நடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' படத்தின் இசை வெளியீட்டு விழா
அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிறிஸ்டினா கதிர்வேலன்' வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, 'பிக்பாஸ்' பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கிறிஸ்டினா கதிர்வேலன் இசை வெளியீட்டு விழா
அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், 'சில்மிஷம்' சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து காதல் கதையாக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரித்திருக்கிறார். மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் வீரப்பன் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
நவம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர்கள் எஸ். ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா ஆகியோர் படத்தின் இசையை வெளியிட, படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி பேசுகையில், ''இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் புதியவர்கள் என்பதால் அனுபவம் புதிதாக இருந்தது. தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பன் பேசுகையில் : "தமிழ் திரை உலகில் சமீபகாலமாக கிராமிய பின்னணியிலான காதல் கதைகள் வெளியாவது குறைவாக இருந்தது. அந்த குறையை கிறிஸ்டினா கதிர்வேலன் போக்கும் என நம்புகிறோம். இந்தப் படத்தின் கதை நம் வீட்டில் இயல்பாக நடக்கும் சம்பவங்களைப் போல் இருக்கும். ஆனால் வலி நிறைந்த யதார்த்தமானதாக இருக்கும். இதனை அடுத்த தலைமுறையினருக்கு எப்படி சொல்லப்பட வேண்டும் என்பதை இயக்குநர் அழகாக சொல்லி இருக்கிறார். இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி பேசுகையில் : ''இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் வெளியான குறும்படம் ஒன்றில் ஆறாண்டுகளுக்கு முன் பணியாற்றினேன். அதற்காக அவரிடம் இருந்து முதல்முறையாக 1500 ரூபாயை சம்பளமாக பெற்றுக் கொண்டேன். அப்போது நான் படம் இயக்கினால் நீங்கள்தான் ஒளிப்பதிவாளர் என வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டு காலம் கழித்து அவருடன் பயணித்து ஏராளமான லொகேஷன்களை பார்வையிட்டோம். மூன்று ஆண்டுகள் வரை இந்த பணி தொடர்ந்தது. அங்கு சென்று இந்தந்த காட்சிகளை இந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என விவாதித்தோம். படப்பிடிப்பில் சந்தோஷமாக பணியாற்றினோம். உச்சகட்ட காட்சியை படமாக்கும் போது எங்களுக்கும் எமோஷனலாக இருந்தது. படம் சிறப்பாக வந்திருப்பதாக நம்புகிறோம். இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ரகுநந்தன் அற்புதமாக பணியாற்றியிருக்கிறார்,'' என்றார்.
இயக்குநர் மைக்கேல் கே. ராஜா பேசுகையில் : ''சின்ன சின்ன படங்களை இயக்கி தான் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான இயக்குநர்கள் இங்கு வெற்றி பெற்று இருக்கிறார்கள். படத்தின் பாடல் காட்சிகள், முன்னோட்டத்தை பார்த்தவரை அனைத்து நடிகர்களும், நடிகைகளும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் நாயகனான கௌஷிக் ராம் நேரில் பார்க்கும்போது ஸ்மார்ட் ஆக இருக்கிறார். இவர் எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் திரையில் அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள். நாயகி பிரதீபாவும் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநரின் பெயர் அலெக்ஸ் பாண்டியன். அந்த பெயரிலேயே கம்பீரம் இருக்கிறது. படமும் அதே அளவு இருக்கும் என்று நம்புகிறோம். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. அதிலும் உருமி.. பாடல் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தியது. படம் வெற்றி பெற படத்தில் பணியாற்றிய படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்,'' என்றார்.
இயக்குநர் விஜய் ஸ்ரீ பேசுகையில் : ''கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். காரணம் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் என்னுடைய உதவியாளர். 'பவுடர்' படத்தில் அவர் என்னுடன் பணியாற்றும்போது தான் ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி அறிமுகமானார். அவர் நான் இயக்கிய 'ஹரா' படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். படத்திற்கு ஹீரோவாக ஒரு புதுமுகம் வேண்டும் என்று தேடிய போது 'ஹரா' படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த கௌஷிக் ராம் தேர்வானார்.
படத்தை உருவாக்கும் போது நிறைய சவால்கள் இருக்கும். அதனை இயக்குநர் அலெக்ஸ் எதிர்கொண்டார். இதற்கு அவரது பெயரில் இருக்கும் பாண்டியன் என்ற ஒரு நண்பர் உதவி புரிந்தார். அவர் தான் அலெக்ஸை இந்த மேடையில் அமர வைத்திருக்கிறார். அதனால் அலெக்ஸ் பாண்டியன் இருவரையும் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்,'' என்றார்.





















