Ponniyin Selvan 2 Review: நந்தினியின் சூழ்ச்சியும்... சோழர்களின் பேரெழுச்சியும்! என்ன ஆனார் கரிகாலன்? பொன்னியின் செல்வன்-2 முதல் விமர்சனம் இதோ!
Ponniyin Selvan 2 Review in Tamil: தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் பாகம் 2 இன்று வெளியாகியுள்ளது. அதன் விமர்சனத்தை இங்கு காணலாம்.
Maniratnam
Vikram, Karthi, Jayam Ravi, Aishwarya Rai Bachchan ,Trisha Krishnan, Aishwarya Lekshmi
Ponniyin Selvan 2 Review in Tamil: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வெளியாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2 ஆம் பாகத்திற்கான விமர்சனத்தை இங்கு காணலாம்.
முதல் பாகம் கதை
‘பொன்னியின் செல்வன்’ நாவலின் கதை வந்தியத்தேவன் கதாபாத்திரம் வழியாக முதல் பாகத்தில் கடத்தப்பட்டிருந்தது. கடம்பூர் மாளிகையில் நடக்கும் சதித் திட்டத்தை அறிந்துகொள்ளும் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், தன் உற்ற தோழனான வந்தியத்தேவன் மூலம் அங்கு நடக்கும் விஷயங்களை தன் தந்தை சுந்தர சோழரிடமும் சகோதரி குந்தவையிடமும் தெரிய வைக்கிறான்.
இருவரையும் சந்திப்பதற்குள் சோழ தேசத்தின் சதிகாரர்கள் கும்பலைச் சேர்ந்தவர்கள் கண்ணில் எல்லாம் வந்தியத்தேவன் சிக்குகிறான். குந்தவையின் ஆணைக்கிணங்க அருண்மொழிவர்மனை அழைத்து வர அவன் இலங்கைக்கு செல்கிறான். மறுபக்கம் கண்டராதித்தரின் மகன் மதுராந்தகன், தன் தந்தையின் விருப்பத்தையும், தாயின் ஆணையையும் மீறி மணிமுடிக்காக காத்துக் கொண்டிருக்கிறான். சோழ நாட்டின் நிதியமைச்சரான பெரிய பழுவேட்டரையரும் சிற்றரசர்களும் அவருக்கு துணையாக நிற்கின்றனர்.
பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினி, பாண்டிய ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சோழ நாட்டுக்கு எதிராக சதியில் இறங்குகிறாள். அதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள சோழ இளவரசன் அருண்மொழிவர்மனை சிறைபிடித்து வர பெரிய பழுவேட்டரையரால் ஆணையிடப்படுகிறது. தவறுதலாக வந்தியத்தேவனை எதிரிகள் அருண்மொழி என கருதி சிறைபிடித்து செல்வார்கள். அவனைக் காப்பாற்ற நடுக்கடலில் செல்லும் கலத்திற்கு அருண்மொழிவர்மன் செல்கின்றான். அங்கு நடக்கும் கலவரத்தில் கடலில் கலம் மூழ்குகிறது. இறுதியில் சோழர்களில் யாருக்கு ஆபத்து நடந்தது என்ற கேள்விகளுடன் முதல் பாகம் முடிந்தது.
இரண்டாம் பாகம்
நந்தினி - ஆதித்ய கரிகாலன் தொடர்பான சிறு வயது காதல் காட்சிகளுடன் படம் தொடங்குகிறது. பின் முதல் பாகத்தைப் போல கமல்ஹாசன் பின்னணி குரலுடன் இந்த பாகத்திற்கான கதை சொல்லப்படுகிறது.
கடலில் ஊமை ராணியால் அருண்மொழிவர்மன் காப்பாற்றப் படுகிறான். ஆனால் அவர் இறந்து விட்டதாக தகவல் பரப்பப்படுகிறது. ஒருபுறம் வீரபாண்டியனின் சாவுக்கு பழிதீர்க்க பாண்டிய ஆபத்துதவிகள் உதவியுடன் சோழ பேரரசை அழிக்க நந்தினி நினைக்கிறாள். அதற்கு பௌர்ணமி தினம் நாளாக குறிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தங்களுக்கு ஆபத்து இருப்பது தெரிந்தும் ஆதித்ய கரிகாலன் நந்தினியை சந்திக்க கடம்பூருக்கும், அருண்மொழிவர்மன் தஞ்சைக்கும் செல்கிறார்கள்.
மறுபக்கம் ராஷ்ட்ரகூட மன்னன் கோத்திகன் தஞ்சையை தாக்க ஒரு பெரும்படையை திரட்டுகிறான். அதற்கு கண்டராதித்தரின் மகன் மதுராந்தகனின் உதவி நாடப்படுகிறது. சோழ நாட்டை உடைக்க நினைக்கும் இவர்களின் எண்ணம் நிறைவேறியதா? .. உண்மையிலேயே ஊமை ராணி யார்?... அவர் ஏன் அருண்மொழியை காப்பாற்றினார்? ஆதித்ய கரிகாலன் , அருண்மொழி நிலைமை என்ன?.. நந்தினியின் பின்புலம் என்ன? சோழ அரசு என்ன ஆனது?.அருண்மொழி, மதுராந்தகன் இருவரில் யார் பட்டத்து இளவரசர் ஆகிறார்? என்ற அனைத்து கேள்விகளுக்கு எல்லாம் 2 ஆம் பாகம் பதிலளிக்கிறது.
படம் எப்படி?
70 ஆண்டு கால முயற்சியில் இப்படி ஒரு வரலாற்று காவியம் முதல்முறையாக கண்முன்னே சாத்தியப்படுத்தப் பட்டுள்ளது. அதற்காக அனைத்து நடிகர்களும் தங்கள் முழு உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். சொல்லப்போனால் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளார்கள். குறிப்பாக ஐஸ்வர்யா ராய் கண்களிலேயே மிரட்டுகிறார். ஆனால் இரண்டாம் பாகம் திரைக்கதை சற்று மெதுவாக செல்வதால் படம் பார்ப்பவர்களுக்கு சற்று அயற்சியை ஏற்படுத்துகிறது. 3 மணி நேர படத்தில் முதல் பாகத்தில் எழுந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்து விட வேண்டும் என்ற முனைப்பு தெரிகிறது. சில இடங்களில் மட்டும் காட்சிகள் வேகமாக செல்கிறது.
வந்தியதேவன் - குந்தவை, ஆதித்ய கரிகாலன் - நந்தினி இடையேயான உரையாடல்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் சில இடங்களில் மேஜிக் நிகழ்த்தி இருக்கிறார்.
சில காட்சிகள் புல்லரிக்க செய்யும் அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளது. இப்படி சவால் நிறைந்த ஒரு நாவலை இரண்டு பாகங்களாக படமாக எடுக்கும்போது நிறை, குறைகள், நாவல் படித்தவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போவது போன்றவை இருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவின் மணிமகுடமாக போற்றப்படும் பொன்னியின் செல்வன் நிச்சயம் அனைவரும் காண வேண்டிய காவியத்தில் ஒன்று.
நிறை, குறைகள் தாண்டி இத்தனை ஆண்டு தமிழ் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களின் கனவை இந்தப் படம் நிறைவேற்றியுள்ளதற்காகவே குடும்பமாக திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கலாம்.