Harris Jayaraj: AI பயன்படுத்தி இறந்த பாடகர்களை ஏன் கொண்டு வர வேண்டும்? - ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி
சமூக வலைதளங்களில் ஹாரிஸ் மாம்ஸ் என்று ரசிகர்கள் அன்பாக அழைப்பது சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள ஜவகர் மில் மைதானத்தில் வருகின்ற 13ஆம் தேதி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், வருகின்ற 13-ஆம் தேதி ஜவகர் மில் மைதானத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் என்னோடு இணைந்து 16 பின்னணி பாடகர்கள் ஒரே இடத்தில் இணைந்து இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றார். வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளை போல சேலத்தில் நடைபெறுகிறது. 50, 60 காலகட்டங்களில் சேலம் சினிமா நகரமாக இருந்தது. அதன் பின்னர் தான் சென்னைக்கு சென்றது. அப்படிப்பட்ட சரித்திர புகழ்பெற்ற சேலத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவது தனக்கு பெருமையாக உள்ளது என்றார்.
சமூக வலைதளங்களில் இசையமைப்பவர்கள் உருவாகிறது குறித்த கேள்விக்கு, சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே இசையமைக்க முடியும் என்ற நிலை மாறி, திறமை இருந்தால் பாடல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு புகழ் பெறலாம். எனவே இது அருமையான ஒரு முன்னேற்றம் என்றார். இந்த இசை நிகழ்ச்சியை பார்த்து பத்து பேர் இசைக் கலைஞர்களாக மாற வேண்டும். சிறிய வயதில் நானும் இசை நிகழ்ச்சிக்கு சென்று அதை பார்த்த தான் இசையமைப்பாளராகியுள்ளேன். அதனால்தான் இன்று இசையமைப்பாளராக உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இசை நிகழ்ச்சியை பார்த்த ஒருவர் இசையமைப்பாளராக உருவெடுப்பார். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் இது போன்ற இன்ஸ்பிரேஷனையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இளையராஜாவிற்கு அரசு விழா எடுப்பது குறித்த கேள்விக்கு, இசையமைப்பாளராக மிகவும் பெருமையாக உள்ளது. ஒரு மூத்த இசையமைப்பாளருக்கு அங்கீகாரம் கிடைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கலைஞர்களை அவர்கள் இருக்கும்போதே புகழ வேண்டும் என்றார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இடம் இருந்து எப்போது ஆஸ்கர் விருது எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கு, வாழ்க்கை என்பது சுவாரசியமான பரிசு. அந்த நிகழ்வு நடக்கும் போது அது நடக்கும். இசை நிகழ்ச்சிக்கு மக்கள் வருவது மிகப்பெரிய விருது என்று கூறினார்.
சமூக வலைதளங்களில் ஹாரிஸ் மாம்ஸ் என்று ரசிகர்கள் அன்பாக அழைப்பது சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
எனது மகனிடம் நான்கு இயக்குனர்கள் கதை சொல்லி இருக்கிறார்கள். அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. சமீபத்தில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அவரது பாதையை நாம் மாற்றக்கூடாது.
ஹாரிஸ் சிம்பொனியின் எப்போது என்ற கேள்விக்கு, நான் சினிமாவிற்கு வந்தது தான் ஒரு விபத்து. எனது 14 வயதில் கிரீட்டிங் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்றேன். சிறிய வயதில் கிளாசிக் கிட்டாரில் எட்டாவது கிரேட். ஆசியாவிலேயே இளம் வயதில் இந்த பெருமையை அடைந்தது நான்தான். ஆனால் ஒரு சினிமா கலைஞராக நின்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் எது செய்தாலும் அதை மகிழ்ச்சியாக செய்கிறேன். அனைவரும் நம் செய்யும் வேலையை அனுபவித்து செய்ய வேண்டும் என்றார்.
செயற்கை நுண்ணறிவை நான் இதுவரை பயன்படுத்தவில்லை. பாடகர்கள் இல்லை என்றால் அதைப் பற்றி யோசிக்கலாம். பல பாடகர்கள் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றார்கள். திறமையான பாடகர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களை பயன்படுத்தாமல் இறந்த பாடகர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார். அவர்கள் கொண்டாடப்பட்டு இறந்துள்ளார்கள். அவர்களது குரலை செயற்கை நுண்ணறிவு மூலமாக கொண்டு வராமல் அவர்களது பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்களே மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றார்.

