Indian 2: மே 29ல் காத்திருக்கும் காதல் பாடல்.. இந்தியன் 2 படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
இந்தியன் 2 படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தியன் 2 படத்தின் 2வது பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்பாடல் காதலை மையப்படுத்தியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிறார் சேனாபதி
1994 ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “இந்தியன்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் சமூகத்தில் நடக்கும் ஊழலுக்கு எதிரான சாட்டையை சுழற்றும் சுதந்திர போராட்ட தியாகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. அந்த காலத்தில் கமலின் இந்தியன் தாத்தா வேடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
A symphony is about to bloom! 🌸 The 2nd single from INDIAN-2, a Rockstar ANIRUDH musical, is dropping on May 29th. 🎼 Get ready to be swept away. ✨🤩#Indian2 🇮🇳 #Ulaganayagan @ikamalhaasan #Siddharth @Rakulpreet @shankarshanmugh @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/vN94292qt9
— Lyca Productions (@LycaProductions) May 27, 2024
இதனிடையே 30 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் 2ஆம் பாகம் வெளியாக உள்ளது. ஷங்கர் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, மாரி முத்து, மனோபாலா, நெடுமுடி வேணு, சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்டமாக நடக்கும் இசை வெளியீட்டு விழா
இந்தியன் 2 படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் கடந்த மே 22 ஆம் தேதி படத்தின் முதல் பாடலான “பாரா” வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பா.விஜய் எழுதிய இப்பாடலை அனிருத், ஸ்ருதிகா சாமுத்ராலா ஆகியோர் இணைந்து பாடினர். முழுக்க முழுக்க அனிருத் இசையில் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த பாடலை கேட்ட ரசிகர்கள் அதிசயித்து போயினர்.
இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் 2ஆம் பாடல் மே 29 ஆம் தேதி வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்பாடல் வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், இதன் போஸ்டரை பார்க்கும்போது காதல் பாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ சேனாபதியை (கமல்ஹாசன்) எதிர்பார்த்து மொத்த தமிழ் திரையுலகமும் காத்திருக்கிறது என்பதே உண்மை.