HBD Devayani: கடைசி வரை நோ! சூர்யவம்சம் பாணியில் ராஜகுமாரனை திருமணம் செய்த தேவயானி!
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் உச்சநட்சத்திரமாக திகழ்ந்த தேவயானி, சூர்யவம்சம் பாணியில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் திரையுலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல ஹீரோயின்களை கண்டு வருகிறது. ஆனால், 90களில் வந்த ஹீரோயின்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இன்றும் உண்டு. அதற்கு காரணம் 90-களில் வந்த படங்கள் பெரும்பாலும் நல்ல திரைக்கதையுடன் குடும்ப பாங்கான படமாக இருந்தால், அதில் நடித்த ஹீரோயின்களும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்திலே பெரும்பாலும் நடித்தனர். அந்த வகையில் அப்போது ரசிகர்களின் இதயத்தில் குடி கொண்ட நாயகியாக இருந்தவர் தேவயானி. நடிகை தேவயானிக்கு இன்று 50வது பிறந்தநாள் ஆகும்.
தேவயானி:
சூர்யவம்சம் திரைப்படத்தில் எப்படி பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்வாரோ? அதேபோலதான் தனது சொந்த வாழ்க்கையிலும் இயக்குனர் ராஜகுமாரனையும் அவர் பல போராட்டங்களுக்கு பிறகே திருமணம் செய்தார். தொட்டா சிணுங்கி என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமான தேவயானி கல்லூரி வாசல் ஓரளவு அடையாளத்தை தர, காதல் கோட்டை படம் அவரை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது. அஜித்திற்கும், தேவயானிக்கும் அந்த படம் அவர்களது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
விஜயகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சரத்குமார், பிரபு, பார்த்திபன், விக்ரம், கார்த்தி, ராம்கி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து உச்சநட்சத்திர நடிகையாக உலா வந்தார். அந்த நேரத்தில் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக இருந்த ராஜகுமாரனுடன் சூர்யவம்சம் படத்தின்போது தேவயானிக்கு பழக்கம் ஏற்பட்டது.
சூர்யவம்சம் பாணியில் திருமணம்:
இதையடுத்து, 2000ம் ஆண்டு ராஜகுமாரன் இயக்குனராக முதன்முதலில் நீ வருவாய் என படத்தை இயக்கியிருந்தார். பார்த்திபன் கதாநாயனாகவும், அஜித் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்த அந்த படத்தில் நாயகியாக தேவயானி நடித்திருந்தார். அந்த படத்தின்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ராஜகுமாரனின் அடுத்த படமான விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்திலும் கதாநாயகியாக தேவயானியே நடித்திருந்தார். அந்த சமயத்தில் இவர்களது காதல் விவகாரம் இவர்களது இரண்டு வீடுகளுக்கும் தெரியவந்தது. புகழின் உச்சத்தில் இருந்த தேவயானி மும்பையைப் பூர்வீகமாக கொண்டவர். அவரது பெற்றோர் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய ராஜகுமாரனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவே இல்லை. ஈரோட்டைப் பூர்வீகமாக கொண்ட ராஜகுமாரன் வீட்டிலும் தேவயானியை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ளவில்லை.
திருத்தணியில் திருமணம்:
இதையடுத்து, ராஜகுமாரனுக்காக தேவயானி தனது வீட்டை விட்டு வெளியே வந்தார். நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக திருத்தணி முருகன் கோயிலில் 2001ம் ஆண்டு தேவயானி – ராஜகுமாரன் திருமணம் நடைபெற்றது. அப்போது, திரை வட்டாரத்தில் இவர்களது திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தை வளர்ப்பில் அச்ச உணர்வுடன் இருந்த ராஜகுமாரனுக்கு தேவயானி ஆறுதல் கூறினார். அதன்பின்பு, அவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற 2 குழந்தைகள் பிறந்தது. தற்போது, மிகவும் அமைதியாக சராசரி பெண் போல ஈரோட்டில் உள்ள அந்தியூரில் உள்ள வீட்டில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து பெரியளவில் ஒதுங்கி விட்டாலும், அவ்வப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: Yaar movie: பீதியில் திரையரங்கில் இருந்து ஓடிய மக்கள்.. 80களில் அலறவைத்த பேய் படம்.. எஸ்.தாணு சொன்ன தகவல்!
மேலும் படிக்க: Watch Video: எப்படி இருந்த பிரேம்ஜி இப்படி ஆகிட்டார்.. காதல் மனைவி பகிர்ந்த க்யூட் வீடியோ!