AjithKumar: ‘அஜித்தின் அமைதிக்கு காரணமும்.. ரீமேக் செய்ய ஆசைப்பட்ட கமல் படமும்’ - சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அஜித் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அஜித் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளது. பொதுவாக அஜித் அரிதாகவே நேர்காணல்களில் பங்கேற்பார். பொதுநிகழ்ச்சிகளிலும் அதிகம் தலைகாட்டாத அவர், இதற்கு முன்னால் அளித்த நேர்காணல்களில் இடம் பெற்ற சில கேள்விகளுக்கு அளித்த பதில்களை இங்கே காணலாம்.
கேள்வி: அஜித்குமார் என்ற பெயர் வட இந்திய பெயர் மாதிரி இருக்கே?
பதில்: அஜித்குமார் பெயர் வட இந்திய பெயர் தான் என்றாலும் நான் படிச்சி வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். அப்பா சென்னை தான். அம்மா வட இந்தியாவைச் சேர்ந்தவர் தான். அதனால் நான் தமிழன் தான். எந்த சந்தேகமும் வேண்டாம்.
கேள்வி: நீங்கள் சினிமாவில் வந்தது திட்டமிட்டதா? அல்லது ஏதேச்சையான நிகழ்வா?
இது நிச்சயம் ஏதேச்சையான நிகழ்வு தான். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தேன். அதேசமயம் மாடலிங் எனக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் நான் சினிமாவில் வருவேன் என நினைக்கவில்லை. 1991ல் ஈரோடுல தொழில் ஆரம்பிச்சேன். ஆனால் நஷ்டமாயிடுச்சி. அப்புறம் தான் ஆஃபர் வந்துச்சு. முதல்முதலா நடிச்ச படம் ஒரு தெலுங்கு படம். அந்த படத்தின் பெயர் பிரேம புஸ்தகம்
கேள்வி: நீங்க நடிச்ச முதல் தமிழ் படம் பற்றி?
பிரேம புஸ்தகம் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கமும், இயக்குநர் செல்வாவும் தமிழ் படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்தாங்க. அந்த படத்தோட பெயர் “அமராவதி”. அந்த படம் ரிலீஸான சமயத்துல நான் நிறைய வாய்ப்பு வரும்ன்னு எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு எதிர்பாராத விதமா விபத்து ஏற்பட்டு ஆபரேஷன் நடந்துச்சு. அதனால் நான் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் இருந்தேன். மீண்டும் பவித்ரா படத்தில் ரீ- எண்ட்ரீ கொடுத்தேன்.
கேள்வி : உங்கள் குடும்பம் பற்றி?
அப்பா, அம்மா, 3 பசங்க இதுதான் எங்கள் குடும்பம். நான் 2வது பையன். எனக்கு படிப்புல விருப்பம் இல்ல. 10வது வரை தான் படிச்சிருக்கேன்.
கேள்வி: உங்களை பொறுத்தவரை நடிப்பு என்பது எப்படி?
என்னை பொறுத்தவரை கஷ்டமான விஷயம் தான்.கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இன்னும் 2,3 படங்களுக்குப் பிறகு நான் சிறந்த நடிகர் ஆகலாம். இப்போதைக்கு இயக்குநர் என்ன கேட்கிறாரோ அதை செய்து கொண்டிருக்கிறேன்.
கேள்வி: சினிமா கேரியர்ல நீங்க கத்துக்கிட்ட விஷயம் நிறைய இருக்கா? நடிக்க வந்த புதுசுல இருந்து இப்ப வரை ஒரே விஷயத்தை தான் ஃபாலோ பண்றீங்களா?
நான் மனசுல பட்ட விஷயத்தை ஆரம்பத்தில் வெளிப்படையாக சொன்னேன். சினிமாவுல எல்லோரும் நண்பர்கள், ஒரே பேமிலி நினைச்சி அப்படி இருந்தேன். ஆனால் நிறைய அடிபட்டேன். இந்த இடம் வியாபாரம்ன்னு புரிஞ்சிது. அதனால் தான் கருத்து சொல்றதுல கட்டுப்பாடு விதிச்சிகிட்டேன். அஜித் அமைதி ஆகிட்டாரு, பாசிட்டிவா பேசுறாருன்னு நல்ல விதமா சொல்றாங்க. ஆனால் என்னை பொறுத்தவரை அது வருத்தமான விஷயம் தான்.
கேள்வி: பில்லா படம் மாதிரி வேற எந்த படத்தை ரீமேக் செய்யணும்ன்னு ஆசை?
எனக்கு கமல் நடிச்ச சகலகலா வல்லவன் படத்தை ரீமேக் செய்ய ஆசை. அதற்கு முதலில் கமலிடம் அனுமதி கேட்க வேண்டும்.