ப்ளாஷ்பேக்: முடியவே முடியாது என்ற பாரதிராஜா... முயற்சித்த பாக்யராஜ்... காமெடியன் கவுண்டமணி உருவான கதை!
கவுண்டமணியை போடலாம் என பாரதிராஜாவிடம் பரிந்துரை செய்கிறார் பாக்கியராஜ். ‛அட போயா... அந்த ஆளு முடியும்.. அதுவும்... அவனை போய் போட சொல்ற...’ என எடுத்த எடுப்பிலேயே மறுக்கிறார் பாரதிராஜா.
கவுண்டமணி என்கிற பெயரை கேட்கும் போதே நாம் சிரிப்போம். 70களிலும், 80களிலும், 90களிலும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர். பேச்சுக்கு பேச்சு கவுண்டர் கொடுப்பவர். அவரிடம் யாரும் பேசி ஜெயிக்க முடியாது. இதுதான் நாம் கவுண்டமணி பற்றி அறிந்தவை அது உண்மையும் கூட. ஆனால் அதே கவுண்டமணி பகலும், இரவுமாக காத்துக் கிடந்து, தனக்கு யாராவது வாய்ப்பு தர மாட்டார்களா என ஏங்கிய பொழுதுகளை நாம் அறிந்ததுண்டா? சினிமாவில் வெற்றி எளிதல்ல. எளிதில் ஜெயித்தவர்கள், நிலைத்ததில்லை. சிரமங்களை கடந்தவர்கள் சிகரத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அப்படி ஒருவர் தான் கவுண்டமணி. பாரதிராஜா முடியவே முடியாது என்றவருக்கு உதவி இயக்குனர் ஒருவர் அடம்பிடித்து வாங்கித் தந்த வாய்ப்பு தான்... பின்னாளில் கவுண்டமணி என்பவர் கிடைக்க காரணம் ஆனது. இதோ இன்றைய பிளாஷ்பேக்கில் அதை தான் அறியப்போகிறோம்...
பத்தோடு பதினொன்னு... அத்தோடு இது ஒன்னு!
1977 ல் 16 வயதினிலே வருகிறது. அதில் ரஜினியே துணை நடிகர் தான். அவருக்கு உதவியாளர் கவுண்டமணி. அதவும் பல உதவியாளர்களில் ஒருவர். இன்னும் சொல்ல வேண்டுமானால் ரஜினிக்கு கை கால் பிடித்து விடும் எடுபிடி. 16 வயதினிலே நட்சத்திர தேர்வின் போது, அதில் கவுண்டமணி வர அவருக்கு பெரிய சிரமம் இருக்கவில்லை. நாடக நடிகர்களை பாலகுரு தான் அதில் நடிக்க வைத்தார். அதனால் பாரதிராஜாவின் முதல் படத்தில், கவுண்டமணியும் வந்து சேர்ந்தார். அனால் அது தனித்துவம் இல்லாத பத்தோடு பதினொன்னு... அத்தோடு இது ஒன்னு என்கிற மாதிரியான கேரக்டர் தான். இருந்தாலும் அந்த படப்பிடிப்பில் உதவி இயக்குனரான பாக்யராஜின் அறிமுகம் கவுண்டமணிக்கு கிடைத்தது. 92 சி என்கிற இடம் தான், நாடக நடிகர்கள் எல்லாம் சந்திக்கும் இடம். அங்கு பாக்யராஜ் அடிக்கடி வருவார். அதன் மூலமும் கவுண்டமணி அவருக்கு அறிமுகமாகியிருந்தார்.
கவுண்டமணி வேண்டவே வேண்டாம்... பிடிவாதம் பிடித்த பாரதிராஜா!
16 வயதினிலே வெளியாகி சூப்பர் ஹிட். நடித்த அனைவரும் வாய்ப்பு பெறுகிறார்கள். கடைகோடியில் நடித்த கவுண்டமணியை நினைவில் வைத்திருந்தாலே பெரிய விசயம். ஆமாம்... இயக்குனர் பாரதிராஜாவும் கவுண்டமணியை மறந்திருந்தார். ஆனால் பாக்யராஜ் மறக்கவில்லை. காந்திமதி கணவர் பாத்திரம். கவுண்டமணியை போடலாம் என பாரதிராஜாவிடம் பரிந்துரை செய்கிறார் பாக்கியராஜ். ‛அட போயா... அந்த ஆளு முடியும்.. அதுவும்... அவனை போய் போட சொல்ற...’ என எடுத்த எடுப்பிலேயே மறுக்கிறார் பாரதிராஜா. அவர் மனதில் இருந்தது டெல்லி கணேஷ். அதை பாக்யராஜிடமும் தெரிவிக்கிறார். ‛டெல்லி கணேஷ் நல்ல நடிகர் தான்... ஆனால் அவர் சிட்டி லுக்... கவுண்டமணியை போட்டீங்கன்னா... அவர் வில்லேஜ் லுக் இருக்கும்...’ என மீண்டும் அழுத்துகிறார் பாக்யராஜ். பாரதிராஜா மசிந்தபாடில்லை. ‛டெல்லி கணேஷ் நாடக நடிகர்... அவர் இதுக்கு சரியா வரமாட்டார்...’ என பாக்யராஜ் கூற, ‛கவுண்டமணியும் நாடக நடிகர் தானய்யா...’ என பந்தை திருப்பி அடித்து விட்டு புறப்பட்டார் பாரதிராஜா. பாக்யராஜிற்கு என்ன சொல்வது என தெரியவில்லை.
கவுண்டமணி கதாபாத்திரத்தில் பாக்யராஜ்!
இப்போது கிழக்கே போகும் ரயிலில் காந்திமதி கதாபாத்திரத்திற்கான ஆட் தேர்வு நடக்கிறது. பலரையும் உதவி இயக்குனர் பாக்யராஜ் பரிசோதிக்கிறார். இறுதியில் காந்திமதி தேர்வாகிறார். அதை பார்த்த பாரதிராஜா, பேசாம நீயே நடிச்சிடுயா என பாக்யராஜிடம் கூறுகிறார். ‛ஏங்க... ஏதோ வைத்தியரா வயசான ஆளா நடிச்சேன்னா... அது ஏதோ தூரத்துல இருந்து எடுத்தீங்க பிரச்னை இல்லை... இது முக்கியமான ரோல். அந்த அம்மாவுக்கு நான் எப்படி கணவனா நடிக்க முடியும். அவங்க வயசு என்ன... என் வயசு என்ன என மறுத்திருக்கிறார் பாக்யராஜ். அவரை எவ்வளவோ சமாதானம் செய்ய பாரதிராஜா எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. பாக்யராஜ் மனதில் இருந்தது, கவுண்டமணி மட்டுமே. அவருக்கு விக் போட்டு பாரதிராஜாவிடம் அழைத்து வந்து அந்த கேரட்ருக்கு இவர் தான் சரியாக இருப்பார் என கூறியுள்ளனர். ‛எல்லாரும் சேர்ந்து நாடகம் போடுறீங்க.. என்னமோ பண்ணி தொலைங்க’ என பாரதிராஜா கூற, படத்தின் தயாரிப்பாளர், இவர் சரியா வருவார்னு தான் தோணுது என கூறியுள்ளார். பார்க்கலாம், பார்க்கலாம் என பாரதி ராஜா கூறியுள்ளார்.
நள்ளிரவில் காத்திருந்த கவுண்டமணி!
இதற்கிடையில் தனக்கு வாய்ப்பு இருக்கா... இல்லையா... என கேட்க தினமும் பாக்யராஜை சந்திக்க தொடங்கினார் கவுண்டமணி. 92 சி, எல்டாம்ஸ் என நடையாய் தினமும் நடந்தார். இன்று கவுண்டமணிக்கு பாரதிராஜா கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். தனக்கே வாய்ப்பு கிடைத்ததைப் போல், விசயத்தை சொல்ல புறப்படுகிறார் பாக்யராஜ். அவர் வழக்கமாக இருக்கும் ‛92சி’ல் அவர் இல்லை. சரி... எல்டாம்ஸில் இருப்பார் என நினைத்து அங்கு ஓடுகிறார். நள்ளிரவு 1 மணி. எல்டாம்ஸ் வாசலில், பூட்டப்பட்ட பகுதியின் வெளியே தனிமையில் அமர்ந்திருக்கிறார் கவுண்டமணி, ‛என்னய்யா உன்னை எங்கே எல்லாம் தேடுறது...’ என மூச்சு பிடிக்க பாக்யராஜ் பேச, ‛என்ன சார்... ஓகே ஆயிடுச்சா... ஓகே ஆயிடுச்சா...’ என பதட்டத்தோடு பாக்யராஜ் முகத்தை பார்க்கிறார் கவுண்டமணி, ஆமாம்ய்யா எல்லாம் நல்லபடியா முடிஞ்சது என பாக்யராஜ் கூற, கவுண்டமணி கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் கொட்டியது.
பூட்டிய கோயிலின் வெளியே உள்ளம் உருகிய கவுண்டமணி!
சரி விடு, இனி எல்லாம் நல்ல படியாய் நடக்கும் என பாக்கியராஜ் கூற, கவுண்டமணிக்கு நெகிழ்ச்சியோடு மகிழ்ச்சியும் சேர்ந்தது. சரி வா... கோயிலுக்கு போவோம் என அழைத்துள்ளார் பாக்யராஜ். மணி 1 மணியாகுது. இப்போ எந்த கோயிலும் இருக்காதே என கவுண்டமணி கூற, அட வாய்யா... என அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் பாக்யராஜ். பூட்டிய கோயிலின் வெளியே அவரை சூடம் ஏற்றக்கூறி, தான் வாங்கி தந்த சூடத்தை கொடுத்துள்ளார். கவுண்டமணிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நள்ளிரவில் சூடத்தை ஏற்றி கண்ணீர் மல்க கடவுளுக்கும், பாக்யராஜூக்கும் நன்றியை தெரிவித்து சூட்டிங் கிளம்பினார் கவுண்டமணி. கிழக்கே போகும் ரயில் தான் கவுண்டமணி கேரியரில் மிகப்பெரிய டார்னிங் பாயிண்ட். மனிதர் மறுக்கப்பட்டதற்கான காரணங்களை எல்லாம் அடித்து நொறுக்கி தனக்கென தனி பிளே லிஸ்ட் போடும் அளவிற்கு அந்த படத்தில் பெர்பார்ம் செய்தார்.
வாய்ப்பை வளமாக்கிய கவுண்டமணி!
அதே கவுண்டமணி டேட்டுக்காக தான், பின்னாளில் ஒவ்வொரு படங்களும் காத்திருந்தன. கவுண்டமணி டேட் இருந்தால் வாங்கிட்டு வா என டைரக்டர்களை ஹீரோக்கள் அனுப்பும் அளவிற்கு எங்கோ சென்றார். தனக்கென தனி பாடல், தனி டான்ஸ், தனி டிராக் என்றெல்லாம் வேறு விதமான ரேஞ்சிற்கு கவுண்டமணி சென்றார். ஆனால் அவற்றை நேற்று முடிவு செய்து, இன்று செய்து காட்டிவிடவில்லை அவர். வாய்ப்பு கிடைக்குமா... கிடைக்காதா என தூக்கத்தை தொலைத்து, பூட்டிய அறையின் வெளியே தனிமையில் காத்திருக்கும் அளவிற்கு மனஉளைச்சலும் எதிர்பார்ப்புமாய் திக் திக் நாட்களை தான் அவர் கடந்திருந்தார். இது பலருக்கான அனுபவம். அதில் கவுண்டமணியும் விடுபடவில்லை.
மேலும் செய்திகளுக்கு...
தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!
ப்ளாஷ்பேக்: அண்ணன்-தம்பி உரசல்... சபையில் அவமானம்... இப்படி தான் இசையமைப்பாளரானார் கங்கை அமரன்!