Manobala Death: விடைபெற்றார் மனோபாலா.. திரையுலகினர், ரசிகர்கள் சூழ நடைபெற்ற இறுதி ஊர்வலம்..
உடல்நலக்குறைவால் உயிரிழந்த நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் உடல் இறுதிச்சடங்குகள் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது.
உடல்நலக்குறைவால் உயிரிழந்த நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் உடல் இறுதிச்சடங்குகள் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது.
மனோபாலா மரணம்
ஒல்லியான தேகம், வித்தியாசமான வசன உச்சரிப்பு என இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனோபாலா நடிகராக பரீட்சையமானார். ஆனால் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக புதிய வார்ப்புகள் படத்தில் இருந்து சில படங்கள் பணியாற்றிய மனோபாலா, ‘ஆகாய கங்கை’ படத்தின் மூலம் இயக்குநராக எண்ட்ரீ கொடுத்தார். தமிழ்சினிமாவில் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை வைத்து 20 படங்களை இயக்கியுள்ளார்.
தான் பணியாற்றிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மனோபாலா கே.எஸ்.ரவிக்குமாரின் வற்புறுத்தலின் காரணமாக நட்புக்காக படத்தின் மூலம் நடிகராக மாறினார். இதனைத் தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், சூர்யா, மாதவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
இப்படியான நிலையில் 69 வயதான மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்புகளில் தொடந்து கலந்து கொண்ட அவருக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சினையும் இருந்து வந்தது. இதற்காக கடந்த 15 நாட்களாக வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த மனோபாலாவுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இரங்கல் தெரிவித்த திரைபிரபலங்கள் - அரசியல் தலைவர்கள்
அவரது மரணம் திரைத்துறையினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் இரங்லை தெரிவித்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, நாசர், விஷால், கௌதம் கார்த்திக் தொடங்கி பல நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, சிவகுமார், ஆர்யா, மோகன், கவுண்டமணி, ராதாரவி, ஜெயபிரகாஷ், ரமேஷ் கண்ணா, நடிகைகள் கோவை சரளா, வித்யுலேகா, இயக்குநர்கள் பாக்யராஜ், மணிரத்னம், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஏ.ஆர். முருகதாஸ், சேரன், பேரரசு,லோகேஷ் கனகராஜ், ஷங்கர் அமைச்சர் உதயநிதி, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், கார்த்திக் ராஜா உள்ளிட்ட பலரும் மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம்
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த நடிகர் மனோபாலாவின் உடலுக்கு இன்று காலை இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு வளசரவாக்கம் மின்மயானத்தில் உடல் தகனமானது நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பங்கேற்றனர்.