Bharathiraja : இயக்குநர் பாரதிராஜாவிற்கு உடல்நலக்குறைவா? வெளியான தகவலால் அதிர்ந்த ரசிகர்கள்..
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரும், இயக்குநர் இமயம் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பாரதிராஜா. திரைப்படங்கள் இயக்குவதில் இருந்து நீண்டகாலமாக ஒதுங்கியுள்ள பாரதிராஜா தற்போது நடிகராகவே பல படங்களில் வலம் வருகிறார்.
இந்த நிலையில், மதுரை சென்றிருந்த பாரதிராஜாவிற்கு மதுரை விமான நிலையத்தில் திடீரென மயக்கம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் பாரதிராஜா தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் பல மாறுபட்ட திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா, கடந்த சில காலமாக நடிப்பில் தீவிரமாக இயங்கி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 18-ந் தேதி வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் பிரகாஷ்ராஜின் அப்பாவாகவும், தனுஷின் தாத்தாவாகவும் பாரதிராஜா அசத்தலான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். அதேபோல, நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் சிவகார்த்திகேயனின் தாத்தாவாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
மேலும் படிக்க : SIIMA விருதுக்கு அறிமுகமாகும் அறிமுக நாயகன்.. விஜய், தனுஷ் பட்டியலில் இணைந்த 'தீதும் நன்றும்' ஹீரோ ராசு ரஞ்சித்!
தொடர்ந்து படப்பிடிப்பு, தனிப்பட்ட பயணங்கள் என்று கடுமையான அலைச்சல் காரணமாக பாரதிராஜாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 1941ம் ஆண்டு பிறந்த பாரதிராஜாவிற்கு தற்போது 81 வயதாகிறது. தேனியில் பிறந்த பாரதிராஜா 16 வயதினிலே படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். மத்திய அரசின் புகழ்பெற்ற பத்மஸ்ரீ விருது வென்றுள்ளார்.
தேசிய விருது, பிலிம்பேர் விருது என ஏராளமான விருதுகளை குவித்த பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, கிழக்குச்சீமையிலே, கல்லுக்குள் ஈரம் போன்றவை மண்ணின் மனம் வீசும் திரைப்படங்கள் என்பதால் கிராமத்து மண்வாசனையை திரையில் வீசவைத்த இயக்குனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக அவர் திகழ்கிறார். பாரதிராஜா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
பாரதிராஜா 2020ம் ஆண்டு மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தை இயக்கியிருந்தார். அதற்கு பின்னர் எந்த படத்தையும் அவர் இயக்கவில்லை. குரங்கு பொம்மை, படைவீரன், கென்னடி கிளப், ஈஸ்வரன், ராக்கி, குற்றம் குற்றமே ஆகிய படங்களிலும் பாரதிராஜா மாறுபட்ட யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
மேலும் படிக்க : பத்து வருஷமா எஞ்சாய் பண்ணிட்டு.. இப்படி சொல்லுவாங்களா..? MeToo-ஐ விமர்சித்து ரேகா நாயர் சர்ச்சை பேச்சு
மேலும் படிக்க : Salman Khan Somy Ali: சல்மான் பெண்களை அடிப்பவர்; கொண்டாடாதீர்கள்: இன்ஸ்டாவில் பகிர்ந்து டெலிட் செய்த முன்னாள் காதலி!