‛ப்ரேம்ஜியை நடு வீட்டில் வைத்து கேள்வி கேட்டார் இளையராஜா’ - மனம் திறந்த கங்கை அமரன்!
ப்ரேம்ஜியை இளையராஜா ரொம்ப கொஞ்சுவார். மனசுல எதுவும் வெச்சுக்காம ஜாலியா இருப்பான் அவன். அதனால அவனை அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்ட கங்கை அமரன். இணைதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி, வைரலாகி வருகிறது. அதில் தனது குடும்ப உறுப்பினர்கள், குடும்பம், அனுபவம் குறித்து பேசியுள்ளார். இதோ அந்த பேட்டி...
‛‛வெங்கட்பிரவு, ப்ரேம்ஜி, கார்த்திக்ராஜா, யுவன் சங்கர்ராஜா எல்லாருமே வாலு பசங்க. ப்ரேம்ஜி ரொம்ப ரொம்ப வாலு. இன்றைக்கு வரை என் மகன்களும், இளையராஜா மகன்களும் ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறார்கள். நானும், அண்ணனும் தான் அப்பப்போ முட்டிப்போம், அவனுங்க அப்படி இல்லை; ரொம்ப ஒற்றுமையா இருக்கானுங்க.
என் அண்ணன், பசங்க கூட ரொம்ப ஜாலியா இருப்பாரு. ப்ரேம்ஜி ஒருநாள் இளையராஜா அண்ணன் மாதிரி போட்டோ ஷூட் நடத்துனான். இளையராஜா, அதை போகும் போது பார்த்துட்டு போயிருக்காரு. அப்புறம் வீட்டுக்கு வந்ததும், ஹால்ல உட்கார்ந்துட்டு, ‛ப்ரேமை கூப்பிடு...’னு சொன்னார். அவன் நடுங்கிட்டே அவரிடம் போனான். ‛என்னடா... என்னை கிண்டல் பண்றீயா... நான் என்ன அப்படியா வேசம் போடுறேன். என்னை மாதிரி போட்டோ எடுத்துட்டு இருக்க...’ அப்படினு கேட்டாரு.
யுவன், கார்த்தி எல்லாரும் பக்கத்துல நின்னு, கப்புசிப்புனு நிக்கிறாங்க. ‛அது ஒன்னும் இல்லை ராஜாப்பா... ஒரு தயாரிப்பாளர் வந்தாரு... உங்க பெரியப்பா மாதிரி மியூசிக் போடுங்கன்னு சொன்னாரு...’. நான் தான், ‛எங்க பெரியப்பா மாதிரி மியூசிக் போட முடியாது; வேசம் வேணும்னா போடுறேன்னு’ சொன்னேன், அப்படி ப்ரேம்ஜி சொன்னான். ‛சீ... ராஸ்கல்... வெளியே போ...’னு அவனோட ஜாலியாகிட்டாரு அண்ணன்.
ப்ரேம்ஜியை இளையராஜா ரொம்ப கொஞ்சுவார். மனசுல எதுவும் வெச்சுக்காம ஜாலியா இருப்பான் அவன். அதனால அவனை அவருக்கு ரொம்ப பிடிக்கும். பிரபுவும் அப்படி தான். தேனி பக்கம் கொம்பை திருவிழாவில், சினிமா பாட்டு கச்சேரி வைத்திருந்தார்கள். எல்.ஆர்.ஈஸ்வரி, ஏ.எல்.ராகவன் பாடுறாங்க. அதுவரை அந்த மாதிரி ஒரு கச்சேரி அங்கு வைத்தது இல்லை. நாங்க பிரதர்ஸ் 3 பேர், பாராதிராஜா ஆகிய 4 பேரும் மதியம் சாப்பிட்ட கையோடு கிளம்பிட்டோம்.
இரவு 9 மணி நிகழ்ச்சிக்கு 7 மணிக்கெல்லாம் இடம் பிடித்து உட்கார்ந்துட்டோம். ‛புத்திசிகாமணி பெத்த புள்ள...’ பாடலை பாடியதும், நாங்க அப்படியே மயங்கிப் போயிட்டோம். ‛இங்க பாருடா... எல்லாரும் சினிமா ஆளுங்கடா... ’ என இளையராஜாவும், நானும், பாரதிராஜாவும் சிலாகித்துக் கொண்டோம். இன்று அண்ணன் இளையராஜாவுக்கு கூடுவதைப் போன் கூட்டம், அன்று கூடியிருந்தது. பிந்நாளில் அதை ஈஸ்வரியிடம் கூறினோம்; அப்படியா என்று அசந்து போனார். அவரிடம் வாசித்து கூ காட்டியிருக்கிறோம்.
அன்னக்கிளி பாடலுக்கு எல்.ஆர்.ஈஸ்வரியை நாங்கள் தேர்வு செய்யவில்லை. தயாரிப்பாளரும் பரிந்துரைக்கவில்லை. எங்கள் தேர்வு, ஜானகியாக தான் இருந்தது. ஈஸ்வரியோட ஸ்டைல், எங்க கம்போசிங்க்கு ஒத்து வராது. அவங்க குரலில் ஒரு ஸ்டோக் இருக்கும். ஈஸ்வரிக்கு நல்ல மனசு. இப்போது பார்த்தாலும் ‛தம்பினு...’ கட்டிப்பிடிப்பாங்க. அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையலைங்கிறது தான், எனக்கு ஒரே குறை.