G P Muthu: மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட ஜி.பி.முத்து...! தலைவருக்கு என்னாச்சு..? சோகத்தில் ரசிகர்கள்..!
சென்ற சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜி.பி.முத்து தமிழ் தொலைக்காட்சி உலகில் கால் பதித்தார்.
சமூக வலைதளப் பிரபலமும், விஜய் டிவியின் ’குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாகக் கலக்கி வருபவருமான ஜி.பி. முத்து, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜி.பி.முத்து:
தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் மூலம் பெரும் இணையதள பிரபலமாக உருவெடுத்தவர் ஜி.பி. முத்து.
’செத்த பயலே, நாரப் பயலே...’ என வட்டார வழக்கில் பேசி இவர் வெளியிட்ட வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகின. மேலும் இவருக்கு வந்த வாசகர் கடிதங்கள், அதற்கு ஜி.பி.முத்து அளித்த பதில்கள் என இவர் பகிர்ந்த வீடியோக்கள் குபீர் சிரிப்பை வரவழைத்து இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தன.
பிக்பாஸ், குக்வித் கோமாளி:
அதன் பின், டிக் டொக் செயலி தடை செய்யப்பட்டதை அடுத்து பெரும் சோகத்தில் ஆழ்ந்த ஜி.பி.முத்து, தொடர்ந்து யூடியூப் பக்கம் தொடங்கியும், பிற சமூக வலைதளப் பக்கங்களுக்கு மாறியும் மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தார்.
உலகின் மூலை முடுக்குகளிலிருந்து பலரும் லெட்டர் மற்றும் பரிசுகள் அனுப்புவதும், அவற்றை இவர் அன்பாக்ஸிங் செய்து வீடியோக்களை வெளியிடுவதும் வழக்கம். தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராகப் பங்கேற்று தன் ரசிகர்களை ஜி.பி.முத்து மகிழ்வித்து வரும் நிலையில், இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி:
முன்னதாக தன் குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டு நாளைக் கொண்டாடி ஜி.பி முத்து தன் யூடியூப் பக்கத்தில் வீடியோ பகிர்ந்திருந்த நிலையில், தற்போது உடல்நிலை சரியில்லாமல் ஜி.பி.முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சென்ற சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜி.பி.முத்து தமிழ் தொலைக்காட்சி உலகில் கால் பதித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனிடமும் எடக்குமடக்காக கேள்வி கேட்டு ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ஜி.பி.முத்து, அதன் பின் தன் குடும்பத்தைப் பிரிந்திருக்க முடியாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
பின்னர் நடிகை சன்னி லியோனுடன் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிலும் கால் பதித்த ஜி.பி.முத்து, நடிகர் அஜித்தின் துணிவு படத்திலும் தோன்றியிருந்தார்.
தற்சமயம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் மட்டுமே தொடர்ந்து பங்கேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜி.பி. முத்து.