Shruti Chauhan Mrs Galaxy: ”பாலியல் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு உதவணும்” : அமெரிக்க அழகிப்போட்டியில் இந்திய விமானப்படை பெண்....!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற உள்ள மிஸஸ் கேலக்சி போட்டியில் இந்தியா சார்பில் விமானப்படையின் பெண் அதிகாரி பங்கேற்க உள்ளார்.
உலக அழகிகள் போட்டிகள் பல்வேறு வயதுப்பிரிவினருக்கும் இடையே, பல்வேறு ரகங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டுவருகிறது. இந்த வகைகளில் திருமணமான பெண்களுக்காக நடத்தப்படும் மிஸஸ் (திருமதி) உலக அழகிப் போட்டிகளும் நடத்தப்படுவதும் வழக்கம். இந்த போட்டிகளும் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
இந்த நிலையில், திருமணமான பெண்களுக்கான மிஸஸ் இந்தியா போட்டி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ருதி சவுகான் என்பவர் பங்கேற்றார். 38 வயதான அவர் இந்திய விமானப்பபடையின் போக்குவரத்து பிரிவு அதிகாரியாக உள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஷ்ருதி சவுகான், திருமணமான பெண்களுக்கான மிஸஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த நிலையில், அவருக்கு அமெரிக்காவில் உள்ள சிகோகாவில் நடைபெற உள்ள மிஸஸ் கேலக்சி போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் விரைவில் சிகாகோவில் நடைபெறும் பங்கேற்கும் அழகிப்போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இதுபற்றி ஷ்ருதி சவுகான் கூறும்போது, திருமணமானவர்களுக்கான அழகிப்போட்டியில் பங்கேற்குமாறு சக ஊழியர்கள் என்னை வற்புறுத்தினார்கள். ஆனால், அவர்கள் கூறியதை நான் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் போட்டியில் பங்கேற்பதற்கு என் பெயரை பதிவு செய்துவிட்டார்கள். அவர்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கைதான் அதற்கு காரணம். விமானப்படையில் பணியாற்றிக்கொண்டே அழகிப்போட்டியில் பங்கேற்ற முதல்நபர் நான்தான் என்று நினைக்கிறேன்.
விமானப்படை சார்பில் எனக்கு ஆதரவு கிடைத்தாலும், எனது போக்குவரத்து பைலட் பணி பாதிக்காதவாறு அழகிப்போட்டிக்கு தயாராவது பெரும் போராட்டமாக இருந்தது. எப்படியாவது இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற விரும்பினேன். வீட்டை நிர்வகித்தபடி, மகளையும் கவனித்துக்கொண்டு வேலையும் பார்த்துக்கொண்டு போட்டிக்கு தயாராவதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. ஆனால், அனைத்தையும் சமாளித்து போட்டியில் பங்கேற்றேன்.
மேலும், போட்டி நடப்பதற்கு ஒருவாரம் முன்புதான் வளைந்து நடப்பதற்கு பயிற்சி எடுத்தேன். தற்போது மிஸஸ் கேலக்ஸி போட்டியில் பங்கேற்க தயாராகி கொண்டிருக்கிறேன். இதற்காக உடற்கட்டமைப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஸ்பான்சர்கள் இல்லாமல் இந்த போட்டியில் பங்கேற்பது கடினமாக உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், போரில் உயிர்நீத்த படை வீரர்களின் குழந்தைகளுக்கும் உதவவேண்டும் என்பதே எனது ஆசை. மிஸஸ் இந்தியா உலக அழகிப்போட்டியில் வெற்றிபெற்ற பிறகு பல தரப்பிலிருந்தும் எனக்கு பாராட்டுகள் குவிந்தன. சமீபத்தில் மகாராஷ்ட்ரா பெண் சாதனையாளர் விருதும், பெண்களுக்கான அடையாள விருதும் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது”. இவ்வாறு அவர் கூறினார். ஷ்ருதி சவுகான் இந்திய விமானப்படையில் கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.