Mysskin On Thalapathy 67: தளபதி 67 படத்தில் இணைகிறாரா மிஷ்கின்.. தீயாய் பரவும் போட்டோ.. வெறியேறும் ரசிகர்கள்!
தளபதி 67 படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கின் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 67 படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கின் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே எதிர்பார்ப்பு அதிகம். தற்போது 'வாரிசு' திரைப்படத்தை முடித்திருக்கும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் அவரது ரசிகர்களால் ‘தளபதி 67’ என்று அழைக்கப்படுகிறது. பெயர் வைக்கப்படாத இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில், இந்தப்படத்தில் நடிகை த்ரிஷா விஜயின் மனைவியாக நடிக்க இருப்பதாகவும், கீர்த்தி சுரேஷையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகின.
லோகேஷிற்கு மிகவும் பிடித்தமான நடிகர் மன்சூர் அலிகான் இந்தப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் என்பதை லோகேஷே பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி இருந்தார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பிரித்விராஜ், சமந்தா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பேட்டி ஒன்றில் த்ரிஷாவிடம் இது பற்றி கேட்கப்பட்ட போது, அவர் கொடுத்த பதில் அதில் அவர் கமிட் ஆகியிருப்பது போலவே தெரிந்தது.
அதே போல ‘கைதி’ ‘மாஸ்டர்’ ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் இணை கதாசிரியராக பணியாற்றிய ரத்னகுமார் இந்தப்படத்திலும் லோகேஷூடன் இணைந்து பணியாற்றுகிறார். இவர்களுடன் விஜயின் காமெடி சம்பந்தமான காட்சிகள் நன்றாக வருவதற்காக ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குநர் தீரஜூம் இணைந்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இப்படம் குறித்தான அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த அப்டேட்டின் படி, இந்தப்படத்தில் பிரபல நடிகரான இயக்குநர் மிஷ்கின் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் தொடங்க இருக்கிறது.
முன்னதாக, இந்தப்படம் குறித்தான சில சுவாரஸ்ய தகவல்களை PinkVilla இணையதளம் வெளியிட்டு இருந்தது. அந்தத் தகவல்களின்படி, “தளபதி 67 என்று அழைக்கப்படும் இந்தப்படத்தில் நடிகர் விஜய் 40 களில் வரும் கேங்ஸ்டர் வேடத்தில் வருகிறாராம். ஃப்ளாஷ் பேக்கில் வரும் காட்சிகளில் இளவயது விஜயை பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பெரும்பான்மையான காட்சிகள் 40 களில் நடப்பது போலத்தான் காட்சிப்படுத்த பட இருக்கிறது. அதே போல விஜய் இந்தப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பாட்ஷா படத்தில் ரஜினி வருவது போல வர இருக்கிறாராம். விஜயும் அவரின் இன்னொரு பக்கத்தை இந்தப்படத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறாராம்.
கேங்கஸ்டர்கள் மற்றும் ஏஜண்டுகளை வைத்து தனது யூனிவர்ஸை லோகேஷ் கட்டமைத்து வரும் நிலையில், இந்தப்படத்தின் வாயிலாக விஜயை அதற்குள் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறாராம். கைதி, விக்ரம் படத்தில் நடித்த நடிகர்களை இந்தப்படத்திலும் நடிக்க வைப்பதற்கான வேலைகள் போய்க்கொண்டிருக்கிறதாம்.