Director Mysskin: ‘விஷாலுக்கு ஈகோ அதிகம்.. படம் பண்ணலாம்ன்னு நான் கெஞ்ச மாட்டேன்’ .. இயக்குநர் மிஷ்கின் ஆவேசம்..!
நடிகர் விஷாலுடன் சண்டை என்றாலும், அவரை ரொம்ப மிஸ் செய்கிறேன் என அடியே படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷாலுடன் சண்டை என்றாலும், அவரை ரொம்ப மிஸ் செய்கிறேன் என அடியே படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள அடியே படத்தில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். ஹீரோயினாக கௌரி கிஷன் நடித்துள்ள நிலையில், வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் வருகிறார். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள அடியே படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார்.
இயக்குநருக்கு முழு உரிமை
நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒரு இயக்குநருக்கு யாரையும் விமர்சித்து, கேலி பண்ணி காட்ட முழுக்க முழுக்க இயக்குநருக்கு உரிமை உண்டு. என்னை நீ நிர்வாணமாக காட்டினாலும் நான் நடிப்பேன். தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் யாருடைய பெயரையாவது ஒரு கேரக்டருக்கு வச்சிருவாங்க. அவங்க இயக்குநர் மேல கேஸ் போட்டுருவாங்க. அப்படி எந்த இயக்குநரும் வேணும்ன்னு நினைச்சி பண்ணுறது இல்ல.
ஜி.வி.பிரகாஷ்குமார் ரொம்ப பழகுவதற்கு இனிமையானவர். அவரை இயக்குநர் வசந்தபாலன் தான் வெயில் படத்திற்கு இசையமைக்கிறார் என அறிமுகம் செய்தார். நான் என்ன ஏதென்று கேட்காமல் முதுகில் அடி வைத்தேன். அப்படித்தான் எங்கள் நட்பு தொடங்கியது. நிறைய இசையமைப்பாளர்களுக்கு படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அந்த வகையில் ஜி.வி.பிரகாஷ் தவிர்க்க முடியாத நடிகராக மாறி விட்டார். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.
ஒரு கதை எங்கு வெற்றி பெறும் என்றால், இந்த படம் பண்ண எவ்வளவு ஆகும்பா என கேட்கும் இடத்தில் தான் உள்ளது. அப்படித்தான் அடியே படத்தின் தயாரிப்பாளரும் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். ஒரு கதை எழுத ஒரு வருடம் ஆகிறது. அதனால் நான் எந்த படங்களையும் பார்க்க மாட்டேன்.
விஷால் பற்றி உருக்கமான பேச்சு
நான் இந்த படத்தில் ‘பொறுக்கி’ என வசனம் பேசியுள்ளேன். நடிகர் விஷாலிடம் மிஷ்கினை பற்றி என்ன நினைக்கிறீங்க என கேட்டால், ‘நான் துரோகத்தை மறக்க மாட்டேன்’ என சொல்கிறான். அப்படி என்ன துரோகம் பண்ணேன் என தெரியவில்லை. விஷால் என் இதயத்துக்கு நெருக்கமானவன். நாங்க சண்டை போட்டுகிட்டோம். அவரை ரொம்ப மிஸ் பண்றேன். விஷாலுக்கு ஈகோ அதிகம். அதனால் அவன் என்னை மிஸ் பண்ண மாட்டான். நான் கோபத்தில் சொன்ன வார்த்தையை எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
விஷால் ரொம்ப இனிமையானவன். அவனுடன் நான் பணியாற்றாவிட்டாலும் எங்கோ ஒரு இடத்தில் இருந்து விஷால் படங்கள் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். உடனே ஊடகத்துல. ‘விஷாலுக்கு ஐஸ் வைக்கிறேன்’ எழுதுவாங்க. அப்படி எல்லாம் இல்லை. நான் விஷாலுடன் சத்தியமா படம் பண்ண மாட்டேன். போய் நின்னு கெஞ்சலாம் மாட்டேன் என மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
கடந்த 2020 ஆம் ஆண்டு துப்பறிவாளன் 2 படம் தொடர்பாக மிஷ்கின் - விஷால் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. விஷால் ஒரு பொறுக்கி என மிஷ்கின் அப்போது கடுமையாக சாடினார். அந்த படம் பாதி ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் மிஷ்கினை நீக்கி விஷாலே இயக்குநர் பொறுப்பை ஏற்றார், மேலும் மிஷ்கினால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விஷால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.