'10 நாட்களில் "தளபதி 67" அப்டேட் வரும்' - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி
”10 நாட்களில் தளபதி 67 அப்டேட் வரும். அது ரெகுலராக வரும். படம் வெளியாவது பொங்கலுக்கா? தீபாவளிக்கா? என்பது இன்னும் முடியவில்லை. சூட்டிங் நடைபெற்று வருகிறது.”
கோவை துடியலூர் பகுதியில் தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு வருமான வரித் துறை சார்பாக இளம் தொழிலதிபர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருமான வரித் துறை தலைமை ஆணையர் பூபால் ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 17 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் ,அதில் இளம் வயதில் சிறப்பாக பணிபுரிவதும், வரி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் உள்ளடக்கிய செயல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும் விருது வழங்கப்பட்டது.
விருதை வாங்கிய பின்பு மேடையில் பேசிய லோகேஷ் கனகராஜ், ”வருமான வரித்துறை என்றாலே முதலில் பயம் தான் வருகிறது. நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போது பயம் ஏற்பட்டது. பின்னர் விருது குறித்து தெரிவித்த பிறகு, மகிழ்ச்சியாக இருந்தது. வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோளாக செலுத்தக்கூடிய வருமான வரி எங்கு செல்கிறது என்று தெரிந்தால் சுமையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் செயலாக மாறும். அதை விழிப்புணர்வாக கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், “நாம் கட்டும் வரி எங்கு செல்கிறது என்று தெரிந்தால் அதை சுமையாக பார்க்காமல் மகிழ்ச்சியாக செலுத்துவோம். எனவே அது குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளேன். வாரிசு படம்வெளியாவதை ஒட்டி தளபதி 67 அப்டேட் எதும் கொடுக்காமல் இருந்தோம். தற்போது படம் வெளியாகிவிட்டது. இன்னும் 10 நாட்களில் தளபதி 67 அப்டேட் வரும். அதன் தொடர்ச்சியாக அப்டேட்கள் வரும். படம் வெளியாவது பொங்கலுக்கா? தீபாவளிக்கா? என்பது இன்னும் முடியவில்லை. சூட்டிங் நடைபெற்று வருகிறது.
சினிமாவில் எல்ல படங்களும் ஓட வேண்டும். எல்லா ரசிகர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு தமிழகம் என இரண்டில் தமிழ்நாடு என்று தான் அழைக்க வேண்டும். ரசிகர்கள் பொறுப்பு உணர்ந்தால் போதும். உயிர் போகும் அளவிற்கு சினிமாவில் ஒன்றுமில்லை. சினிமாவை பொழுதுபோக்கிற்காக பாருங்கள். படத்தை பார்த்து விட்டு சந்தோஷமாக வீடு செல்ல வேண்டும். உயிரை கொடுக்கும் அளவிற்கு ஏதும் இல்லை. உயிரிழக்கும் அளவிற்கான கொண்டாட்டம் தேவையில்லை என்பது தான் எனது கருத்து” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்