22 ஆண்டுக்கு பின் வெளியான ‘ஆளவந்தான்’ - வெடி வெடித்துக் கொண்டாடிய கமல் ரசிகர்கள்
இரவு காட்சியை காண கமல் ரசிகர்கள் திரையரங்கு முன்பாக பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
கரூரில் 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரிலீசான கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம். வெடி வெடித்துக் கொண்டாடிய ரசிகர்கள்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான உலக நாயகன் கமல்ஹாசனின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றான ஆளவந்தான் திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியானது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ரவீனா டன்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
22 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தின் தயாரிப்பாளர் முயற்சியால் இத்திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் சாலையில் அமைந்துள்ள பொன் அமுதா திரையரங்கில் இத்திரைப்படம் ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது.
இரவு காட்சியை காண வந்த கமல் ரசிகர்கள் சிலர் திரையரங்கு முன்பாக பட்டாசு மற்றும் வான வெடிகள் வெடித்து "ஆளவந்தான்" திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டதை கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் கபிலா கார்த்திக், எல்ஐசி தணிகாசலம் உள்ளிட்ட கமல் ரசிகர்கள் பலர் பங்கேற்றனர்.