Siva Manasula Sakthi: ‘மோதலும் காதலும்’ .. உருவாகிறதா சிவா மனசுல சக்தி 2 ஆம் பாகம்? - இயக்குநர் சொன்ன பதில்..!
சிவா மனசுல சக்தி படத்தின் 2 ஆம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் இதுகுறித்து பதிலளித்துள்ளார்.
சிவா மனசுல சக்தி படத்தின் 2 ஆம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் இதுகுறித்து பதிலளித்துள்ளார்.
சிவா மனசுல சக்தி
90’ஸ் கிட்ஸ்களுக்கு விஜய் நடித்த குஷி படத்திற்கு மீண்டும் ஒரு யூத் ஃபுல்லான மாஸ் படமாக அமைந்தது தான் “சிவா மனசுல சக்தி”. கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி இப்படம் வெளியாகியது. ஊடக உலகின் முன்னணி நிறுவனமான விகடனின் முதல் வெள்ளித்திரை படைப்பாக இப்படம் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அறிமுக இயக்குநர் ராஜேஷ் இயக்கிய இப்படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாகவும், அறிமுக நடிகையாக அனுயாவும் அறிமுகமாகி இருந்தனர். மேலும் சந்தானம், ஊர்வசி, பேராசிரியர் ஞானசம்பந்தம், ஷகீலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த நிலையில், நா.முத்துக்குமாரின் வரிகளில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகியது. சிவா மனசுல சக்தியைப் பொறுத்தவரை படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஹீரோ, ஹீரோயின் இடையேயான முட்டல், மோதல், காதல் என கலகலப்பாகவே செல்லும். நடுநடுவே சந்தானத்தின் கலக்கான காமெடி காட்சிகள் என அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு படத்தை ராஜேஷ் கொடுத்திருந்தார்.
படத்தின் வெற்றிக்கு வசனங்கள் மிகப்பெரிய அளவில் உதவியது என்றே சொல்லலாம். வானத்துல போற விமான சவுண்ட் வச்சே அது என்ன விமானம்ன்னு சொல்வேன் என சீன் போடும் சக்தி (அனுயா) ஆகட்டும், இந்த பக்கம் நான் ஆர்மில இருக்கிறதால எப்பவாச்சும்தான் ஊருக்கே வரமுடியும் என பொய் சொல்லும் சிவா (ஜீவா) ஆகட்டும் எல்லாம் ஒரே ஜாலி ரகளை தான். “அவ போய் ஆறு மாசம் ஆகுது, நல்லவங்க பேச்சு ரீச் ஆகும்.. என்ன கொஞ்சம் லேட் ஆகும், ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி, மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்” என படம் நெடுக டெம்ப்ளேட் டயலாக்குகளை அள்ளித் தெளித்திருப்பார்.
இரண்டாம் பாகம் உருவாகிறதா?
இந்த படத்திற்கு பின்னர் பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமார், மிஸ்டர் லோக்கல் என பல படங்களை ராஜேஷ் எடுத்தாலும், அந்த படமும் சிவா மனசுல சக்தி படத்திற்கு இணையாக இல்லை என ரசிகர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க தொடங்கினர். இந்நிலையில் சிவா மனசுல சக்தி படத்தின் 2 ஆம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ராஜேஷ், ‘ஜீவா கிட்ட பேசும் போதெல்லாம் நாம் இருவரும் மறுபடியும் இணைந்து ஒரு படம் பண்ணலாம்ன்னு பேச்சு வரும். அவரும் ஆர்வமா இருக்கிறார். ஆனால் இது சிவா மனசுல சக்தி படத்தின் 2 ஆம் பாகமாக இருக்காது. ஒரு பக்கம் ஹன்சிகாவை வைத்து வெப் சிரீஸ் இயக்கி முடித்துள்ளேன். மறுபக்கம் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் படம் இயக்கி வருகிறேன். இப்படியான நிலையில் ஜீவாவிடம் பேசியது தான் இப்படி தகவலாக பரவியிருக்கும்’ என ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.