Kamalhaasan: இந்தியன் என்பது தான் என் அடையாளம்! சிவாஜி இல்லைன்னா... - கம்பீரமாக பேசிய கமல்ஹாசன்
தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்க கூடாது என்பதே என் எண்ணம் என்று இந்தியன் 2 இசைவெளியீட்டில் கமல் பேசியுள்ளார்.
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு நேற்று ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் , ஷங்கர் , அனிருத் , சிலம்பரசன், ரகுல் ப்ரீத் , காஜல் அகர்வால், நெல்சன் திலிப்குமார், லோகேஷ் கனகராஜ் , நாசர் , பாபி சிம்ஹா , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். இயக்குநர் ஷங்கர் , இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலர் இந்தியன் 2 படத்தைப் பற்றிய தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். இறுதியாக உலக நாயகன் கமல்ஹாசன் இந்த விழாவில் பேசினார். சினிமா அரசியல் என இரண்டும் கலந்து அமைந்தது கமலின் பேச்சு.
சிவாஜி இல்லை என்றால் நான் இல்லை
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய உலகநாயகன் கமல்ஹாசன் " எங்கிருந்து இந்த கதையை தொடங்குவது என்று தெரியவில்லை. இது ஒரு நீளமான கதை. இயக்குநர் ஷங்கர் முதலில் என்னிடம் வேறு ஒரு படத்தின் கதையை சொன்னார். நான் அப்போது அதை பண்ணவில்லை. பின் ஒரு படம் எடுத்துவிட்டு வந்து வேறு ஒரு கதை சொன்னார். அது நான் வைத்திருந்த கதை மாதிரியே இருந்தது என்று உடனே சிவாஜியிடம் சென்று சொன்னேன். சிவாஜிதான் என்னை ஷங்கர் படத்தில் நடிக்கச் சொன்னார். சிவாஜி சார் இல்லை என்றால் நான் இன்று இந்த மேடையில் இல்லை. எந்த மேடையிலும் இல்லை. அவர்தான் என்னை இந்தியன் படத்தில் அப்பா- மகன் என இரு வேடத்திலும் நடிக்கச் சொன்னார். ஷங்கரிடம் நான் அப்போது பார்த்த அதே ஷார்ப்னெஸை இப்போதும் என்னால் பார்க்க முடிந்தது. இந்த இசைவெளியீட்டிற்கு ஆன செலவு இந்தியன் முதல் பாகத்தின் பட்ஜெட்டைக் காட்டிலும் அதிகம். இந்த படத்துக்கு நடுவுல எக்கச்சக்க சோதனைகள் இருந்தது. அதை எல்லாம் கடந்து இன்னைக்கு இங்க வந்து நிக்குறதுல எனக்கு சந்தோஷம்" என்று கமல் பேசினார் .
இந்தியன் என்பதே என் அடையாளம்
தொடர்ந்து பேசிய கமல் " நான் தமிழன். நான் இந்தியன் என்பதே எனது அடையாளம். இங்க பிரிச்சு விளையாடலாம்னு யாராவது நினைச்சா அது இந்தியாவில் நடக்காது. யாதும் ஊரே யாவரும் கேளிர். நாம் எப்போதும் வந்தாரை வாழ வைப்போம். தமிழனுக்கு எப்போது அமைதிகாக்க வேண்டும் என்று தெரியும், எங்கே இருக்க வேண்டும் என்று தெரியும். தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்க கூடாது என்பதே என் எண்ணம் " என கமல் பேசியுள்ளார்.