”நடிப்பே வராது.. வயதானவர்.. நஸ்ரியாவுக்கு இவரா கணவர்?” - விமர்சனத்திற்கு ஃபகத் பாசில் கொடுத்த பதிலடி
நடிக்க தெரியாதவர், வயதானவர், இளம் நடிகையை திருமணம் செய்து கொண்டவர், தோல்வி நடிகர் என பல விமர்சனத்திற்கு ஆளானவர் ஃபகத் பாசில்
மாமன்னனில் ரத்னவேலுவாக நடித்துள்ள ஃபகத் பாசிலை கொண்டாடும் ரசிகர்கள் 9 ஆண்டுகளுக்கு முன்பு அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி விமர்சித்தனர். தன் மீதான விமர்சனங்கள் அனைத்திற்கும் வாய்த்திறக்காமல் மவுனம் காத்த ஃபகத் பாசில் நடிப்பின் மூலம் பதிலடி கொடுத்து தன்னை திட்டியவர்களையே பாராட்ட வைத்துள்ளார் என்றே கூறலாம்.
ஃபகத் பாசில் பிரபல மலையாள இயக்குநர் பாசிலின் மகன். தமிழில் பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, வருஷம் பதினாறு, காதலுக்கு மரியாதை, என் பொம்முகுட்டி அம்மாவுக்கு, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட படங்களை பாசில் இயக்கி இருக்கிறார். இப்படி சினிமா பின்புலம் இருந்தாலும், எந்த ஒரு இடத்திலும் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தியது இல்லை.
ஆரம்பத்தில் ஃபகத் பாசிலை வைத்து ’கையெத்தும் தூரத்து’ என்ற படத்தை அவரது தந்தை பாசில் எடுத்துள்ளார். மலையாளத்தில் ஃபகத் அறிமுகமான முதல் படமும் அது தான். ஆனால், மிகப்பெரிய வெற்றி இயக்குநரின் மகனுக்கு நடிப்பு வரவில்லை என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டு, அந்த படம் படுதோல்வியை அடைந்தது. நடிப்பு என்றால் என்னெவென ஃபகத் பாசிலுக்கு தெரியவில்லை என பத்திரிகைகளும் விமர்சித்து எழுதின. இந்த தோல்வியாலும், கடுமையான விமர்சனங்களாலும் மனம் உடைந்த ஃபகத் பாசில் அமெரிக்காவிற்கு சென்று விட்டார்.
7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேரளா திரும்பிய அவர் ’கேரளா கஃபே’ என்ற குறும்படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். தான் ஒரு மிகப்பெரிய இயக்குநரின் மகன் என்ற ஆணவம் இல்லாமல் சிறு சிறு ரோல்கள் வந்தாலும், அதை ஏற்று நடித்த ஃபகத் பாசில், தான் எந்த படத்தில் எந்த கேரக்டரில் நடித்தாலும் அது பெரிதாக பேசப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். அதற்கு ஏற்றார்போல் 2011ம் ஆண்டு வெளிவந்த சாப்பா குரிசு படத்தில் வில்லனாக நடித்த ஃபகத் பாசில் பெரிதாக பாராட்டப்பட்டார்.
நெகட்டிவ் கேரக்டர் மட்டும் இல்லாமல் காதல் உணர்வினை கண்களால் காட்டும் காதலனாக நடித்த ஃபகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஃபகத் பாசில் அண்மையில் வெளியான மாமன்னன் படத்தின் மூலம் பெரிதாக கொண்டாடப்பட்டு வருகிறார். மாமன்னனில், ரத்னவேலுவாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தாலும், ஒரு வில்லனை அனைவரும் பாரபட்சம் இன்றி கொண்டாடி வருவது திரைத்துறையினரையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது. மாமன்னனில் ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பின் உச்சத்தை காட்டிய ஃபகத் பாசில், நடிப்பின் ராட்சசன் என்றே அனைவரது மனதிலும் பதிந்தார்.
ஆரம்பத்தில் நடிப்பு வரவில்லை என எப்படி அவமானப்படுத்தப்பட்டாரோ அதேபோல், தனிப்பட்ட வாழ்க்கையாலும் கடுமையாக விமர்சனங்களை ஃபகத் பாசில் கடந்து வந்துள்ளார். தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமான நஸ்ரியாவை 2014ம் ஆண்டு ஃபகத் பாசில் திருமணம் செய்து கொண்டார். க்யூட்டான நடிப்பு, அழகான கண்களால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நஸ்ரியா, வயதான ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. 21 வயதான நஸ்ரியா 33 வயதான ஃபகத் பாசிலை திருமணம் செய்தார். இருவருக்கும் 12 ஆண்டுகள் இருந்த வயது வித்தியாசம், பல விமர்சனத்திற்கு வழி வகுத்தது. ஃபகத் பாசிலும் வழுக்கை தோற்றத்தில் இருந்ததால், இப்படி ஒருவரையா நஸ்ரியா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேள்விகள் எழுந்தன.
ஆனாலும், ஃபகத் பாசில் மீதான காதலுக்கு எல்லை இல்லை என்பதை உணர்த்திய நஸ்ரியா நடிப்பில் இருந்து ஒதுங்கி திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தி இருந்தார். தற்போது நடிப்பால் கொண்டாடப்படும் ஃபகத் பாசிலால் நஸ்ரியாவுக்கும் பெருமை ஏற்பட்டுள்ளது.
நடிப்பு தெரியாதவர், வயதானவர், இளம் நடிகையை திருமணம் செய்து கொண்டவர், தோல்வி நடிகர் என பல விமர்சனத்திற்கு ஆளான ஃபகத் பாசில், தனது நடிப்பால் அனைவரையும் கொண்டாட வைத்துள்ளார். இப்படிப்பட்ட நடிப்பு ராட்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.