Indian 2 Intro: இந்தியனுக்கு சாவு கிடையாது; கம்பேக் கொடுக்கும் சேனாபதி - வெளியானது இந்தியன் 2வின் அறிமுக வீடியோ!
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி உள்ளது.
இந்தியன்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியானது இந்தியன் திரைப்படம். கமல்ஹாசன், மனிஷா கொய்லாரா, சுகன்யா, கெளண்டமணி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதுடன், வசூலையும் குவித்து தமிழ் சினிமாவின் பிரபல கமர்ஷியல் படமாக உருவெடுத்தது. கமல்ஹாசன் இப்படத்துக்காக தேசிய விருது வென்றார். தற்போது 27 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள் ஷங்கர் மற்றும் கமல்.
இந்தியன் 2
ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா, எஸ் ஜே சூரியா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
ரவிவர்மன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். இந்தியன் 2 படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மொத்தம் 7 வில்லன்களை எதிர்கொள்ள இருக்கிறார் என்பதே இந்தப் படத்தின் சிறப்பம்சம் . மேலும் இந்தப் படத்தில் கமலை இளைஞனாக காட்ட டீ-ஏஜிங் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இன்ர்ரோ வீடியோவை படக்குழு வெளியிட இருப்பதாக நேற்று அறிவித்திருந்தது.
இண்ட்ரோ வீடியோவை வெளியிடும் பிரபலங்கள்
தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் , இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோவை அந்தந்த மொழிகளில் உள்ள பிரபல நடிகர்கள் வெளியிட இருக்கிறார்கள். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியில் அமீர் கான், தெலுங்குவில் இயக்குநர் ராஜமெளலி, கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் உள்ளிட்டவர்கள் இந்தப் வீடியோவை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை புதுமையான முறையில் படக்குழு நேற்று நவம்பர் 2 ஆம் தேதி படக்குழு அறிவித்திருந்தது. இந்த அப்டேட்டில் அனைத்து ஸ்டார்களும் தங்கள் 90களின் ரெட்ரோ லுக்கில் தோற்றமளித்திருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் 2 - ஓர் அறிமுகம்
Vanakkam India 🙏🏻 INDIAN IS BACK 🫡
— Rajinikanth (@rajinikanth) November 3, 2023
Presenting INDIAN-2 AN INTRO 🤞🏻 https://t.co/GmyX0mfMd8#Indian2 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl @jeyamohanwriter @KabilanVai @Lakshmi10246013 @LycaProductions…
இந்நிலையில் படக்குழு அறிவித்தபடி இந்தியன் 2 இண்ட்ரோ வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியனுக்கு சாவே கிடையாது என இந்தியன் தாத்தா சேனாபதி குரலில் அறிமுகமாகும் வீடியோவில் கம்பேக் இந்தியன் என்ற குரல்கள் பலமாக எழும் கரகோஷம் இடம்பெற்றுள்ளது. மேலும் அனிருத்தின் பின்னணிப் பாடலும் காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
தனது மாஸ் இந்தியன் தாத்தா லுக்கில் கமல் இந்த வீடியோவில் அசத்தியிருக்கும் நிலையில், சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா ஆகியோர் இடம்பெற்று கவனமீர்த்துள்ளனர்.
இந்த வீடியோ நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இருவரது ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி லைக்ஸ் அள்ளி வருகிறது.