BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கருத்துக் கூற முடியாது. ஆனால் பெண்கள் மனதை விஜயின் நடவடிக்கை நிச்சயம் பாதிக்கும் - வினோஜ் செல்வம்.

"ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் கொடுப்பதாக வாக்குறுதி தரும் விஜய்க்கு, தங்கம் விலை என்ன என்பது தெரியுமா..?" என்று பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார். சர்க்கார் படத்தில் இலவச பொருட்களை தூக்கி போட்டு உடைத்தவர் இலவச திட்டங்கள் குறித்து இப்போது வாக்குறுதி வழங்குவது ஏன் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 11ஆம் தேதி திருச்சிக்கு வருகை தர உள்ளது குறித்து பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் சென்னை, தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
பெண்கள் மனதை பாதிக்கும்
அப்போது பேசிய அவர், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கருத்துக் கூற முடியாது. ஆனால் பெண்கள் மனதை விஜயின் நடவடிக்கை நிச்சயம் பாதிக்கும்.. அதெல்லாம் அவ்வளவு worth இல்லை என விஜய் கூறுகிறார். ஆனால் அது worth ஆ இல்லையா என்பது தேர்தல் முடிவில்தான் விஜய்க்கு தெரியும்.
விஜய் சர்க்கார் படத்தில் அரசின் இலவசப் பொருட்களைத் தூக்கிப் போட்டு உடைத்தார். அவர் அறிவித்த 'சூப்பர் சிக்சர்' எனும் வாக்குறுதிகள் ஒருவகையான லாட்டரியின் பெயர். லாட்டரியுடன் ஏற்கனவே விஜயக்கு பல தொடர்புகள் உண்டு. லாட்டரி , சூதாட்டம் போலதான் விஜயின் அரசியலும் உள்ளது.
நாட்டை எப்படி ஒழுங்குபடுத்த முடியும்..?
ரஜினி அஜித் போன்ற பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். ஆனால் தனது ரசிகர்களை கூட கூட்டத்தில் ஒழுங்குபடுத்த முடியாதவராக விஜய் உள்ளார் . இவரால் நாட்டை எப்படி ஒழுங்குபடுத்த முடியும்..?
பக்குவமற்ற கட்சி தவெக. ஒரு பவுன் தங்கம் விலை என்ன என விஜய்க்கு தெரியுமா..? தாலிக்கு தங்கம் திட்டத்தில் 1 பவுன் எப்படி வழங்க முடியும்.... ஊடகங்களின் கவனத்தை பெற வக்குறுதியை அறிவித்திருப்பார் விஜய்.
நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழக மக்களுக்கு திருச்சியில் பல திட்டங்களை அர்ப்பணிக்க உள்ளார். திருச்சி நிகழ்வில் திமுகவின் அவல ஆட்சியை மக்களுக்கு எடுத்துரைப்பார். தமிழக மக்களுக்கு தேவையான இரட்டை எஞ்சின் அரசை பிரதமர் வழங்குவார். இலவச கலாசாரத்தில் இருந்து உண்மையான வளர்ச்சிப் பாதையில் செல்லும் அரசு அமைய மாபெரும் பொதுக்கூட்டமாக திருச்சி கூட்டம் அமையும்.’’
இவ்வாறு வினோஜ் பி செல்வம் தெரிவித்தார்.
























