ப்ளாஷ்பேக்: கடைசி நேரத்தில் விலகிய வசந்த்... இன்ஸ்டண்ட் இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா:அமிதாப் தயவில் ‛அண்ணாமலை‛!
‛நம்ம படம்... திடீர்னு வசந்த் போயிட்டான்... இது கவிதாலயா கெளரவ பிரச்னை... அறிவித்த தேதியில் படம் பண்ணியே ஆகணும். நீ தான் டைரக்ட் பண்ணனும்... என , பாலசந்தர் கூற, சுரேஷ்கிருஷ்ணாவுக்கு...!
என்னதான் ரஜினி 80களில் கொடிகட்டி பறந்தாலும், அவருக்கு ஒரு மாஸ் அடையாளம் கொடுத்ததில் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உண்டு. அதற்கு முன் ரஜினிக்கு மாஸ் இல்லையா...? என நீங்கள் கேட்கலாம். இருந்தது... ஆனால் ரஜினி என்கிற எழுத்து வரும் போதே ஒரு தீம் வருவதும், அதற்கு ரசிகர்கள் ஆர்ப்பரித்ததும் , இங்கிருந்து தான். ஒவ்வொரு திரைப்படம் உருவாகும் போது, ஏதாவது ஒரு மாற்றம் அதில் ஏற்படுவது இயல்பு. அண்ணாமலையில் டைரக்டரே மாறும் அளவுக்கு பிரச்னைகள் இருந்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் படத்தில் பிரச்னையா... ஆம்... சினிமாவுக்கு யாரும் விதிவிலக்கல்ல. அண்ணாமலையும் அதற்க விதிவிலக்கல்ல!
கடைசி நிமிடத்தில் விலகிய வசந்த்!
இயக்குனர் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிற்கு ரஜினி டேட் தருகிறார். பெரிய புராஜக்ட். சூப்பர் ஸ்டார் படம். தனது சிஷ்யர்களில் ஒருவரான இயக்குனர் வசந்திற்கு அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை தருகிறார் பாலசந்தர். படத்திற்கு பெயர் அண்ணாமலை. பூஜையெல்லாம் அறிவித்தாகிவிட்டது. திடீரென ஏதோ ஒரு பிரச்னையில் அந்த படத்திலிருந்து விலகுகிறார் வசந்த். பாலசந்தருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் பூஜை. ஏற்கனவே அறிவித்தாகிவிட்டது. ரஜினி டேட் வேறு வீணாகிவிடக்கூடாது. பெரிய நடிகர் பட்டாளமே படத்திற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறது. இப்போது பாலசந்தருக்கு தனது மற்றொரு சிஷ்யரான சுரேஷ்கிருஷ்ணா நியாபகம் வருகிறது. இந்தியில் பிஸியாக இருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா. பாலசந்தரிடமிருந்து அழைப்பு, விவரம் தெரியாமலேயே பறந்து வருகிறார் சுரேஷ்கிருஷ்ணா.
இன்ஸ்டண்ட் இயக்குனரானார் சுரேஷ்கிருஷ்ணா!
இப்போது சுரேஷ்கிருஷ்ணாவிடம் பேசுகிறார் பாலசந்தர். ‛நம்ம படம்... திடீர்னு வசந்த் போயிட்டான்... இது கவிதாலயா கெளரவ பிரச்னை... அறிவித்த தேதியில் படம் பண்ணியே ஆகணும். நீ தான் டைரக்ட் பண்ணனும்... ரஜினி படம்...’ என , பாலசந்தர் கூற, சுரேஷ்கிருஷ்ணாவுக்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. ‛2 நாளில் சூட்டிங்.. ரெடியா...’ என பாலசந்தர் கேட்க, மறுபேச்சே பேசாமல், ‛ரெடி சார்...’ என சுரேஷ் கிருஷ்ணா ஓகே சொல்கிறார். இப்போது ரஜினியை சந்திக்க வேண்டும். முன்பு பாலசந்தரின் உதவியாளராக இருந்த சமயத்தில், 7 ஆண்டுகளுக்கு முன் ரஜினியிடம் பேசியது; இப்போது படம் பண்ணுவதற்காக பேச வேண்டும், அதுவும் பெரிய இடைவெளிக்கு பிறகு. இன்ஸ்டன்ட் இயக்குனராக வேறு வந்திருக்கிறார். இப்போது ரஜினி வருகிறார். ‛சொல்லுங்க சுரேஷ்... கதை கேட்டீங்களா... ஓகே தானே...’ என ரஜினி கேட்க, ‛சார் கேட்டேன்... ஒரு சில திருத்தம் இருக்கிறது... அதை பண்ணிடலாம்...’ என சுரேஷ் சொல்ல, ‛ஓகே... ஓகே... உங்க டேஸ்டுக்கு பண்ணுங்க...’ என ரஜினி கூற, உடன் வந்த நடராஜன், இருவரின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார். ரஜினியை தனி அறைக்கு அழைத்துச் சென்ற சுரேஷ் கிருஷ்ணா, ‛சார் படம் முடியுற வரை... நாம எல்லோரும் எந்த ஈகோவும் இல்லாமல் ஒருத்தருக்கு ஒருத்தர் நம்ம படம்னு நெனச்சு பண்ணனும்... சார்...’ என கூற, அவரின் கையை பற்றிய ரஜினி, ‛சூப்பர்... தூள் கிளப்புங்க...’ என அனுப்பி வைக்கிறார் ரஜினி.
அமிதாப்பச்சன் உருவில் ரஜினி!
இரண்டு நாளில் சூட்டிங் முழு டிஸ்கஸனை முடித்து குறிப்பிட்ட தேதியில் சூட்டிங்கை துவக்குகிறார் சுரேஷ்கிருஷ்ணா. பெரும்பாலும் அவர் ஹிந்தி படங்களின் காதலன். தமிழ் படிக்க, எழுத தெரியாதவர். அவரது ஆதர்ஸ நாயகன் அமிதாப் பச்சன் மட்டுமே. எனவே அவர் ரஜினியை அமிதாப்பாகவே பார்க்கிறார். என்னதான் பாலசந்தரிடம் உதவியாளராக இருந்தாலும், அவரது கிளாஸ் பார்முலா, சுரேஷ்கிருஷ்ணாவிற்கு வராது. அவர் மாஸ் விரும்பி. அமிதாப்பின் சோலேயில் ஈர்க்கப்பட்டவர். அந்த மாஸை மனதில் வைத்து தான் இப்போது ரஜினியை இயக்குகிறார். ஒவ்வொரு முறை காட்சியை விவரிக்கும் போதும்,அமிதாப் பெயரை சொல்லி சொல்லியே விளக்குகிறார். ரஜினி இதை முழுதாய் கவனிக்கிறார். 6 நாட்கள் சூட்டிங் முடிகிறது. 7 வது நாள் சூட்டிங்; சுரேஷ்கிருஷ்ணாவை தனியாக அழைக்கிறார் ரஜினி. ‛நீங்க அமிதாப் ரசிர்கனு தெரியுது... அமிதாப் அமிதாப் தான்... நான் அவர் மாதிரி ஆக முடியாது... ஏன் என்னை அவரோடு கம்பேர் பண்றீங்க...’ என கேட்க, தனக்குள் மறைந்திருக்கும் மாஸ் உருவம் அது என்றும், அவரை வைத்தே காட்சிகள் கண் முன் வருவதாகவும் கூறியிருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா. அவரது ரசனையை புரிந்து கொண்ட ரஜினி, அவர் விருப்பப்படியே அனுமதித்தார்.
கூட்டணி வைத்து ‛பல்ஸ்’ பார்த்த ரஜினி!
படப்பிடிப்பு தொடங்கியதுமே அவர்கள் சூட் செய்த சீன்ஸ், விடுதியில் குஷ்பு அறைக்கு ரஜினி வரும் காட்சி. பாம்பை பார்த்து ரஜினி அலறும் காட்சி. இப்போது என்ன வசனம் வைப்பது என்கிற குழப்பம். எப்படி பார்த்தாலும் ஐடியா வரவில்லை. ஸ்பாட்டில் ரஜினியும் சுரேஷ்கிருஷ்ணாவும் புலம்புகிறார்கள். டயலாக் வரமாட்டேங்குதே... அடக்கடவுளே... என சுரேஷ்கிருஷ்ணா கூற, ‛கடவுளே... கடவுளே... கடவுளே...’ டயலாக் சிக்குகிறது. அதையே வைப்போம் என இருவரும் முடிவு செய்கிறார்கள். ஆனால், அது எடுபடுமா என்கிற சந்தேகம் இருவருக்கும். சரி, யாருக்கும் சொல்ல வேண்டாம். ஸ்பாட்டில் இதை வைப்போம். மற்றவர்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என பார்ப்போம் என இருவரும் முடிவு செய்து, அதை ஸ்பாட்டில் அரங்கேற்றுகிறார்கள். வழக்கமாக இயக்குனர், நடிகரை பார்ப்பார். ஆனால் அன்று மட்டும், ஆக்ஷன் சொல்லிவிட்டு, எதிரில் இருக்கும் யூனிட்டை பார்க்கிறார் சுரேஷ்கிருஷ்ணா. படப்பிடிப்பு நடப்பது கூற தெரியாமல், அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ‛ரைட்... நாம நெனச்சது நடந்துடுச்சு...’ என்கிற மகிழ்ச்சியில், ரஜினியும், சுரேஷ்கிருஷ்ணாவும் அந்த சீனை திருப்திகரமாக எடுத்து முடித்தனர்.
படம் முடிந்ததும் பாலசந்தரம் கேட்ட கேள்வி!
சூட்டிங் ஸ்பாட்டில் இது போன்ற பல சுவாரஸ்ய விசயங்கள் அடிக்கடி நடக்குமாம். இப்படி தான், ரஜினி மீது பாம்பு ஏறும் சீனில், ஷாட் முடிந்தும் அனைவரும் சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். பாம்பு ரஜினி சட்டைக்குள் நுழைய பார்த்திருக்கிறது. ‛டே... கட் சொல்லுங்கடா... ’ என கதறியுள்ளார் ரஜினி. இப்படி பல சுவாரஸ்யங்களை கடந்து தான், அண்ணாமலை நிறைவுபெற்றது. இசையமைப்பாளர் தேவாவிற்கு பாலசந்தர் கொடுத்த வாய்ப்பு, அதை அவர் பயன்படுத்திய விதம், படத்தில் அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். 1992 ஜூன் 27 ல் வெளியான அண்ணாமலை, அதன் பின், அண்ணாமலை சைக்கிள், அண்ணாமலை செருப்பு, அண்ணாமலை பால்காரர் என பல்வேறு அடையாளங்களை தமிழ்நாட்டில் உருவாக்கியது.
கவிதாலயாவிற்கு பெரிய வெற்றியையும் தந்தது. படம் முடிந்து, பர்ஸ்ட் காப்பி வந்ததும், படத்தை பார்த்து விட்டு வந்த பாலசந்தர், சுரேஷ்கிருஷ்ணாவிடம் கேட்கிறார், ‛ஏண்டா... என்ன தைரியத்தில் நான் சொன்னதும் படத்தை எடுக்க ஒப்புக்கொண்டாய்...’ என, அதற்கு சுரேஷ்கிருஷ்ணா சொல்லியிருக்கிறார், ‛எல்லாம் அவன் செயல்... அவன் ஒரு வாய்ப்பை தரும் போது, அதை வெற்றியாக முடிப்பதும் அவனே...’என கூற, தட்டிக் கொடுத்து கிளம்பினார் பாலசந்தர். அண்ணாமலை அன்றும், இன்றும், என்றும் எவர்கிரீன் இன்ஸ்பிரேஷன் படம்.
மேலும் ப்ளாஷ்பேக் செய்திகளை படிக்க....
ப்ளாஷ்பேக்: ரஜினியை மாற்றிய மனோபாலா... கருணாநிதியில் தொடங்கி எம்.ஜி.ஆர்.,யில் முடிந்த ஊர் காவலன்!
ப்ளாஷ்பேக்: தடுமாறிய விஜயசாந்தி... தத்தளித்த மணிவண்ணன்...ஈரத்தில் சிக்கிய கல்லுக்குள் ஈரம்!
ப்ளாஷ்பேக்: அண்ணன்-தம்பி உரசல்... சபையில் அவமானம்... இப்படி தான் இசையமைப்பாளரானார் கங்கை அமரன்!