ஜீவா. அதற்கான பணத்தை வீட்டிற்கு வந்ததும் ஜீவாவின் தந்தை ( மாரிமுத்து ) திருப்பிக் கொடுத்தனுப்புவார். ஒரு முறை கிரிக்கெட் விளையாடுவதை கைவிடச் சொல்லி ஜீவாவின் தந்தை சொல்ல அருள் பிரகாசம் ஜீவாவை ஆதரிக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பேச்சு வளர ஜீவாவின் அப்பா, ” என் மகனுக்கு என்ன தேவைன்னு எனக்கி தெரியும் நீங்க இதுல தலையிடாதீங்க “ என்று கோபமாக பேசிவிட்டு வெளியேச் செல்வார். அருள் பிரகாசம் மனமுடைந்து நிற்க பார்வையாளர்களாகிய நமக்கு இந்த காட்சி இன்னும் வாசலைப் பார்த்த மாதிரி காட்டப்படும். சென்ற அதே வேகத்தில் கண்ணில் கண்ணீர் சிந்த வரும் மாரிமுத்து அருள் பிரகாசத்திடம் “என்ன மன்னிச்சுடுங்க சார் , என் பையன் எங்க வீட்ல வளர்ந்ததைவிட உங்க வீட்ல வளர்ந்ததுதான் அதிகம் . உங்ககிட்ட நான் இப்படி பேசியிருக்கக்கூடாது” என்று அவரிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியில் நாம் வழக்கமாக பார்த்திராத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மாரிமுத்து.
சுசீந்திரன் எழுதிய மிகச் சிறந்த காட்சிகளில் ஒன்று. மகன் மீது அன்பு கொண்ட உணர்ச்சிகரமான ஒரு தந்தையாக இந்தப் படத்தில் மாரிமுத்து நடித்திருப்பார். துரதிஷ்டவசமாக அவரை அந்த மாதிரியான கதபாத்திரங்களில் பார்க்கமுடியாமல் போய்விட்டது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

