Thug Life Trailer: நீயா... நானா பார்த்துக்கலாம் வா! கர்ஜிக்கும் கமல் - சீரும் சிம்பு.. வெளியானது 'தக் லைஃப்' ட்ரைலர்!
உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் காம்போவில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்ப்பு நிலவுவது உண்டு. இவர் இயக்கத்தில் கடைசியாக 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இதை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க உள்ளதாக அறிவித்தார். 'நாயகன்' படத்தை தொடர்ந்து, பல வருடங்களுக்கு பின்னர் கமல் மற்றும் மணிரத்னம் இந்த படத்தில் இணைவதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
மேலும் இந்த படத்தில், கமல்ஹாசனுடன் இணைந்து, ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக கமல்ஹாசனுக்கு ஜோடியாக அபிராமி நடிக்க, சிலம்பரசன், த்ரிஷா, நாசர், சானியா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைத்துவிட்ட நிலையில் , ஜூன் 5ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

'தக் லைஃப்', படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் வெளியாகி சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த ட்ரைலரை வைத்து கதையை நெட்டிசன்கள் வழக்கம் போல் கணித்து கூற துவங்கி விட்டனர். " சிம்பு தன்னுடைய சிறு வயதிலேயே கமல் ஹாசன் உயிரை காப்பாற்றுகிறார். அதற்காக கமல் சிம்புவை தன்னுடைய பிள்ளையாக வளர்க்க, ஒரு கட்டத்தில் கமல் உள்ளே இருப்பதை நான் பார்த்து கொள்கிறேன், வெளியே அமர் பார்த்து கொள்வான் என கூறுவதில் தான் பிரச்சனையே துவங்குகிறது".
கமலின் இடத்தை சிம்பு பிடிக்க துடிக்கும் நிலையில், வளர்த்த கிடா மாரில் முட்டும் கதையாக சிம்புவே கமலுக்கு எதிரியாக மாறுகிறார். இந்த கேங் ஸ்டார் போராட்டத்தில் யார் ஜெயிக்கிறார்? என்பதே இந்த படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது. அதே போல் நாயகன் பட லுக்கிலும் கமல் தோன்றுவதால், இது நாயகன் பட கதையின் தொடர்ச்சியாக இருக்குமோ? என்கிற சந்தேகமும் எழுகிறது. அதே போல் இந்த படம் விக்ரம் படம் போல கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.





















