Sivakarthikeyan: மேடையில் மனைவியை நினைவுபடுத்திய சிவகார்த்திகேயன் ! - விம்மி அழுத அருண்ராஜா காமராஜ்!
"அருண் ராஜா எனக்கும் ஒரு படம் பண்ணுடா...ஒரு கதை சொல்லு. ஒரு படம் பண்ணனும்னு ஆசையா இருக்கு."
இந்தியில் வெளியாகி மெஹா ஹிட்டான ஆர்ட்டிக்கள் 19 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள திரைப்படம்தான் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க , அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின்(Udhayanidhi Stalin) நடித்துள்ளார். நெஞ்சுக்கு நீதி படத்தின் புரமோஷன் விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் சிவக்கார்த்திகேயன்(Sivakarthikeyan) , தனது நண்பரும் இயக்குநருமான அருண்ராஜாவிடம் மனைவி கொரோனாவால் மறைந்தது குறித்து நினைவு படுத்தி, ஆறுதலாக பேசினார். இதனால் மேடையிலேயா அருண்ராஜா விம்மி அழுத காட்சிகள் பலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிவக்கார்த்திக்கேயன் பேசியதாவது :
” இந்த படத்தின் பாட்டு , டிரைலர் எல்லாத்தையும் பார்க்கும் பொழுது தெரியுது இதற்கான பங்களிப்பை ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் கொடுத்துருக்கிறார்கள் என்று. இந்த படத்தின் வெற்றி இப்பொழுதே தெரிய ஆரமித்துவிட்டது. படத்தின் டிரைலர் வந்த சமயத்தில் நான் யூடியூப் கமெண்ட் ஒன்றை பார்த்தேன். அதில் ஜாக் ஸ்னைடர் அப்படினு ஒரு வார்த்தை போட்டுருந்துச்சு. அவர் ஹாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குநர் போலும். எனக்கே அன்றுதான் தெரியும். அதுமாதிரியான ஒரு ஃப்ரேம் இருக்குனு சொல்லியிருந்தாங்க . இன்றைய காலக்கட்டத்தின் யூடியூப்பில் இப்படியான கமெண்டுகளை பார்ப்பதே கஷ்டம். அருண்ராஜா, தினேஷ் கிருஷ்ணனுடன் கனா படம் பண்ணோம். தமிழ்ல ஒரு படம் எடுத்து சைனா வரைக்கும் கொண்டுபோன பெருமை கொண்டவங்க. மீண்டும் இந்த டீம் இணைந்து பவர்ஃபுல்லா நெஞ்சுக்கு நீ்தி படத்தை பண்ணுறாங்க. அருண்ராஜாவுடைய நண்பன்னு சந்தோஷமா சொல்லிட்டு இருந்தேன். ஆனால் இன்றைக்கு பெருமையாக சொல்லும் அளவிற்கு அவரது அடுத்தடுத்த படங்கள் இருக்கு. அருண் ராஜா எனக்கும் ஒரு படம் பண்ணுடா...ஒரு கதை சொல்லு. ஒரு படம் பண்ணனும்னு ஆசையா இருக்கு. எனக்கு உன் கூட வொர்க் பண்ணனும்னு ஆசையா இருக்கு. கனாவுல ஒரு 15 நாள்தான் வொர்க் பண்ணேன். இந்த மேடையில எல்லார் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன். அருண் ராஜா காலேஜ்ல இருக்கும் பொழுது , இவ்வளவு சீரியஸா பார்த்தது இல்லை. கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை பார்க்கும் பொழுது இவன் நம்ம கூடதானே இருந்தான்னு ஆச்சர்யமா இருக்கு. இதுபோல பல வெற்றிப்படங்களை பண்ணனும். உன் வாழ்க்கையில நீ எவ்வளவு பெரிய விஷயத்தை இழந்துருக்கேன்னு தெரியும். உனக்கு கிடைக்கப்போகும் கைத்தட்டல்கள்ல , வெற்றியில சிந்து கூடவே இருப்பாங்க. (அருண் ராஜா அழ தொடங்குகிறார் )எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. எங்க வீட்டுல யாருடைய படம் ரிலீஸ் ஆகுது அப்படினாலும் முதல்ல ரெடியாகுறது சிந்துதான். சிந்து இல்லாத சமயத்துல அவருக்கு பக்க பலமா இருந்தது உதய் சார் . இந்த மாதிரி படைப்புகள் வரனும் . அது என் நண்பனிடம் இருந்து வருதுனு நினைக்கும் பொழுது பெருமையா இருக்கு. இந்த படத்தை தயாரித்த போனி கபூர் சார்...என் நண்பனுக்கு இப்படியான மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. அவன் இந்த மாதிரி பெரிய நிறுவனங்களுடன் இணைந்து படம் பண்ணுறது எனக்கு சந்தோஷமா இருக்கு. நான் கனா முடித்தவுடன் அடுத்த படத்தை இங்கே பண்ண வேண்டாம் . வெளியே போய் பண்ணு அப்படினு சொன்னேன். இனிமே அவன் பலம் என்ன அப்படினு வெளி உலகத்துக்கும் தெரியும். ” என எமோஷ்னலாக தனது நண்பர் குறித்து பேசினார்.