Veerappan: ‘வீரப்பன் மாட்டிக்கொண்டது இப்படிதான்.. இல்லாவிட்டால் பிடித்திருக்கவே முடியாது’ - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார்..
வீரப்பனின் வாழ்க்கை வரலாறு ‘சந்தனக்காடு’ என்ற பெயரில் நெடுந்தொடராகவும், ’வன யுத்தம்’ என்ற பெயரில் சினிமாகவும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
வீரப்பன் மட்டும் காட்டை விட்டு வெளியே வராமல் இருந்திருந்தால் பிடித்திருக்கவே முடியாது என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு மிகப்பெரிய அளவிலான இடையூறாக திகழ்ந்தவர் வீரப்பன். சத்தியமங்கலம் காட்டுக்குள் மறைந்து வாழ்ந்து வந்த அவர், கொலை, கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களை செய்ததாக குற்றச்சாட்டது. இவர் கண் பார்வை சிகிச்சைக்காக 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி காட்டை விட்டு வெளியேறிய போது தமிழக காவல்துறையின் அதிரடி படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அதிரடி படைக்கு முன்னிலை வகித்தவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் ஆவார்.
வீரப்பனின் வாழ்க்கை வரலாறு
ஆனால் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு ‘சந்தனக்காடு’ என்ற பெயரில் நெடுந்தொடராகவும், ’வன யுத்தம்’ என்ற பெயரில் சினிமாகவும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படியான நிலையில் ஓடிடி தளங்கள் பெருகி விட்ட நிலையில் பல குற்ற சம்பவங்கள், வரலாற்று நிகழ்வுகள் மீண்டும் ஆவணப்படமாக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக பல கோணங்களில் வெளியாகி வருகிறது.
நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் The Hunt For Veerappan என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தொடங்கி பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர், வனத்துறையினர் பார்வை வாயிலாக வீரப்பன் வாழ்க்கை நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதுவே மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து “கூச முனுசாமி வீரப்பன்” என்ற பெயரில் வீரப்பனின் கதை zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. வீரப்பன் தனது வாழ்க்கையில் செய்த குற்றங்கள், அதற்கான காரணங்கள், வெளியே பரவும் வதந்திகள் குறித்து நக்கீரன் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டிகள் அடங்கிய வீடியோக்கள் என அனைத்தும் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
வீரப்பனை பிடித்திருக்கவே முடியாது
இதனிடையே வீரப்பனை கொன்ற அதிரடிப்படைக்கு தலைமை வகித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அந்த திட்டத்தில் நடந்த சவாலான நிகழ்வுகளை நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், “நான் சென்னை கமிஷனராக இருந்தபோது வீரப்பனை பிடிப்பது தொடர்பாக ஏராளமான ஆபரேஷன்கள் கையில் எடுக்கப்பட்ட நிலையில் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. அப்போது நட்ராஜ் அதிரடிப்படை தலைவராக இருந்தார். நான் 3 முறை அதிரடிப்படையில் இருந்திருக்கிறேன். நாகப்பாவை வீரப்பன் கடத்தி சென்ற போது அதிரடிப்படையினர் காட்டுக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது வெகு அருகில் வீரப்பன் இருந்து பிடிக்க முடியாமல் போய் விட்டது. காட்டை பொறுத்தவரை நம்மால் எதையும் எளிதாக கண்டறிய முடியாது. ஆனால் வீரப்பனுக்கோ காடு அத்துபடியாக இருந்தது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தான் எங்கள் திட்டத்தை காட்டுக்கு வெளியே மாற்றி விட்டோம். வீரப்பன் மட்டும் காட்டை விட்டு வெளியே வராமல் இருந்திருந்தால் நிச்சயமாக பிடித்திருக்கவே முடியாது. இயற்கையாக அவருக்கு ஏதாவது நடந்திருந்தால் மட்டுமே அவர் வெளியே வந்திருப்பார்’ என விஜயகுமார் கூறியுள்ளார்.