சந்தானத்தை வேண்டாம் என்ற வெற்றிமாறன்... என்ன படம்? என்ன காரணம்?
பொல்லாதவன் படத்தில் நடிக்க சந்தானம் வேண்டாம் என்று வெற்றிமாறன் முதலில் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர் வெற்றிமாறன். இவர் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் பொல்லாதவன். தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் கருணாஸ், சந்தானம் ஆகியோர் நடித்திருப்பார்கள்.
சந்தானத்தை வேண்டாம் என்ற வெற்றிமாறன்:
இந்த படத்தில் நடிக்க சந்தானத்தை ஏற்க வெற்றிமாறன் மறுத்துள்ளார். இதை சந்தானமே ஒரு முறை பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதுதொடர்பாக, சந்தானம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, வெற்றிமாறன் முதலில் என்னை வேண்டாம் என்று கூறிவிட்டார். சந்தானம் எல்லாம் வேண்டாம். இது அந்த மாதிரி படம் இல்லை. தயாரிப்பாளர்தான் அவரை கட்டாயப்படுத்தி, இல்லை அவர் இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.
அப்போது, அவரே என்னிடம் சந்தானம் நான் உங்களை வைத்து எதுமே எழுதவில்லை. கருணாஸிற்குதான் ஒரு கேரக்டர் வைத்துள்ளேன். கருணாஸ் கூட உங்களுக்கு ப்ரண்ட் என்றுதான் பாேட்டுள்ளேன். அந்த இடத்துலயும் கேப்தான் விட்ருந்தாரு. அதுல எதுமே இருக்காது.
ஒன் லைன் பஞ்ச்:
இதான் டயலாக். இதான் சீன். இதுக்குள்ள நீங்க என்ன பண்ண முடியுமோ? பாருங்க. இவ்ளோ டயலாக் வச்சுருக்கேன். புதுசா ஒரு விஷயம் பண்ணிட்டு இருக்கேனு சொல்வாரு. இதுக்கு நடுவுல நான் இந்த மாதிரி சொல்லலாமா? இந்த மாதிரி பண்ணலாமா?னு கேட்டு, கேட்டு ஒன் லைன் பஞ்ச் மாதிரி போட்டேன். அது ஒரு நல்ல வாய்ப்பை வாங்கி கொடுத்துச்சு.
இவ்வாறு அவர் பேசினார்.
மீண்டும் இணையாத கூட்டணி:
பொல்லாதவன் படத்தில் சதீஷ் என்ற கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருப்பார். இந்த படத்தில் சந்தானத்தின் நகைச்சுவைகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதன்பின்பு, வெற்றிமாறன் இயக்கிய எந்த படத்திலும் சந்தானம் நடித்தது இல்லை. சந்தானமும் நாளடைவில் கதாநாயகனாக மாறி தற்போது கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.
வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன் ஒரு இளைஞனும், காணாமல் போகும் அவனது இரு சக்கர வாகனமும், அதை அவன் எப்படி கண்டுபிடிக்கிறான் என்பதையும் மையமாக கொண்டு உருவான திரைப்படம் ஆகும். காதல், ஆக்ஷன், ரவுடிசம் என அனைத்தும் கலந்து இந்த படம் உருவாகியிருக்கும். இந்த படம் தனுஷிற்கும் அவரது திரை வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
வெற்றிமாறன் புத்தகங்களை தழுவி வரலாற்றை மையமாக கொண்டு புரட்சிகரமான மற்றும் ஆக்ஷன் திரைப்படங்களை தற்போது இயக்கி வருகிறார். சந்தானம் காமெடி வகையிலான படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனால், இவர்கள் கூட்டணி இணைவது சாத்தியமற்றதாக அமைந்து வருகிறது.
2007ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தனுஷ், சந்தானம், கருணாஸ் ஆகியோருடன் டேனியல் பாலாஜி, கிஷோர், ரம்யா ஆகியோரும் நடித்திருப்பார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருப்பார். விடி விஜயன் எடிட்டிங் செய்திருப்பார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருப்பார். குரூப் கம்பெனி சார்பில் கதிரேசன் இந்த படத்தை தயாரித்திருப்பார்.





















