"அமீர் செஞ்ச உதவிய சாகுறவரை மறக்கமாட்டேன்", பருத்திவீரன் சரோஜாம்மா சொன்ன மெல்ட்டிங் மொமெண்ட்
கார்த்தி கேட்டாரு என்கிட்ட, ஏதாவது உதவி வேணுமான்னு, அப்போ 'உதவிலாம் ஒன்னும் வேணாம்பா, நீ நடிக்குற படத்துல ஒரு சான்ஸ் கொடு, நடிச்சு அந்த ஊதியத்துல வாழ்ந்துக்குறேன்னு சொன்னேன்.
தமிழ் திரை உலகில் 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்திவீரன். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்திக் அவர்கள் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சாகருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் நடித்த பல நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அந்த திரைப்படத்தில் ஒரு பாடலில் சிறிய பகுதியை பாடி, ஒரு சில காட்சியிலும் நடித்தவர் மதுரை சரோஜாம்மா. இவர் பருத்திவீரன் தொடங்கி, கந்தசாமி, சுல்தான் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நாட்டுப்புற பாடகர் சரோஜாம்மா அவரது திரை பயணத்தை ஒரு நேர்காணலில் கூறுகிறார். அவர் பேசுகையில், "முதலில் என்னை இளையராஜா சாரோட மேனேஜர்தான் கூப்டாரு. அப்போ இளையராஜா சார பாக்க போனேன், என்ன பாத்து இளையராஜா எந்த ஊருனு கேட்டாரு, நான் சொந்த ஊர் மதுரை, இப்போ சென்னைலதான் இருக்கேன்னு சொன்னேன். நாட்டுப்புற பாட்டெல்லாம் பாடுவீங்களான்னு கேட்டாரு, பாடுவேன்ன்னு சொன்னேன். அப்போ அது எனக்கு பருத்திவீரன் படம்னு எல்லாம் தெரியாது. படினதும் டைரக்டர் அமீர் வந்தாரு. அவரு வந்து 'ஹே… சரோஜாம்மா, எங்க இங்க நிக்குற'ன்னு கேட்டாரு. இங்க ஒரு பாட்டு பாட கூப்டாங்க அதான் வந்தேன்'ன்னு சொன்னேன். என்ன பாட்டுன்னு கேட்டாரு. பாட்டு பேர சொன்னேன், 'அது என் படம்தான், நீயே நடிக்கணும் அந்த படத்துல'ன்னு சொன்னாரு. அப்படித்தான் பருத்திவீரன் படத்துல நடிச்சேன். அதுக்கு இயக்குனர் அமீர் சாருக்கு தான் நன்றி சொல்லணும். அவர் செஞ்ச உதவிய நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன்.
அதுக்கு அப்புறம் நெறைய படத்துல சின்ன சின்ன கேரக்டர் பண்ணேன். வேல் படத்துல நடிச்சேன், கந்தசாமி படத்துல நடிச்சேன், அப்படியே போய்க்கிட்டு இருந்துச்சு. ஆனா பருத்திவீரன் படத்துல நடிக்கும்போது கார்த்தி கேட்டாரு என்கிட்ட, ஏதாவது உதவி வேணுமான்னு, அப்போ 'உதவிலாம் ஒன்னும் வேணாம்பா, நீ நடிக்குற படத்துல ஒரு சான்ஸ் கொடு, நடிச்சு அந்த ஊதியத்துல வாழ்ந்துக்குறேன்னு சொன்னேன். சூப்பர்மான்னு சொல்லி தர்றேன்னு சொன்னாரு. அப்புறம் சுல்தான் படம் எடுக்கும்போது, பருத்திவீரன்ல நடிச்ச மதுரை சரோஜாம்மாதான் நடிக்கணும்ன்னு சொல்லி நடிக்க வச்சாரு. நெறைய நல்ல டயலாக் கொடுத்தாங்க, 40 நாள் அங்க இருந்தேன், நல்லா அம்மா மாதிரி பாத்துகிட்டாங்க. எனக்கு என்ன ஆசைன்னா சாகுறதுக்குள் ஒரே ஒரு பாட்டு முழுசா நான் பாடிடனும். அது சாகுறத்துக்குள்ள நடக்கணும்ன்னு நெனைக்குறேன் அவ்வளவுதான்." என்று கூறினார்.