Ghilli: செமி ஃபைனல் விளையாடலையா? கில்லி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த விஷயம்!
20 ஆண்டுகள் கழித்து கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
கில்லி படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றின் விளக்கத்தை 20 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இயக்குநர் தரணி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ப்ளாக்பஸ்டர் கில்லி:
கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் “கில்லி”. இந்த படத்தை தரணி இயக்கியிருந்தார். கில்லி படத்தில் திரிஷா, பிரகாஷ்ராஜ், தாமு, நாகேந்திர பிரசாத், ஆஷிஷ் வித்யார்த்தி, ஜானகி சபேஷ், ஜெனிஃபர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த கில்லி படம் ரிலீசான காலக்கட்டத்தில் ரூ.50 கோடி வசூலித்து, தமிழ் சினிமாவில் இவ்வளவு வசூலை எட்டிய முதல் படம் என்ற பெருமையை பெற்றிருந்தது.
இதனிடையே 20 ஆண்டுகளுக்கு பிறகு, கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு படையெடுத்து செல்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டரில் பாடல்களுக்கு நடனமாடி புதுப்படங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை கில்லி படத்துக்கு வழங்கியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பின் கில்லி படம் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்துள்ளது.
அரையிறுதி ஆடாமல் எப்படி இறுதிப்போட்டி?
இப்படியான நிலையில் கில்லி படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி இணையவாசிகளால் அடிக்கடி கிண்டல் செய்யப்படும். அதாவது, “மதுரையில் அரையிறுதி போட்டி விளையாட செல்லும் விஜய், போட்டியில் பங்கேற்காமல் பிரகாஷ்ராஜை எதிர்த்து திரிஷாவை அழைத்து சென்று விடுவார். அடுத்த காட்சியில் விஜய்யின் எதிரணி, “மதுரை மேட்சில் மண்ணை கவ்விட்டிங்க போல?” என கேட்க, விஜய் தன் அணியினரிடம் விடு ஃபைனலில் பார்த்து விடலாம் என சொல்லியிருப்பார். அது எப்படி அரையிறுதியில் தோற்று விட்டு ஃபைனல் போக முடியும்?” என்ற கேள்வி கேட்கப்படுவது உண்டு.
இதற்கு பதிலளித்துள்ள இயக்குநர் தரணி, “கபடி தொடரில் போட்டியில் தோற்றாலும் சிறப்பாக விளையாடியதால் இறுதிப் போட்டிக்கு சென்றதாக கூட எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய்யின் தங்கை தன்னுடைய அண்ணன் லீக் மற்றும் செமி ஃபைனலில் விளையாடி ஜெயித்ததாக கோப்பைகளை காட்டும்படி காட்சி இருக்கும். அப்போது செமி ஃபைனலில் ஜெயித்ததாகவே சொல்லப்பட்டிருக்கும். நீங்கள் அந்த காட்சியை நன்றாக கவனித்திருந்தால் புரியும்” என தெரிவித்துள்ளார்.
இதேபோல் நடிகர் நாகேந்திர பிரசாத், “அதாவது ஒருத்தர் வரல.. அதனால நாங்க ஃபைனல் போனோம்ன்னு சொல்லிக்க வேண்டியது தான். நாங்க பட ஷூட்டிங்கின்போதே சொன்னோம். கேட்டதுக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்ற பாணியில் எடுத்துக் கொள்ளலாம்” என அந்த காட்சிக்கு விளக்கமளித்துள்ளார். மேலும், “கில்லி படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகும் போது நான் முதல் நாள் சென்று பார்க்க முடியவில்லை. இப்போது முதல் நாள் ரீ-ரிலீஸ் சென்று பார்த்தேன். இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்திருந்தார்.