Karthik Subbaraj: ஷங்கருக்கும் எனக்கும் இடையில் ஈகோ பிரச்னையா.. ‘கேம் சேஞ்சர்’ கதையை எழுதிய கார்த்திக் சுப்புராஜ் பளிச்!
இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து கேம் சேஞ்சர் படத்தில் இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றுவது குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
ஜிகர்தண்டா டபுள் எகஸ்
8 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தில், ரவுடியாக இருக்கும் பாபி சிம்ஹாவை வைத்து சித்தார்த் படம் இயக்குவது கதையாக இருந்தது. இப்படத்துக்காக பாபி சிம்ஹா தேசிய விருது வென்றார். கார்த்திக் சுப்புராஜின் திரைப் பயணத்தில் இப்படம் இன்று வரை மைல்கல்லாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எடுக்கப்பட்டுள்ளது. கார்த்தி சுப்பராஜே இயக்கியுள்ள இப்படத்தை, ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். முதல் பாகத்தின் ஹிட் காம்போவான சந்தோஷ் நாராயணன் தான் இப்படத்துக்கும் இசையமைத்துள்ளார்.
நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகை நிமிஷா சஜயன், ஷைனி சாக்கோ, நவீன் சந்திரா, பவா செல்லதுரை, இளவரசு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் ஈடுபட்டுள்ளார். ஜிகர்தண்டா படம் தவிர்த்து தன்னுடைய சினிமா பயணம் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். தற்போது ஷங்கர் இயக்க இருக்கும் கேம் சேஞ்சர் படம் குறித்தும் சில சுவாரஸ்யமானத் தகவல்களை பகிர்ந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
கேம் சேஞ்சர்
இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக இயக்க இருக்கும் படம் கேம் சேஞ்சர். இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். முழுக்க முழுக்க ஒரு அரசியல் கதையை தான் எழுதியதாகவும் அதை தனது உதவி இயக்குநர்களிடம் காட்டியபோது அவர்களுக்கும் இந்த கதை பிடித்திருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப்பெரிய ஸ்டார்களை வைத்து மட்டுமே எடுக்க முடியும் என்று தன்னுடைய உதவி இயக்குநர்கள் தெரிவித்துள்ளார்கள். அதே நேரத்தில் முழுக்க முழுக்க ஒரு அரசியல் படத்தை தான் எடுக்க இப்போது தயாராக இல்லை என்று தனக்கு தோன்றியதால் இந்தப் படத்தின் கதையை தான் ஷங்கரிடம் படிக்க கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஷங்கருக்கு இந்த கதை பிடித்திருந்ததாகவும் இதை அடிப்படையாக வைத்து அவர் இந்த கதையில் பல்வேறு மாற்றங்கள் செய்து மிக பிரம்மாண்டமான ஒரு கதையை உருவாக்கி இருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.
எனக்கு ஈகோ எல்லாம் இல்லை
ஒரு இயக்குநர் எழுத்தாளராக இருந்து இன்னொரு இயக்குநருடன் வேலை செய்வதில் தனக்கு ஏதாவது ஈகோ இருந்ததா என்கிற கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ் “ எனக்கு இதில் எந்த விதமான ஈகோவும் இல்லை...இதில் எனக்கு சந்தோஷன் தான்” என்று கூறியுள்ளார்.