(Source: ECI/ABP News/ABP Majha)
''நான் பேச விரும்பவில்லை.. புரிந்துகொள்ளுங்கள்'' - டாக்டர் ரிலீஸ் பற்றி தயாரிப்பாளர் ட்வீட்..
டாக்டர் படத்தின் தயாரிப்பாளரான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் அறிக்கை ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் டாக்டர். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் புரொடெக்ஷன் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரித்தது. சீராகவே படப்பிடிப்பு நடந்து வந்தாலும் கடந்த வருட கொரோனாவால் இடைவெளி ஏற்பட்டது. மீண்டும் சில மாதங்களுக்கு பின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வெளியீட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டது. மார்ச் மாதம் படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. ஆனால் குறுக்கே வந்த தமிழக தேர்தலால் யோசித்த படக்குழு மறுபடி வெளியீட்டை தள்ளிவைத்தது.
இந்நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே திரையரங்குகளும் மூடப்பட்டன. எனவே டாக்டர் பட வேலைகள் முடிவடைந்திருந்தாலும் வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. இதற்கிடையே ரசிகர்கள் டாக்டர் படத்தின் அப்டேட் கேட்டு தொடர் பதிவுகளை பதிவு செய்கின்றனர். இந்த நிலையில் தான் இப்படி ஒரு நிச்சயமில்லாத தருணத்தில் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை அப்படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை விடுத்துள்ளார். தயாரிப்பாளரான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் அறிக்கை ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,
''தினமும் டாக்டர் படம் குறித்த அப்டேட்களை கேட்கிறீர்கள். முழுமையாக தயாரான ஒரு படத்தை கையில் வைத்துக்கொண்டு கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் அனைத்தையும் ஒரு தயாரிப்பாளராக தாங்கிக் கொண்டிருக்கிறேன். படம் நல்லமுறையில் ரிலீஸ் ஆக என்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். மற்றொரு பக்கம், கொரோனாவின் இரண்டாவது அலையில் சுற்றங்களையும், நண்பர்களையும் இழக்கிறேன். இப்படியான நிச்சயமில்லாத ஒரு நேரத்தில்‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வீட்டில் பாதுகாப்பாக இருந்து உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஒரு படத்தின் ரிலீஸைக் கொண்டாட ஒரு நாடாக நாம் மீண்டு வர வேண்டும்'' என தெரிவித்துள்ளார்
#Doctor #DoctorUpdate #StaySafe 🙏🏽 pic.twitter.com/FC1x0PJ4Kw
— KJR Studios (@kjr_studios) May 12, 2021
இதற்கிடையே படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்ற கருத்தும், தியேட்டர்தான் என்ற கருத்தும் படக்குழுவினர் இடையே பனிப்போரை உருவாக்கியுள்ளதாகவும் தெரிகிறது. படக்குழுவினர் தங்களுக்குள்ளான ட்விட்டர் கணக்குகளை அன்ஃபாலோ செய்ததாலும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். டாக்டர் படம் குறித்து கே.ஜே.ஆர் அறிக்கை விடுத்துள்ள நிலையில் சிவகார்த்திகேயன் தரப்பு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை