திருமணம் நடக்கும் நாளில் போதையில் தூங்கிய வி.கே.ராமசாமி.. தாலி கட்டிய தம்பி.. இப்படி ஒரு சம்பவமா?
இந்த மது குடிப்பவர்கள் ஒரு செட்டாக சேர்ந்து விடுவார்கள். நண்பர்களிடம் தனக்கு 10ம் தேதி திருமணம் என தெரிவிக்கிறார். அதற்கு இன்னும் 3 நாட்கள் இருக்கிறது என நண்பர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மதுவால் பழம்பெரும் நடிகர் விகே ராமசாமிக்கு நடக்கவிருந்த திருமணம் நின்ற கதையை இயக்குநர் பாரதி கண்ணன் தெரிவித்துள்ளார். இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
இயக்குநர் பாரதி கண்ணனின் நேர்காணல் ஒன்றில் கண்ணாத்தாள் படத்தில் இடம்பெற்ற வடிவேலு நடித்த சூனா பானா கேரக்டர் மூலம் காமெடி தாண்டி குடியைப் பற்றி என்ன விஷயம் சொல்ல நினைத்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ மறைந்த நடிகர் விகே ராமசாமியுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் வாழ்க்கையில் மதுவால் நடந்த சம்பவம் ஒன்றை சொல்கிறேன். விகே ராமசாமிக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து குடும்பத்தினர் ஓகே செய்தார்கள். அவருக்கு ஜூன் 10ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாகவே இந்த மது குடிப்பவர்கள் ஒரு செட்டாக சேர்ந்து விடுவார்கள். அந்த வகையில் நண்பர்களிடம் தனக்கு 10ம் தேதி திருமணம் என தெரிவிக்கிறார். 10ம் தேதி தானே அதற்கு இன்னும் 3 நாட்கள் இருக்கிறது என நண்பர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இவர் 8ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு 9ம் தேதி காலை மதுரைக்கு சென்றார். அங்கு நண்பர்களுடன் நன்றாக மது அருந்தி விட்டு போதையில் விகே ராமசாமி தூங்கி விட்டார். 10ம் தேதியும் வந்தது.
அன்று காலை அவர் எழுந்து பார்க்கையில் மணி ஒன்பதே முக்கால் ஆகியிருந்தது. 10 மணிக்கு கல்யாண நேரம் குறிக்கப்பட்டிருந்தது. அவர் இருக்கும் இடத்தில் இருந்து திருமணம் நடக்கும் இடத்திற்கு செல்ல 3 மணி நேரமாகும். பாவிபயல்களா.. என்னுடைய வாழ்க்கை போச்சே என தனது நண்பர்களை திட்டியவாறு வேக வேகமாக கிளம்பி திருமணம் நடக்கும் இடத்திற்கு விரட்டி செல்கிறார்கள். விகே ராமசாமி சரியாக போய் இறங்கும்போது அங்கு ஆசீர்வாதம் நடந்து கொண்டிருக்கிறது.
அதாவது அந்த பெண்ணுக்கு வேறு நபருடன் திருமணம் நடந்து விட்டது. விகே ராமசாமி தம்பி அப்பெண்ணுக்கு தாலி கட்டி விட்டார். அவருக்கு இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியாகி விட்டது. என்னடா இது வாழ்க்கையில் மிகப்பெரிய தப்பு செய்து விட்டோம் என வருத்தப்பட்டார்” என தெரிவித்திருந்தார்.
பாரதி கண்ணன் திரைப்பயணம்
அருவா வேலு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாரதி கண்ணன். தொடர்ந்து கண்ணாத்தாள், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி, திருநெல்வேலி, கரகாட்டகாரி, ஸ்ரீ பண்ணாரி அம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகராக பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சீரியலிலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















