HBD Keerthy Suresh: “வெள்ளை நதியோ.. வெளியூர் நிலவோ” - நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் இன்று..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராகவும், இளைஞர்களை மிகவும் கவர்ந்த நடிகைகளுள் ஒருவருமான கீர்த்தி சுரேஷ் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராகவும், இளைஞர்களை மிகவும் கவர்ந்த நடிகைகளுள் ஒருவருமான கீர்த்தி சுரேஷ் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கலையுலக குடும்பத்தின் வாரிசு
கீர்த்தி சுரேஷின் அம்மா, அப்பா இருவருமே திரையுலகைச் சேர்ந்தவர்கள். தந்தை சுரேஷ் குமார் மலையாள இயக்குநர்-தயாரிப்பாளராக இருந்தவர். தாய் மேகனா சுரேஷ் தமிழில் ரஜினி, விஜயகாந்துடன் ஜோடியாக நடித்துள்ளார். கீழ் வானம் சிவக்கும், நெற்றிக்கண், எங்கிருந்தாலும் வாழ்க, உனக்காகவே வாழ்கிறேன் உள்ளிட்டவை மேனகா நடித்த படங்களாகும். இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து கலையுலகில் அடியெடுத்து வைக்காமல் இருப்பாரா கீர்த்தி சுரேஷ்..?
குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோயின்
தன் தந்தை தயாரித்த சில மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி நடித்தார். இதனைத் தொடர்ந்து படிப்பு ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, மறுபக்கம் நடிப்பு தொடர்பான விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக கற்று வந்தார். இப்படியான நிலையில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ள பிரியதர்ஷன் இயக்கிய ”கீதாஞ்சலி” படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிலையில், முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் அசத்தியிருப்பார்.
கீர்த்தி சுரேஷின் நடிப்பை ரசிகர்கள் கவனிக்க தொடங்கினர். தொடர்ந்து ரவி இயக்கத்தில் திலீப் நடித்த ரிங் மாஸ்டர் படத்தில் பார்வையற்றவராக நடித்தார் கீர்த்தி. அவ்வளவு தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.அதே வேகத்தில் அந்த பாராட்டுகள் தமிழ் சினிமா பக்கம் கீர்த்தியை அழைத்து வந்தது.
மாயம் செய்த கீர்த்தி சுரேஷ்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் படம் வெளியானது. விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த அந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி அறிமுகமாகியிருந்தார். மேனகாவின் மகள் என்ற அடையாளத்தை ரசிகர்கள் மறக்கும் அளவுக்கு தனது இரண்டாவது படமான “ரஜினி முருகன்” படத்தில் க்யூட் பெர்பார்மன்ஸ் செய்திருந்தார். இப்படமே கீர்த்திக்கு தமிழில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக காரணமாக அமைந்தது.
இதன்பின்னர் ரெமோ, தொடரி, பைரவா, சர்கார், சாமி 2, தானா சேர்ந்த கூட்டம், சண்டகோழி 2 என பல படங்களில் விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கச்சியாக அண்ணாத்த படத்தில் நடித்து வியக்க வைத்தார்.
தேடி வந்த தேசிய விருது
மலையாளம், தமிழ் படங்களை அடுத்து கீர்த்தி சுரேஷ் தெலுங்குக்கு சென்றார். நேனு சைலஜா படத்தின் மூலம் அறிமுகமான அவர், நேனு லோக்கல், மகாநடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இதில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட ‘மகாநடி’ படத்துக்காக 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். தன்னால் எப்பேர்பட்ட கேரக்டரில் நடிக்க முடியும் என கீர்த்தி சுரேஷ் நிரூபித்தார்.
எல்லோரையும் போல கீர்த்தியும் சோலோ ஹீரோயின் கதைகளில் நடிக்க தொடங்கியுள்ளார். பெண்குயின், சாணி காயிதம்மிஸ் இந்தியா, குட்லக் சகி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். தான் நினைத்த உயரத்தை சினிமாவில் கீர்த்தி அடைய வேண்டும். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!