GV PrakashKumar | 'ஆதலினால் காதல் செய்வீர்’.. வெப் சீரிஸ் டைட்டில் பாடலை பாடிய ஜிவி பிரகாஷ்குமார்.!
வெப் சீரிஸ் ஒன்றில் டைட்டில் பாடலை பாடுவது ஜி.வி.பிரகாஷின் கேரியரில் இதுதான் முதல்முறை.
இளம் இசையமைப்பாளராக அறிமுகமான நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது திரைப்படங்களில் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது வெப் சீரிஸ் டைட்டில் பாடலை பாடியுள்ளார்
திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் 'விகடன் டெலிவிஸ்டாஸ்' மற்றும் 'மோஷன் கன்டென்ட் குரூப்' இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் தான் 'ஆதலினால் காதல் செய்வீர்'. இந்த டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வெப் சீரிஸ் ஒன்றில் டைட்டில் பாடலை பாடுவது ஜி.வி.பிரகாஷின் கேரியரில் இதுதான் முதல்முறை. 'ஹே நண்பா.. நேத்து நாளை கவலை இல்ல.. இன்று மட்டும் போதுமே! ஹே நண்பா... கடலும் மணலும் போலவே சேர்ந்திருப்போம் எப்போதுமே..” - என்கிற உற்சாக துள்ளலுடன் கூடிய இந்த பாடலை நித்திஷ் எழுத, மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிற 'ஆதலினால் காதல் செய்வீர்’ ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார். சந்தோஷ். இவர்கள் இருவருமே விகடனால் பட்டை தீட்டப்பட்ட இளம் திறமையாளர்கள் என்பது கூடுதல் தகவல்.
'இந்தப் பாடலை பாடியதற்காக தனக்கு தரப்படும் ஊதியத்தை, முதுகலை மாணவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு அப்படியே ஒதுக்கி விடுவதாக ஜி.வி.பிரகாஷ் கூறியது தான் இதில் ஹைலைட். இந்த 'ஆதலினால் காதல் செய்வீர்' டைட்டில் பாடல் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி விகடன் டெலிவிஸ்டாஸ் யூ டியூப் பக்கத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.
சமீபத்தில் ஜிவி பிரகாஷ்குமார், ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “பெருங்காற்றே” என்ற ஆல்பம் பாடலை உருவாக்க உள்ளனர். பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து அதில் நடிக்கவும் உள்ளார். ஏ.ஆர்.ராஜசேகர் இந்த பாடலை இயக்குகிறார். இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடைப்பெற்றது. அப்போது பேசிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ''1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது ’தேவாரம் ’ தமிழ் பாடல் இசைக்கப்பட்டு , தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 75 வது சுதந்திர தினத்தன்று சுதந்திர தினத்திற்கான பிரத்யேக தனிப்பாடலுக்கு இசையமைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார். ''மொழியையும் தேசியத்தை ஒன்றாக பார்க்கிறீர்களா'' என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ் குமார், ''எனக்கு என் நாடு மீது பற்று இருக்கிறது. ஆனால் முதலில் எனக்கு மொழி, பிறகுதான் தேசியம்'' என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.