விஜய், அஜித்துக்கு இப்படித்தாங்க கதை சொன்னேன்.. சுவாரஸ்யம் பகிர்ந்த பிரபல இயக்குநர்..
விஜய், அஜித்துக்கு கதை சொன்னது எப்படி என்பது குறித்து சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் பேரரசு.
விஜய், அஜித்துக்கு கதை சொன்னது எப்படி என்பது குறித்து சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் பேரரசு.
சிவகங்கை மாவட்டத்துல இருந்து சினிமாவுக்கு வந்தவன் நான். சினிமா மேல தீராத காதல் இருந்தது. இந்த காதல்தான் என்னை சென்னைக்கு அழைச்சிட்டு வந்தது. பாரதிராஜா, பாக்யராஜ் சார்கிட்ட உதவி இயக்குநரா சேர அலைஞ்சேன். சிலரை பார்க்குறதே பெரும்பாடா இருந்தது. அப்போதான் ராமநாரயணன் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை சேர முடிஞ்சது. கிட்டதட்ட பதினைஞ்சு வருஷம் சினிமால இருந்துட்டுதான் என்னோட முதல் படத்தை இயக்குனேன் என்று தனது திரைவாழ்வின் ஆரம்பத்தை விவரித்தார் பேரரசு.
இவர் ஊர் பெயர்களிலேயே படம் எடுப்பார். திருப்பாச்சி (2005), சிவகாசி (2005), திருப்பதி (2006), தர்மபுரி (2006), பழனி (2008), திருவண்ணாமலை ஆகிய படங்கள் இவர் இயக்கியவை.
திருப்பாச்சி, சிவகாசி விஜய் நடிப்பில் மெகா ஹிட் அடித்த படங்கள்.
இவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:
விஜய் சாருக்கு கதை சொல்லப் போனால். அவர் முழுசா அதைத் தாண்டி வேறெதுவும் எங்கேஜ் பண்ணமாட்டார். ஆனால் அஜித் சாரிடம் நான் கதை சொல்லப் போனது வித்தியாசமான அனுபவம். முதல் நாள் நான் கதை சொல்லப் போனப்ப அவர் வீட்டுக்குத் தான் போயிருந்தேன். நான் போய் அமர்ந்தவுடன் அவரும் வந்தார். என்ன சாப்பிடுகிறீர்கள் டீயா, காஃபியா என்றார். நான் டீ என்றேன். சரி யாரேனும் வேலைக்காரர்களை கூப்பிட்டு டீ கொண்டுவரச் சொல்வார் என்று நினைத்தேன். அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து போனார். சரி உள்ளே போய் சொல்லிட்டு வருவார் போல என நினைத்தேன். ஆனால் அவர் உள்ளே சென்று 5 நிமிடங்கள் ஆகியும் வரவில்லை. பக்கத்தில் கிச்சன் இருப்பதுபோல் இருந்தது. உடனே நானும் கிச்சனுக்குள் எட்டிப் பார்த்தேன். அஜித் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. சார் என்ன சார் நீங்க பால் காய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. எனக்கு டீ எல்லாம் வேண்டாம் என்றேன். நீங்க டீ கேட்டீங்கள போங்க டீ கொண்டு வரேன்னு சொன்னார். எனக்கு நடுக்கமாயிடுச்சு. நானும் இங்கேயே நிற்கிறேன் என்றேன். சரி என்று புன்னகைத்தார். பாலை காய்ச்சினார். டீ டிக்காஷன் போட்டார். இரண்டு கப் டீ தயார் செய்து எனக்கொரு கப் கொடுத்தார். மீண்டும் ஹாலுக்கு வந்தோம். வந்ததும் நிறைய பேசினார். படங்கள் பற்றி நிறைய பேசினோம். ரொம்ப நேரம் சென்றுவிட்டது. அப்புறம் தான் நான் அவரிடம் சார் கதை என்று ஆரம்பித்தேன். இன்னிக்கு வேணாம் இன்னொரு நால் கேப்போம் என்றார். சரியென்று கிளம்பிவிட்டேன்.
அப்புறம் இன்னொரு நாள் நான் அவருக்கு தொடர்பு கொண்டு கேட்டேன். சரி ஹோட்டலுக்கு வாங்க என்று ஒரு ஹோட்டலைக் குறிப்பிட்டார். நான் அங்கு சென்றேன். அங்கு அவரிடம் பேசிக் கொண்டே திருப்பதி வந்தா திருப்பம்.. தீப்பொறி எல்லாம் பறக்கும் என்று படத்தின் ஓப்பனிங் சாங் இதுதான் என்று பாடிக் காண்பித்தேன். ரொம்ப குஷியாகிட்டார். எனக்கு திருப்தியா இருக்கு. கதையை இன்னொரு நாள் கேட்கிறேன் என்று கூறிச் சென்றார். என்னடா இது இரண்டு முறை கதை சொல்ல முடியவில்லையே என்று கவலையில் இருந்தேன்.
திரும்ப அஜித் சார் ஆஃபிஸில் இருந்து ஃபோன். வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார். வீட்டில் வைத்து கதை சொன்னேன். லேடீஸ் சென்டிமென்ட் கதை சார் ஹிட்டாயிடும் என்று சொன்னார். அப்புறம் தான் புரிந்தது. முதலில் சில சந்திப்புகளை நடத்தி ஹீரோ, டைரக்டர் என்ற இறுக்கங்களை எல்லாம் உடைத்து சகஜமாகிவிட்டு கதை கேட்க வேண்டும் என்பது அஜித் சாரின் ஸ்டைல் என்று.
அப்படித்தான் திருப்பதி படம் உருவாச்சு.
இவ்வாறு பேரரசு தெரிவித்தார்.