Srikanth: மணிரத்னம் படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கவே மாட்டார் - இப்படி ஒரு சம்பவமா?
என்னுடைய படத்தை முடித்து விட்டு, ஒப்பந்தம் போட்டுள்ள இன்னொரு படத்தையும் முடித்து விட்டு தான் வேறொரு படத்தில் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் தெரிவித்தார்.
மணிரத்னம் என்னுடம் இணைந்து பணியாற்ற மாட்டேன் என சொல்லிவிட்டார் என்று நடிகர் ஸ்ரீகாந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் படத்தில் ஸ்ரீகாந்த்:
ரோஜாக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து பார்த்திபன் கனவு, வர்ணஜாலம், ஏப்ரல் மாதத்தில், போஸ், ஜூட், பம்பரக் கண்ணாலே, கனா கண்டேன், ஒருநாள் ஒரு கனவு, நண்பன், பாகன், சதுரங்கம், உயிர், மெர்க்குரி பூக்கள், சௌகார்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் எந்த படமும் சரியாக அமையவில்லை.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் மணிரத்னத்துக்கும், தனக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு பற்றி தெரிவித்துள்ளார். அதாவது, “மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்துக்காக என்னை ஸ்கிரீன் டெஸ்ட் பண்ணினார்கள். சூர்யா, சித்தார்த் இருவரின் கேரக்டர்களுக்காகவும் நடத்தப்பட்டது. நான் சித்தார்த் கேரக்டரில் நடிக்க விருப்பப்பட்டதால், என்னை அதில் ஓகே செய்தார்கள். ஷூட்டிங் ஆரம்பிக்கப்போகும் சமயத்தில், நான் மனசெல்லாம் படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மாட்டிக்கொண்டேன். என் முகமெல்லாம் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். மணிரத்னம் தரப்பில் இருந்து உடல்நிலை முன்னேற்றம் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
கோபத்தில் மணிரத்னம்:
நான் குணமடைந்து வருகிறேன் என தெரிந்ததும் மனசெல்லாம் பட தயாரிப்பாளர் கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டார். என்னுடைய படத்தை முடித்து விட்டு, ஒப்பந்தம் போட்டுள்ள இன்னொரு படத்தையும் முடித்து விட்டு தான் வேறொரு படத்தில் நடிக்க வேண்டும் என தெரிவித்தார். அது மணிரத்னம் படமாக இருந்தாலும் சரி, யார் படமாக இருந்தாலும் சரி என மிரட்டினார். நான் வேறு வழியில்லாமல் ஆய்த எழுத்து படத்துக்கு வாங்கின அட்வான்ஸை திரும்ப கொடுத்தேன். மணிரத்னத்துக்கு கோபம் வந்தது. இத்தனை நாட்கள் காந்திருந்து இந்த மாதிரி பண்ணுவது பெரிய தவறு. என்னை அவமானம் செய்வது மாதிரி. அதனால் இனிமேல் இவனுடன் நான் பணியாற்ற மாட்டேன் என கூறிவிட்டார் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
ஆய்த எழுத்து படம்
2004 ஆம் ஆண்டு வெளியான ஆய்த எழுத்து படத்தில் மாதவன், சூர்யா, சித்தார்த், திரிஷா, மீரா ஜாஸ்மின், ஈஷா தியோல், பாரதிராஜா என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.