Pa.Ranjith - Keerthi Pandian: பா.ரஞ்சித் அரசியல் பேசுனா என்ன தப்பு? கீர்த்தி பாண்டியன் அதிரடி பேச்சு!
Keerthi Pandian : 'ப்ளூ ஸ்டார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன் அரசியல் பற்றி அதிரடியாக அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் மற்றும் நடிகர் அசோக் செல்வன் திருமணம் கடந்த ஆண்டு மிகவும் எளிமையாக நடைபெற்றது. இவர்கள் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தாலும், அவை அனைத்துக்கும் மிகவும் கண்ணியமாக பதிலடி கொடுத்து வந்தார் அசோக் செல்வன். திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவரின் படங்களில் மிகவும் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்த 'கண்ணகி' திரைப்படமும், அசோக் செல்வனின் 'சபாநாயகன்' திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
பா. ரஞ்சித் தயாரிப்பில் 'ப்ளூ ஸ்டார்' :
இந்நிலையில், நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பா. ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியன் 'ப்ளூ ஸ்டார்' திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இரட்டை ஹீரோ படமான இப்படத்தில் ஷாந்தனு மற்றொரு நாயகனாக நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், பிருத்விராஜன், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது.
இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி:
இந்நிலையில் 'ப்ளூ ஸ்டார்' இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தனர். அப்போது மேடையில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன் "இன்று இந்த இசை வெளியீட்டு விழா நடக்கும் இந்த முக்கியமான நாளில் அரக்கோணம் ஸ்டைலில் அறிவு எழுதிய பாடல் வரிகளை குறிப்பிட விரும்புகிறேன். காது மேல காசு போடு ராவண குலமே, மேல ஏறும் காலமாச்சு ஏறியாகணுமே..." என்ற பாடலின் வரிகளை குறிப்பிட்டு பேசி இருந்தார்.
அதிரடியான பதில்:
மேலும் அவர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது “பா. ரஞ்சித் படங்கள் பொதுவாக அரசியல் பேசுவது பற்றி இருக்கும். அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு “பா. ரஞ்சித் பெயர் வந்தாலே அரசியல் பேச ஆரம்பிச்சிட்டீங்களா என்று தான் கேட்கின்றனர். அவர் அரசியல் பேசினா என்ன தப்பு? நாம் அணியும் உடையில் இருந்து சாப்பிடும் சாப்பாடு, குடிக்கும் தண்ணீர் வரை அனைத்திலும் அரசியல் உள்ளது. அப்படி இருக்கையில் அரசியல் பற்றி பேசாமல் இருப்பதால் அது இல்லை என்ற அர்த்தம் கிடையாது. நீங்கள் அதை தவிர்க்கிறீர்கள் என்று தான் அர்த்தம்" என பதில் அளித்துள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.
கீர்த்தியின் இந்த அதிரடியாக பேச்சை கேட்ட பா. ரஞ்சித் 'என்ன மா கீர்த்தி... வேற லெவல்ல பேசிட்டே' என் சொல்ல அந்த அரங்கமே கைதட்டலால் நிறைந்தது.
கிரிக்கெட் சார்ந்த கதைக்களம்:
சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. காதல், குடும்பம், கிரிக்கெட் விளையாட்டால் இரு அணிகளுக்குள் ஏற்படும் மோதல் என அரக்கோணத்தில் நடக்கும் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அசோக் செல்வன் மற்றும் சாந்தனு இருவரும் எதிர் அணிகளாக வித்தியாசமான லுக்கில் நடித்துள்ளனர். இப்படம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.