Director Perarasu on Vetrimaaran: ராஜராஜ சோழன் சர்ச்சை.. போலி சாமியாரை விட போலி நாத்திகன் ஆபத்தானவன்.. வெற்றிமாறனுக்கு பேரரசு பதிலடி!
ராஜராஜ சோழனை இந்து அரசனாக மாற்றிவிட்டதாக கூறிய வெற்றிமாறனுக்கு இயக்குநர் பேரரசு பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜராஜ சோழனை இந்து அரசனாக மாற்றிவிட்டதாக கூறிய வெற்றிமாறனுக்கு இயக்குநர் பேரரசு பதிலடி கொடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாளை அவரது கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா அண்மையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “ சினிமா என்பது மக்களை மிக எளிமையாக சென்றடையக் கூடிய கலை வடிவம் என சொல்லலாம். திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்த பின்பு தான், இலக்கிய துறையினர் “கலை கலைக்காக மட்டும் தான்..சினிமாவுக்கானது இல்லை” என கூறினர்.
#vetrimaaran தமிழ் திரைவுலகில் திராவிடத்தின் பங்கு👏🏻👏🏻 நாளை நடக்க இருந்த சங்கித்தனம் #vetrimaaran 🥳 pic.twitter.com/86aUmYcpVe
— பொய்-ன் செல்வன் (@pkjc1319) October 1, 2022
மேலும், “ கலையில் அழகியல் என்பது மிக முக்கியமானது. ஆனால் மக்களை சென்றடையாமல் எந்த கலையும் முழுமையடையாது. இந்த கலையை சரியாக நாம கையாளணும். அப்படி கையாள தவறும்போது தான் நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது சினிமாவிலும் எடுக்குறாங்க. இதனை நாம காப்பாத்திக்கணும். அதற்கு அரசியல் தெளிவோடு இருந்து விடுதலைக்காக நாம போராடணும். அக்டோபர் 2 ஆம் தேதி நடக்கவிருந்த நிகழ்வே முன்னுதாரணம் என நினைக்கிறேன். அதற்காக நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்” என வெற்றி மாறன் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து H. ராஜா வெற்றிமாறனை தற்குறி என விமர்சித்த நிலையில், தற்போது இயக்குநர் பேரரசும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து பேரரசு பேசும் போது, “ இந்து மக்களை இழிவு படுத்துவதையே இப்போது சிலர் வேலையாக வைத்திருக்கிறார்கள். அதை எதிர்த்து கேள்வி கேட்டால் எங்களை மத வெறியர் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் நீங்கள் யார்? உங்களுக்கு சாமி பிடிக்கவில்லை என்றால் சாமி கும்பிடாதீர்கள். வெற்றிமாறன் சார் ராஜராஜ சோழனை இந்துவாக காட்டுகிறார்கள் என்று பேசியிருக்கிறார்.. அப்படியானால் அவர் என்ன கிறிஸ்துவரா, முஸ்லீமா?. ஒரு காலத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து போது இந்தியா தனித்தனி மாகாணமாக இருந்தது. இப்போது அவையெல்லாம் ஒன்றாக்கப்பட்டு, இந்தியா என்ற ஒற்றை நாடாக இருக்கிறது.
அதே போலத்தான் இந்து மதமும். சைவம், வைணவம் என சிதறிக்கிடந்த இந்திய மதங்களை ஒரே இந்து மதமாக ஒருங்கிணைத்தான் ஆங்கிலேயன். இங்கு சாமி கும்புடுகிறவன் சிவன், பெருமாள் என எல்லா கடவுள்களையும் கும்பிடுகிறான். இதில் சாமி கும்பிடாதவர்களுக்கு என்ன பிரச்னை...? உங்களுக்குத்தான் பிடிக்கவில்லை என்றால் ஏன் பேசுகிறீர்கள். இதை சாமி கும்பிடுகிறவன்தான் பேச வேண்டும்.
போலி நாத்திகவாதிகள் ஆபத்தானவர்கள்
எவன் ஒருவன் பிற மதத்தை புண்படுத்துவது போல பேசுகிறானோ அவன் மனிதனே இல்லை. 100 சதவீத நாத்திகன் என்றால் எந்த கடவுளும் இல்லை என்று சொல்ல வேண்டும். போலி சாமியார்களை விட போலி நாத்திகவாதிகள் ஆபத்தானவர்கள். அவர்களால் நாட்டிற்கு நாசம்.
எவன் ஒருவன் ஒரு மதத்தை விடுத்து பிற மதத்தை சாடுகிறானோ அவன் போலி நாத்திகன். இந்துவாக இருப்பதில் எனக்கு பெருமை. இந்துவை சைவர், வைணவர் என பிரிப்பதில் உங்களுக்கு என்ன சந்தோஷம். சிலர் இந்து மதமே இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியானால் இந்தியாவே இல்லை என்றுதான் அர்த்தம். கலைஞரின் இயற்பெயர் தட்ஷிணா மூர்த்தி அதனால் அவர் தமிழ்நாட்டில் வாழவில்லை என்று சொல்வீர்களா? ஆங்கிலேயர்கள் நல்ல எண்ணத்தில் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து இந்து என பெயர் வைத்து விட்டான். அவனுக்கு இருக்க கூடிய நல்லெண்ணம் உங்களுக்கு இல்லை அல்லவா? ” என்று காட்டமாக பேசியிருக்கிறார்.