"விக்ரம் முதல் விஜய் சேதுபதி வரை" ரிலீசே ஆகாத பிரபலங்களின் படங்கள் இத்தனையா?
மதகஜராஜா படம் 12 வருடங்களுக்குப் பிறகு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், நீண்ட வருடங்களாக கிடப்பில் உள்ள பிரபலங்களின் படங்களை காணலாம்.
பொங்கல் வெளியீடாக தமிழில் வெளியாகும் படங்களில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது மதகஜராஜா. விஷால் நடித்துள்ள இந்த படம் 12 வருடங்களுக்குப் பிறகு திரைக்கு வருகிறது. இதன் காரணமாகவே இந்த படம் தனித்துவமாக ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது.
இதுபோல, தமிழில் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பிலே உள்ள திரைப்படங்களை கீழே காணலாம்.
துருவ நட்சத்திரம்:
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் விக்ரம். பன்முக கலைஞரான இவரது நடிப்பில் பிரபல இயக்குனர் கெளதம் மேனன் இயக்கியுள்ள படம் துருவ நட்சத்திரம். ஆக்ஷன் திரில்லர் படமான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு படம் ரிலீஸ் ஆகாமலே ஒத்திவைக்கப்பட்டது. நீண்ட வருடமாக ரிலீஸ் ஆகாத துருவ நட்சத்திரம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
அலாதீனின் அற்புத கேமரா:
மூடர்கூடம் படம் மூலமாக கோலிவுட்டில் கவனம் பெற்றவர் இயக்குனர் நவீன். இவர் நடித்து, இயக்கிய படம் அலாதீனின் அற்புத கேமரா. இந்த படம் 2019ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 ஆண்டுகளாக இந்த படம் ரிலீஸ் ஆகாமலே உள்ளது.
கர்ஜனை:
தமிழ் திரையுலகின் பிரபல நடிகை த்ரிஷா. நாயகியாக மட்டுமில்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கர்ஜனை. இந்த படம் இன்னும் திரையரங்கில் ரிலீசாகாமல் உள்ளது.
நரகாசூரன்:
துருவங்கள் பதினாறு படம் மூலமாக புகழ்பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நரகாசூரன். அரவிந்த் சாமி, ஸ்ரேயா நடித்துள்ள இந்த படம் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 8 ஆண்டுகளாகியும் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.
பார்ட்டி:
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு. சென்னை 28 படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் பார்ட்டி. ஜெய், சிவா, ஷாய், ஜெயராம், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படம் 5 ஆண்டுகளாகியும் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.
இடம் பொருள் ஏவல்:
சீனு ராமசாமி இயக்கத்தில் பிரபல நடிகர்களான விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2018ம் ஆண்டே இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை படம் ரிலீஸ் ஆகவில்லை.
சதுரங்க வேட்டை 2:
அரவிந்த் சாமி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் சதுரங்க வேட்டை 2. நிர்மல் குமார் இயக்கியுள்ள இந்த படம் கடந்த 2017ம் ஆண்டே படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஆனால், தற்போது வரை இந்த படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சர்வர் சுந்தரம்:
காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் ஆனந்த் பால்கி இயக்கிய படம் சர்வர் சுந்தரம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் இதுவரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது. முழுக்க காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
மன்னவன் வந்தானடி:
பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் மன்னவன் வந்தானடி. 2017ம் ஆண்டு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகிய நிலையில் அதன்பின்பு படம் பாதியிலே கைவிடப்பட்டது.
வா டீல்:
அருண் விஜய், கார்த்திகா நாயர், வம்சி கிருஷ்ணா நடிப்பில் உருவாகிய ஆக்ஷன் படம் வா டீல். ரத்னசிவா இயக்கத்தில் உருவாகிய இந்த படம் கடைசி வரை ரிலீஸ் ஆகாமல் தற்போது வரை உள்ளது.
பாக்சர்:
அருண் விஜய் நடிப்பில் விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகிய படம் பாக்சர். ரித்திகா சிங் நாயகியாக நடித்திருப்பார். இந்த படம் தற்போது வரை ரிலீஸ் ஆகாமலே உள்ளது. பிரபலங்களின் இந்த படங்கள் மட்டுமின்றி சிறிய பட்ஜெட் படங்கள் பலவும் இதுவரை ரிலீஸ் ஆகாமலே உள்ளது.